தூத்துக்குடி: பதவி கிடைக்காத விரக்தி? - தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்...
'அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை...' - விஜய் காரை மறித்த பெண் தற்கொலை முயற்சி!
பனையூரின் தவெக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா அக்னல் தற்கொலை முயற்சி செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் செயலாளராக சாமுவேல் என்பவரை கடந்த 23 ஆம் தேதி விஜய் நியமித்திருந்தார். சாமுவேல் கட்சிக்காக வேலையே பார்க்காதவர் என்றும், முறையாக கட்சிப் பணியாற்றிய தனக்குதான் மா.செ பதவி வேண்டுமென்றும் அஜிதா முறையிட்டார். இதற்காக பனையூர் அலுவலகத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கூடிய அஜிதா, விஜய்யின் காரை மறித்து போராட்டம் செய்தார்
விஜய்யை பார்க்காமல் நகரமாட்டேன் என கட்சி அலுவலகத்துக்கு வெளியே தர்ணாவிலும் ஈடுபட்டார். கட்சி மேலிடத்திலிருந்து, 'பிரச்னை பண்ணாதீங்க. பேசி தீர்த்துக்கலாம்' என அஜிதாவுக்கு தகவல் சொல்லப்பட பனையூரிலிருந்து கலைந்து சென்றார். இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்த அஜிதா இன்று தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜிதாவின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். 'உழைச்சதுக்காக பதவி கேட்டவங்களுக்கு திமுக கைக்கூலினு சமூகவலைதளங்கள்ல பட்டம் கட்டுனாங்க. அதுலதான் அக்கா மனசு உடைஞ்சுட்டாங்க. அதிகளவுல தூக்கு மாத்திரை போட்டு மயங்கிட்டாங்க. பக்கத்துல இருக்க ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்' என விஷயத்தை உறுதிப்படுத்தினர்.













