ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
'ஓர் ஆண்டு வாழ்க்கை; 10 ஆண்டுக்கால வழக்கு; ரூ.1000 கோடி ஜீவனாம்சம்' - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெய்தேவ் ஷெராப்பிற்குக் கடந்த 2004ம் ஆண்டு பூனம் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்திருமணம் ஓர் ஆண்டு கூட நிலைக்கவில்லை.
2005ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். 2015ம் ஆண்டு பூனம் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டும், பராமரிப்புத் தொகை கேட்டும் தனித்தனியாக இரண்டு மனுக்களை மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தனது கணவர் தனக்கு ரூ.1000 கோடி கொடுக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுக்கள் இரண்டையும் சேர்த்து விசாரிக்க குடும்ப நீதிமன்றம் முடிவு செய்தது.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பூனம் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து பூனம் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அப்படி இருந்தும் பூனம் தனது விவாகரத்து தொடர்பாக பல முறை சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். இதையடுத்து 2021ம் ஆண்டு இவ்வழக்கை விரைவுபடுத்தும்படி சுப்ரீம் கோர்ட் மும்பை குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
தொழிலதிபர் ஜெய்தேவும் புதிதாக தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தொழிலதிபருக்கு இவ்வழக்கில் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
பூனம் தரப்பில் ரூ.1000 கோடியும், ஜெய்தேவ் வீட்டை வாழ்நாள் முழுக்க பயன்படுத்தும் உரிமை வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அந்தக் கோரிக்கையை நிராகரித்த கோர்ட், ரூ. 1000 கோடி கேட்ட பூனத்திற்கு ஒரே தவணையாக ரூ.10 கோடி கொடுக்க தொழிலதிபர் ஜெய்தேவிற்கு உத்தரவிட்டது.
அந்தத் தொகையை 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது. தனது மனைவி பெங்காலி பாபாவுடன் சேர்ந்து கொண்டு தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக போலீஸில் புகார் செய்துள்ளார்.
அதேசமயம் பூனம் தன்னை கணவன் வீட்டில் கொடுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டி இருக்கிறார். யுனைடெட் பாஸ்பரஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெய்தேவின் கம்பெனி சொத்து மதிப்பு மட்டும் ரூ.68 ஆயிரம் கோடியாகும். எனவேதான் ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பூனம் பகத் கோரிக்கை விடுத்திருந்தார்.




















