கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்
த.வெ.க சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இரவு 7 மணியளவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உரையாற்றும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தமிழக மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் துயர சம்பவமாக பார்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கரூர் நகர காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, த.வெ.க கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் நகர பொருளாளர் பவுன்ராஜ் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்றது.
அதன் பின்னர், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) கரூரில் விசாரணை மேற்கொண்டு, த.வெ.க கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, த.வெ.க கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்க தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு தடை கோரியும், விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற கோரியும், பாதிக்கப்பட்டோர் தரப்பும் த.வெ.க சார்பும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சி.பி.ஐ விசாரணைக்காக கடந்த மாதம் 13-ம் தேதி டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 17-ம் தேதி சி.பி.ஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க மக்கள் சந்திப்பு கூட்டத்தில் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 9 குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சி.பி.ஐ ஏ.எஸ்.பி முகேஷ் குமார் வழக்கு பதிவு செய்து, கரூரிலேயே தற்காலிக விசாரணை அலுவலகம் அமைத்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்.
அதன்படி, கடந்த மாதம் 16-ம் தேதி கரூர் வருகை தந்த சி.பி.ஐ எஸ்.பி பிரவீன் குமார், ஏ.எஸ்.பி முகேஷ் குமார் உள்ளிட்ட 12 சி.பி.ஐ அதிகாரிகளிடம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை ஆவணங்களை ஒப்படைத்து விசாரணையை முடித்துக்கொண்டது.
அதன் பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் இதுவரை சுமார் 400-க்கும் மேற்பட்டோருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி, விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இதில், வேலுச்சாமிப்புரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், சம்பவ இடத்தில் வசித்து வந்த பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினர், மேலும் காயமடைந்த 110 பேர் உள்ளிட்டோரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி த.வெ.க மாநில தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூர் சென்ற சி.பி.ஐ அதிகாரிகள், கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒளிப்பதிவு காட்சிகள், ட்ரோன் கேமரா காட்சிகள் ஆகியவற்றைப் பெற நேரில் சென்றனர்.

அப்போது, அனைத்தையும் திரட்டி அடுத்த மூன்று நாட்களுக்குள் கரூர் சி.பி.ஐ தற்காலிக அலுவலகத்தில் வழங்குவதாக த.வெ.க வழக்கறிஞர்கள் தெரிவித்ததால், சி.பி.ஐ அதிகாரிகள் கரூர் திரும்பினர்.
இந்நிலையில், கடந்த 8-ம் தேதி கரூர் சி.பி.ஐ தற்காலிக விசாரணை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் மற்றும் திருச்சி மண்டல வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு உள்ளிட்ட மூன்று பேர் வீடியோ ஒளிப்பதிவு ஆவணங்களை வழங்கினர்.
அவர்களிடம் தொடர்ந்து சுமார் பத்து மணி நேரத்துக்கு மேலாக சி.பி.ஐ அதிகாரிகள் வீடியோ ஒளிப்பதிவு காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், த.வெ.க மாநில பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது செயலாளர் நிர்மல் குமார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதார்ஜுனா உள்ளிட்டோர் இன்று கரூர் சிபிஐ தற்காலிக விசாரணை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகினர்.
அவர்களிடம் விசாரணையை நடத்தப்பட்டது. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
















