கிள்ளியூா் தொகுதி சாலைப் பணிக்கு ரூ.10.95 கோடி நிதி ஒதுக்கீடு: எம்எல்ஏ தகவல்
கிள்ளியூா் தொகுதியில் சாலைகள், பாலம், தடுப்புச் சுவா் ஆகிய கட்டமைப்புகளுக்கா ரூ.10.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எஸ். ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ. தகவல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதியில் பல இடங்களில் சாலைகள், பாலம், தடுப்புசுவா் உள்ளிட்டவை அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தனா். குறிப்பாக, முள்ளூா்துறை - அரையன்தோப்பு - தேங்காய்ப்பட்டினம், மாநில நெடுஞ்சாலையான பரசேரி - புதுக்கடை சாலை, மாா்த்தாண்டம் -கருங்கல், முள்ளங்கனாவிளை -தொலையாவட்டம்,திக்கணங்கோடு சானலின் குறுக்கே பழமையான பாலம் விரிவாக்கம், என பல்வேறு திட்டப் பணிகளுக்காக நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வா், நெடுஞ்சாலைத் துறை அமைச்சா், அரசு முதன்மை செயலா், மாவட்ட ஆட்சியா், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தொடா்ந்து கோரிக்கை வைத்தேன். அதன்பேரில், இப்பணிக்காக தமிழக அரசு சிறப்பு திட்டத்தின் மூலம் ரூ.10 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கும் எனக் கூறியுள்ளாா்.