கௌரி கிஷன் விவகாரம்: பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட `அதர்ஸ்' பட நடிகர் ஆதித்யா மாத...
கமல்ஹாசன்: "நாயகன் படத்துல முதல்ல கதை தெரியாமதான் நடிச்சேன்" - அனுபவம் பகிரும் நிழல்கள் ரவி
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு `நாயகன்' ரீரிலீஸ் ட்ரீட் கிடைத்திருக்கிறது. அதிரடியான கொண்டாட்டத்துடன் நேற்றைய தினம் படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
மணிரத்னத்தின் கல்ட் க்ளாசிக் திரைப்படமான `நாயகன்'தான் இளையராஜாவின் 400-வது படம். `நாயகன்' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்று வேலு நாயக்கரின் மகன் சூர்யா.
அந்தப் பாத்திரம் தன் அப்பாவைப்போலவே ஆகவேண்டும் என்று சிறுவயதிலிருந்து ஆசைப்படும் சுவாரஸ்யமான கதாபாத்திரம்.

ரீரிலீஸை முன்னிட்டு சூர்யாவாக நடித்த நிழல்கள் ரவியோடு உரையாடினோம்.
`நாயகன்' அனுபவங்களை விவரிக்கத் தொடங்கியவர், "காலத்தால் அழியாத காவியம் நாயகன். திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் பெரும் பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த படமது" என்றவர், "என்னுடைய முதல் படமான 'நிழல்கள்' படத்தின் முதல் ஷாட் ஆழ்வார்ப்பேட்டையில், கமல் சாரின் அறையில்தான் எடுக்கப்பட்டது.
கல்லூரி நாட்களில் நான் கமலின் தீவிர ரசிகன். அவரின் வீட்டில் என் முதல் படத்தின் படப்பிடிப்பு நடந்தது எனக்கு ஆச்சரியத்தையும் பெருமையையும் கொடுத்தது.
அதே கமல் அவர்களோடு இணைந்து 'நாயகன்' படத்தில் அவரின் மகனின் கதாபாத்திரத்தில் நடித்ததை மிராக்கில் என்றே கூறுவேன். கமல் நடிப்புலகின் சக்கரவர்த்தி. எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அசத்துவார். அவருக்கு மகனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம்" என்று பகிர்ந்தார்.
"மணி சார் இயக்கத்தில் 'பகல் நிலவு' திரைப்படத்தில் நடித்தேன். பின் `நாயகன்' படத்தின் சூர்யா கதாபாத்திரத்தில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று மணி சார் நினைத்திருக்கிறார்.
அப்படித்தான் நான் படத்திற்குத் தேர்வு செய்யப்பட்டேன். சில நாட்கள் கதை தெரியாமல்தான் நடித்தேன். பின் கதை கேட்டபோது மிகவும் இம்ப்ரஸ் ஆகிவிட்டேன்.
'சூர்யா' சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் வலுவான கதாபாத்திரம் என நான் எண்ணினேன். `நாயகன்' திரைப்படம் என் சினிமா கரியரின் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
உடல் நிலை சரியில்லாத வேலுநாயக்கர், வெத்தலைப் போட்டுக்கொண்டு சூர்யாவை 'நாயக்கரே' என்று அழைக்கும் அந்தக் காட்சியை கோவை, திருச்சி, தஞ்சாவூர், சென்னை என்று எல்லா ஊர்களிலும் மக்கள் கைத்தட்டி ரசித்தார்கள்.
நடிக்கும்போது அவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மக்களோடு அமர்ந்து படம் பார்த்தபோது அந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது" என்று பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.
நாயகன் ரீரிலீஸ் குறித்து கேட்டதற்கு, "38 வருடங்கள் கழித்து `நாயகன்' ரீ ரிலீஸ் ஆவதை விட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்? நாயகன் வெளிவந்தபோது கமலா தியேட்டர் எதிரில் பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.
'நாயகன் - இன்று முதல்' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்கள். அப்படியே திருப்பிப் போட்டால் இன்று அதே தியேட்டரில் அதே திரைப்படம் அதே பேனர்!

இதெல்லாம் ரொம்ப அற்புதமான நிகழ்வு. ஃப்ளாஷ்பேக் நினைவுகளை இது தருகிறது. காலத்தால் மறக்க முடியாத நிகழ்வு" என்று பகிர்ந்தார்.
இறுதியாக அவரது படங்களில் வேறு எந்தப் படம் ரீரிலீஸ் ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதாகக் கேட்டபோது, "அண்ணாமலை ரீரிலீஸ் ஆனால் நன்றாக இருக்கும், ஐ அம் வெயிட்டிங்" என்று நிறைவுசெய்தார்.
- கோகுல்











