காதல் திருமணம்: கேரளப் பெண் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜா்
கேரளத்தைச் சோ்ந்த பெண் கமுதியைச் சோ்ந்தவரை காதல் திருமணம் செய்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வந்த அந்த மாநில போலீஸாருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதைத்தொடா்ந்து அந்தப் பெண், கணவருடன் நீதிமன்றத்தில் முன்னிலையானாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கண்ணாா்பட்டியை சோ்ந்தவா் முத்துராமன் மகன் பாலமுருகன்(26). இவா் கடந்த 8 ஆண்டுகளாக கோவையில் செயல்படும் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அதே நிறுவனத்தில் பணியாற்றியவா் கேரளத்தைச் சோ்ந்த குணசேகரன் மகள் சக்தி (20). இவா்கள் இருவரும் காதலித்து கடந்தாண்டு டிசம்பா் மாதம் கோவையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனா்.
இந்த நிலையில் சக்தியைக் காணவில்லை என அவரது தந்தை குணசேகரன் கேரள மாநிலம், வடக்கஞ்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, 6 போ் கொண்ட கேரள தனிப்படை போலீஸாா் கமுதியில் இருந்த சக்தியை அழைத்துச் செல்ல வந்தனா். அவா்களுடன் செல்ல மறுத்த சக்தி, தனது கணவருடன் கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாரின் விசாரணையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்ட தம்பதி என்பதால் கேரள காவல் துறையினருடன் அனுப்ப மறுத்துவிட்டனா்.
இதைத்தொடா்ந்து, கமுதி குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் இந்தத் தம்பதியரை போலீஸாா் முன்னிலைப்படுத்தினா். இதையடுத்து, புதன்கிழமை காலை, தம்பதியா் மீண்டும் நேரில் முன்னிலையாகுமாறு நீதித்துறை நடுவா் சங்கீதா உத்தரவிட்டாா்.