செய்திகள் :

கரூர் மாவட்டம் ஐயர்மலை ரத்தின கிரீஸ்வரர் கோயில்: குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வணங்கலாம்!

post image

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் அமைந்திருக்கிறது ஐயர்மலை. இங்குதான் ஈசன் ரத்தினகிரீஸ்வரராக சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அம்மனுக்கு சுரும்பார்குழலி என்பது திருநாமம். தேவாரப் பாடல்பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 128வது தலமாகத் திகழ்கிறது. இத்தலத்துக்கு வந்த அப்பர் சுவாமிகள், 'கால பாசம் பிடித்துஎழு தூதுவர்' என்று தொடங்கி 11 பாடல்கள் கொண்ட பதிகம் ஒன்றைப் பாடி இத்தல இறைவனைப் போற்றியுள்ளார்.

தரை மட்டத்திலிருந்து 1,178 அடி உயரத்தில் ஈசனின் சந்நிதி அமைந்திருக்கிறது. சிவாயமலை, ரத்தினகிரி, திருவாட்போக்கி மலை, பஞ்சாட்சர மலை, ஐவர் மலை, ஐயர்மலை, மணகிரி, மாணிக்க மலை, தென் கயிலாயம், காகம் பறவா மலை என்று இந்த மலை பல்வேறு பெயர்களால் சுட்டப்படுகிறது. ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு என்கிறார்கள்.

ஐயர்மலை ரத்தின கிரீஸ்வரர் கோயில்

இந்த மலைக்கோயிலுக்குச் செல்ல 1017 படிகள் உள்ளன. இந்தப் படிகளும் மலைக்கோயிலின் பிராகாரங்களும் காண்பதற்கு 'ஓம்' என்னும் பிரணவ வடிவிலேயே அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

இங்கே சுயம்புவாக அருளும் ஈசனுக்கு வாட்போக்கிநாதர், ராஜலிங்கமூர்த்தி, மத்தியானச் சொக்கர். ரத்தினகிரீஸ்வரர் என்று பல்வேறு திருநாமங்கள் உண்டு. மலைமேல் இருந்தாலும் இந்த ஈசனுக்குத் தீர்த்தம் காவிரியே. தினமும் அபிஷேகத் தீர்த்தம் 8 கி.மீ தொலைவில் உள்ள காவிரியில் இருந்து கொண்டுவரப்பட்டு காலை சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை ஆகிய மூன்று காலங்களிலும் சுவாமிக்கு அபிஷேகிக்கப்படுகிறது.

கருவறையில் மூலவர் ரத்தினகிரீஸ்வரர் பெருமான் லிங்க ரூபனாக கம்பீரமாகக் காட்சிகொடுக்கிறார். இவரை வணங்கி கருவறையை வலம் வந்தால் விநாயகர், சுப்பிரமணியர், வைரப்பெருமாள், அதிகார நந்தி, நடராஜர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், விஸ்வநாதர் விசாலாட்சி, ஆரிய ராஜா, சண்டிகேஸ்வரர், துர்கை அம்மன், பைரவர், சூரியர், சந்திரர், நவகிரங்கள், அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சந்நிதிகளை தரிசனம் செய்யலாம்.

இங்கு மலையேறுவது பிரத்தியேகமான அனுபவமாகத் திகழ்கிறது. காரணம் இந்த மலையைச் சுற்றி ஏராளமான மூலிகைச் செடிகளும் மரங்களும் உள்ளன. வீசும் காற்றில் அவற்றின் மருத்துவங குணங்கள் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதை சுவாசிப்பதால் உடலின் நோய்கள் தீரும் என்றும் புத்துணர்ச்சி அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஐயர்மலை ரத்தின கிரீஸ்வரர் கோயில்

இங்குள்ள ஈசனின் திருமேனிக்குச் செய்யும் அபிஷேகப் பால் உறை ஊற்றாமலேயே இரண்டு மணி நேரத்தில் தயிராக மாறிவிடும் அற்புதம் நிகழ்கிறது. சித்திரை மாதத்தில் சூரிய பகவான் சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள நவ துவாரங்கள் வழியாகத் தன் கிரணங்களை நீட்டி சிவலிங்கத்தை ஸ்பரிசிக்கிறார்.

சுந்தரர் இந்தத் தலத்திற்கு வந்தபோது, மலையேற வழி இல்லாமல் இருந்தது. அதனால் அடிவாரத்தில் இருந்தபடியே சுவாமியை நினைத்துப் பதிகம் பாடினார் சுந்தரர். அப்போது சுவாமி ஒரு பெரிய பொன்முடிப்பை பூதகணம் ஒன்றிடம் கொடுத்தனுப்பினார். பூதகணம் அந்தப் பொன்முடிப்பை சுந்தரருக்கு வழங்கிய இடம்தான், 'பொன்னிடும் பாறை' என்று அழைக்கப்படுகிறது.

உடனே சுந்தரர், ‘இவ்வளவு பொன்னையும், பொருளையும் கொடுத்தீர்களே! உங்களுடைய திருமேனி தரிசனம் அருள வேண்டாமா’ எனப் பாடுகிறார். அப்போது ஈசன், அந்த மலையே ரத்தினமாக ஜொலிக்கச் செய்து, ‘நான் இப்படித்தான் இருக்கிறேன்’ என்று மலையாகக் காட்சிகொடுத்தார். ஈசன் ரத்தினமாக மலையாகக் காட்சிகொடுத்ததால் இதற்கு ‘ரத்தினகிரி’ என்றும் ஈஸ்வரனுக்கு ரத்தினகிரீஸ்வரர்’ என்றும் திருநாமம் உண்டானது.

பொன்னிடும் பாறைக்கு முன்பு உள்ள கற்கம்பத்தில் நூல் கட்டிப் பிரார்த்தனை செய்கின்றனர். இதனால் தீவினைகள் நீங்கி காரிய ஸித்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.

அசுரனை வதம் செய்த துர்கை தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம் இது. இங்கே துர்கைக்கும் சப்த கன்னியருக்கும் சந்நிதி அமைந்துள்ளது.

தங்கள் குல தெய்வம் எது என்று தெரியாதவர்கள் ரத்தினகிரீஸ்வரரைத் தம் குலதெய்வமாக வழிபடலாம் என்பது ஐதிகம். ரத்தினகிரீஸ்வரரை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம் ஆகியவை கிட்டும் என்பது நம்பிக்கை. இங்கு கிரிவலமும் விசேஷம்.

ஐயர்மலை ரத்தின கிரீஸ்வரர் கோயில்

ஈசனே மலையாக அருளும் தலம் என்பதால் இங்கு பௌர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டு ஐயர் மலையை வலம் வருகிறார்கள். சித்திரைத் திருவிழா இங்கே 15 நாள் உற்சவமாகக் கோலாகலமாக நடைபெறும். கார்த்திகை சோமவாரம், தைப்பூசம் போன்ற உற்சவங்களும் களைகட்டும்.

தேரோட்டம் அன்று பக்தர்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த தானியங்களை மலை படிகளிலும், வீதிகளிலும் தூவிச் செல்வர். இதனால் வரும் ஆண்டுகளில் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. தேரோட்டத்திற்கு முதல் நாள் இரவு நடைபெறும் ‘குதிரை தேர்’ இந்தப் பகுதியில் புகழ்பெற்றது. கார்த்திகை மாதம் முதல் நாள் ரத்தினகிரீசுவரருக்கு ரத்தின கிரீடம் சாத்தப்படுவது சிறப்பாகும். ஆடி 3-வது வெள்ளிக்கிழமையன்று அம்பாளுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும். மகா சிவராத்திரியும் விசேஷமாகக் கொண்டாடப்படும்.

இப்படிப் புராணச் சிறப்புகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்ட இந்தத் தலத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். ஆரோக்கியத்தோடு ஆனந்த வாழ்வையும் அருள்வார் ரத்தினகிரீஸ்வரர்.

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தடை! – காரணம் என்ன?

தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, கோவை அருகேயுள்ள பூண்டி பகுதியில் அமைந்துள்ளது. பூண்டி அடிவாரத்தில் இருந்து, மலை மீது அமைந்துள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க 5.5 கி.மீ தூரம் மலைப்பாதையில் ... மேலும் பார்க்க

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் : மாவிளக்கு போட்டு வேண்டிக்கிட்டா மங்கலங்கள் அருள்வாள்!

அன்னை கருமாரி காக்கும் கடவுளாக ஊர்தோறும் இருந்து அருள்பாலித்துவருகிறாள். நோய் நொடிகளில் இருந்து ஊர்மக்களைக் காக்கும் மாரியே உரிய காலத்தில் மழையைப் பெய்ய வைத்து விவசாயம் செழிக்கவும் அருள்பவள். அப்படிப்... மேலும் பார்க்க

கோவை மாவட்டம் வெள்ளலூர் தேனீஸ்வரர் திருக்கோயில்: வேண்டிய வரம் அருளும் மும்மூர்த்திகள் சந்நிதி!

ஈசன் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கும் தலங்கள் மகிமை நிறைந்தவை. அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் சிவத்தலங்கள் அனைத்துமே மிகவும் சிறப்பு பெற்றவை. அப்படி ஒரு ஆலயம்தான் வெள்ளலூர் தேனீஸ்வரர் கோய... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை முருகன்: பிள்ளைவரம் தரும் பாலசுப்பிரமண்ய சுவாமி!

தென் மாவட்டங்களில் திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்கிற கவலைப்படுபவர்களிடம் பெரியவர்கள், வெள்ளிமலை பாலமுருகனை தரிசித்துவாருங்கள். அந்த முருகனே உங்களுக்குக் குழந்தையாகப் பிறப்பான் என்பார்கள்... மேலும் பார்க்க

கோவையில் பிரம்மாண்டமாக கட்டப்படும் திருப்பதி கோவில் - திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலைகள் என அழைக்கப்படும் சேஷாசல மலை உச்சியில் ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உலகின் செல்வந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக வ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டம் முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்: தீய சக்திகளை விரட்டி நல்லருள் தருவாள்!

ஊர்தோறும் அம்மன்கோயில்கள் உண்டு. அவளே காக்கும் தெய்வம். கருமாரி, காமாட்சி, மீனாட்சி என்று பல்வேறு நாமங்கள் கொண்டு மக்களைக் காப்பவள். அவளே பச்சையம்மனாக அருள்பாலிக்கும் தலங்கள் பல உண்டு. அவற்றில் முக்கி... மேலும் பார்க்க