செய்திகள் :

கடலூர் வளையன்மாதேவி வேதநாராயண பெருமாள் திருக்கோயில்: காதல், திருமணமாக முடிய அருளும் தலம்!

post image

பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களோடு தொடர்புடைய தலங்கள் நம் தேசத்தில் அநேகம் உள்ளன. அவற்றில் சில முக்கியமான தலங்களை நாம் வழிபட்டு வருகிறோம். அப்படி ஓர் ஆலயம்தான் வளையமாதேவி வேதநாராயண பெருமாள் திருக்கோயில்.

பகவான் வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைச் சம்ஹாரம் செய்தார். இரண்யாட்சனின் மகள்களான மணிமாலையும், முத்துமாலையும் பகவான் விஷ்ணுவின் மகிமையை அறிந்து அவரை நோக்கித் தவம் செய்தனர்.

அதன் பலனாக விஷ்ணுவின் அருள்பெற்ற இருவரும் புண்ணிய நதிகளாக மாறி ஸ்ரீ முஷ்ணம் சேத்திரத்தை ஒட்டி மணிமுக்தா நதி, சுவேதா நதி என்கிற பெயர்களோடு பாய்ந்து பக்தர்களுக்கும் அருள் செய்துவருகின்றனர்.

அவற்றில் மணிமுத்தா நதிக்கரை அருகே அமைந்ததுள்ளது வளையன்மாதேவி திருத்தலம்.

வேதநாராயண பெருமாள்
வேதநாராயண பெருமாள்

தலபுராணம்

காத்யாயனர் என்னும் மகரிஷி குருபகவானைத் தன் ஆணவத்தால் அவமதித்தார். அதனால் அவருக்குச் சாபம் உண்டானது. அந்தச் சாபம் நீங்க காத்யாயனர் வராக வனம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தலத்துக்கு வந்து தவம் செய்தார். அவரின் கடுமையான தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த பூவராக சுவாமி திருக்காட்சி அருளி சாபவிமோசனம் தந்ததோடு, 'வேண்டும் வரம் என்ன' என்றும் கேட்டார்.

அதற்கு காத்யாயனர், "திருமகளே இந்த உலகில் சகல உயிர்களின் மீதும் பெரும் கருணை கொண்டவள். அந்தக் கருணையை நான் மகளாகப் பெற்றுத் தூக்கிச் சுமக்க வேண்டும். அவளை வளர்த்ததன் பயனாக உலகத்தைக் காக்கும் நீங்களே எனக்கு மருமகனாகவும் வந்து அருள வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார்.

காத்யாயனரின் வேண்டுதலால் உலகம் நன்மையடையப் போவதை அறிந்திருந்த பகவான் விஷ்ணு அதற்கு இசைந்தார். 'புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் திருமகளை மகளாகப் பெறலாம்' என்று சொல்லி அருளினார்.

அதன்படி, காத்யாயன ரிஷி, பாவண தீர்த்தத்தில் நீராடி, அங்கேயே பர்ணசாலை அமைத்துக் கொண்டு, நியமப்படி ஆவணி மாத பௌர்ணமி அன்று வேதங்கள் முழங்க, புத்திர காமேஷ்டி யாகத்தைத் தொடங்கினார்.

யாகத்தின் நிறைவில் தங்கப்பதுமை போல திருமகள் அழகிய குழந்தையாக அவதரித்தாள். `அம்புஜவல்லி' என்ற திருநாமத்தோடு (காத்யாயினி, கமலவல்லி என்ற திருநாமங்களும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள்) சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்த தாயார், இடையறாது திருமாலின் மீது பக்தி கொண்டிருந்தாள். மேலும் இறைப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தியும்கொண்டாள்.

அம்புஜவல்லியின் பக்தியும் ஒழுங்கும் கண்டு அவரைச் சேரவேண்டிய தகுந்த வேளை வந்ததை அறிந்த பூவராக பெருமாள் திருமணம் செய்துகொள்ள விரும்பி, பெண் கேட்டு பிரம்மனை காத்யாயன ரிஷியிடம் அனுப்பினார்.

அம்புஜவல்லி தாயார்
அம்புஜவல்லி தாயார்

பெருமாளுக்குக் கொடுத்த வாக்கை முனிவர் மறக்கவில்லை. எனினும் தன் மகளைப் பிரிய நேரிடுமே என்று பெருமானுக்குத் திருமணம் செய்து வைப்பதைத் தவிர்த்தார். ஆனால், `பூவராகப் பெருமாளைத் தவிர வேறு ஒருவரை மனத்தாலும் நினையேன்' என்று உறுதியாக இருந்தாள் அம்புஜவல்லி.

காலம் பல கடந்த பிறகும் அவள் உறுதி குலையவே இல்லை. பெற்றவரைத் தவிக்கவிட்டு, பெருமாளை காந்தர்வ மணம் புரியவும் அம்புஜவல்லி ஒப்புக்கொள்ளவில்லை.

இறுதியில் தாயாரின் வைராக்கியம் வென்றது. அவளை பூவராகருக்குத் திருமணம் செய்து வைத்தார் காத்யாயன ரிஷி. தேவர்கள் எல்லோரும் கூடி திருமால்-தாயாரை வணங்கியதால் அந்தத் தலம் திருமண வேண்டுதல் தலமாகவும் மாறியது என்கிறது இந்தத் தலத்தின் புராணம்.

பூவராகரும் தனது திருமணத்தின் பொருட்டு வேதநாராயணப் பெருமாளாக அழகிய வடிவுடன் காட்சி தந்தார். திருமணத்தின்போது நவரத்தின வளையல்களைச் சீராகக் கொடுத்தார் பூவராகர். அந்த வளையலை அம்புஜவல்லித் தாயார் அணிந்ததால், இந்த ஊருக்கே வளையன்மாதேவி என்ற திருப்பெயர் உண்டானதாம்.

பழைமையான இந்த ஆலயத்தின் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வேதநாராயணப் பெருமாள் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார்.

மேலும் இங்கே எழுந்தருளி இருக்கும் தெய்வத் திருமேனிகள்; உற்சவர் வேதநாராயணப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம், நித்ய உற்சவர் வேதநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலம், காளீயமர்த்தனர் - உற்சவர், ஆதி நாராயணப் பெருமாள் - வீற்றிருந்த திருக்கோலம், ஸ்ரீபூவராகப் பெருமாள் மூலவர் வீற்றிருந்த திருக்கோலம், பிராட்டியுடன் சக்கரவர்த்தித் திருமகன், இளையபெருமாள்,

அனுமார் - நின்ற திருக்கோலம், ஸ்ரீஆண்டாள் - மூலவர் உற்சவர் நின்ற திருக்கோலம், ஸ்ரீநம்மாழ்வார் திருமங்கையாழ்வார் - மூலவர் உற்சவர், ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள் - மூலவர், ஸ்ரீஉடையவர், ஸ்ரீமணவாள மாமுனிகள் - மூலவர் உற்சவர், ஸ்ரீகமலவல்லித் தாயார் - மூலவர் உற்சவர், காத்யாயன ரிஷி - மூலவர் வீற்றிருந்த திருக்கோலம், ஸ்ரீகருடர், ஸ்ரீஅனுமன் - மூலவர் நின்ற திருக்கோலம், விஷ்வக்சேனர் - வீற்றிருந்த திருக்கோலம்.

வளையன்மாதேவி காத்யாயனர் தேவி
வளையன்மாதேவி காத்யாயனர் தேவி

தீர்த்தம் பாவண தீர்த்தம். விமானம் பாவண விமானம். தல விருட்சம் புன்னை. சித்திரை பிரம்மோற்சவமும், வைகாசி திருக்கல்யாண உற்சவமும் இங்கு வெகு விசேஷம் என்கிறார்கள் இந்த ஊர் பக்தர்கள்.

மாதம்தோறும் வரும் ரோகிணி, அஸ்தம், திருவோணம், உத்திரம், ரேவதி ஆகிய நட்சத்திர தினங்கள் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இங்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.

இங்குள்ள பாவண தீர்த்தத்தில் நீராடி, பூவராகப் பெருமாளை, அம்புஜவல்லித் தாயாரை வேண்டி நைவேத்தியம் விநியோகித்தால் நினைத்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். விரும்பிய வரன் அமையும் என்பது நம்பிக்கை.

பெருமாள் தான் விரும்பியபடி தாயாரை மணந்துகொண்ட தலம் என்பதால் இங்கு வந்து வேண்டிக்கொள்ள, வேண்டியவரைத் திருமணம் செய்துகொள்ளும் வரத்தைத் தன் பக்தர்களுக்கும் அருள்கிறார் என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

வாழ்வில் நல்ல துணை அமையவும் மனதின் விருப்பங்கள் நிறைவேறவும் ஒருமுறை வளையன்மாதேவி சென்று வேதநாராயண பெருமாளை வழிபட்டு வருவோம்.

எப்படிச் செல்லாம்: கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வளையமாதேவி. சேத்தியாத்தோப்பில் இருந்து பஸ் வசதி உள்ளது. ஆட்டோ வசதியும் உள்ளது.

கம்பம் நந்தகோபாலன் கோயில்: களைகட்டும் மாட்டுப்பொங்கல்... 400 ஆண்டுப் பாரம்பர்யம்!

தேனி மாவட்ட மக்களுக்கு மாட்டுப் பொங்கல் என்றால் சட்டென நினைவிற்கு வருவது கம்பம் நந்த கோபாலன் கோயிலும், அதன் பட்டத்துக் காளையும் தான். வருடா வருடம் நந்த கோபாலன் கோயிலில் மாட்டுப்பொங்கல் வெகு விமர்சையாக... மேலும் பார்க்க

பனையபுரம் ஸ்ரீபுறவார் பனங்காட்டீசன்: சூரியத் தலம்... பொய்ச்சத்தியம் செய்தால் 8 நாள்களில் தண்டனை!

கண்கண்ட கடவுள் சூரியபகவான். அவர் அருள் இருந்தால் பாவங்கள் விலகும். ஆரோக்கியம் கூடும். செல்வச் செழிப்பு உண்டாகும். இப்படி வரங்கள் அருளும் கிரகமாக அமரும் மேன்மையான நிலையை சூரியன் சிவ வழிபாட்டின் மூலம் ப... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர்: மண் மூடிப்போன ஆலயத்துக்குள் பூஜை நடந்த அதிசயம்!

7-ம் நூற்றாண்டு தலயாத்திரை மேற்கொண்டிருந்த திருஞானசம்பந்தர் தன் பிஞ்சுப்பாதங்கள் இந்த நிலத்தில் பதிய தமிழ் மண்ணெங்கும் நடந்து திரிந்தார். அப்படி அவர், கடலூர் அருகே இருக்கும் சோபுரம் திருத்தலத்துக்குச்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!

அசுரனான இரண்யனை வதம் செய்ய நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார் பெருமாள். அவதாரம் முடிந்தபின்னும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை.அவரின் அந்தக் கோபாவேஷத்தைத் தாங்காது நடுங்கத் தொடங்கியது பிரபஞ்சம். இதனால் அஞ்சி... மேலும் பார்க்க

ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்: மனப்பிரச்னைகளைத் தீர்க்கும் ஊஞ்சல் உற்சவம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, அருள்மிகு நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில். சுற்றியிருக்கும் ஊரில் உள்ள மக்களுக்கெல்லாம் தாயாக இருந்து காக்கும் இந்த அம்பிக... மேலும் பார்க்க

வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!

ஆற்றங்கரையிலும் ஆலமரத்து அடியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு எளிமையாக அருள் பாலிப்பவர் பிள்ளையார். இவரை எல்லோரும் எப்போதும் வழிபடலாம், வழிபடவேண்டும் என்பதற்காகவே இப்படியாக அமைத்தனர் நம் முன்னோர்கள். அப... மேலும் பார்க்க