தினமும் கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!
தூத்துக்குடி: பதவி கிடைக்காத விரக்தி? - தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி!
தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 23-ம் தேதி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த தூத்துக்குடி அஜிதாஆக்னல் என்பவரும் தனக்கு மா.செ., பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து சென்னை பனையூரில் உள்ள த.வெ.க கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அவரை சில மீட்டர் தூரத்திற்கு முன்பே பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால், தனக்குப் பதவி இல்லை என்ற தகவலை அறிந்த அஜிதா ஆக்னல், விஜய்யின் காரை மறித்து முற்றுகையிட்டார். பவுன்சர்கள் அவரை அப்புறப்படுத்தினர்.

பின்னர், கட்சி அலுவலகத்தின் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் அஜிதா ஆக்னல், சரியாக உணவு அருந்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது மேலும், “ தி.மு.க வின் கைக்கூலி” என அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாலும் மிகவும் பாதிக்கப்பட்டு வருத்தத்தில் இருந்துள்ளார் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.
இந்த நிலையில், இன்று காலை வீட்டில் 15 தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதன் காரணமாக மயங்கி கீழே சரிந்துள்ளார். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த அவரது கணவர் உள்ளிட்டோர் அவரை உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அஜிதா ஆக்னல் தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் திரண்டிருந்த அவரின் ஆதரவாளர்களோ, “அஜிதா மேடம் பதவியை எதிர்பார்த்து கட்சியில் சேரவில்லை. அடிப்படையில் அவர் ஓர் ஆசிரியை. விஜய் மீதும் கட்சியின் கொள்கை மீதும் ஈர்ப்பு ஏற்பட்டு கட்சி தொடங்கிய நாள் முதல் மாவட்டம் முழுவதும் பம்பரமாகச் சுழன்று வந்தார். தன் சொந்த நிதியில் பள்ளி மாணவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் முகாம்களில் மக்களைத் திரட்டி அவர்களின் பிரச்னைகளுக்காக ஆட்சியரிடம் மனுக்கள் அளிப்பதுடன், அதன் தீர்வுகளுக்காக தொடர்ந்து போராடி வருபவர்.
அதிக எண்ணிக்கையில் கட்சியில் உறுப்பினர்களைச் சேர்த்தவர். தூத்துக்குடியைப் பொறுத்தவரையில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவருக்குத்தான் பதவி என்ற நிலை உள்ளது. ஆனால், நாடார் சமூகத்திற்கு இணையான எண்ணிக்கையில் மீனவர் சமூக மக்கள் உள்ளனர். தற்போது மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சாமுவேல் ராஜை எத்தனை பேருக்கு தெரியும்? அஜிதா ஆக்னல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளரான பில்லா ஜெகனின் தங்கைதான். ஆனால், அவருக்கும் அஜிதாவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், சாமுவேல்ராஜ் அமைச்சர் கீதாஜீவனுக்கு நெருங்கிய உறவினர். உழைத்தவர்களுக்கு பதவி இல்லையா?

ஆனாலும், என் தலைவர் என் கட்சி என் கட்சி என்ற நினைப்பிலேயே உள்ளார் அஜிதா. இருப்பினும் உழைப்பிற்கு மதிப்பில்லாத கட்சி தலைமை மீது அவருக்குப் பெரும் வருத்தம் உள்ளது உண்மைதான்.” என்றனர்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அஜிதா தூக்க மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.













