ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திர...
கரூர்: சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்; மனக்கவலைகள் தீர்க்கும் மகாதேவர் ஆலயம்!
நவகிரகங்களில் சந்திரன் மனதின் அதிபதி. மனதின் எண்ணங்களை, 'மதி' என்று அழைப்பதும் உண்டு. சந்திரனுக்கும் மதி என்ற பெயர் உண்டு. ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியிருந்தால் அவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவார். அப்படிப்பட்டவர்கள் சந்திர பரிகாரத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதன் மூலம் நல்ல மனநலமும் வாழ்வில் செழிப்பும் பெறலாம். அப்படிப்பட்ட ஒருதலம்தான் கரூர் அருகில் இருக்கும் சோமூர்.
கரூர் மாவட்டத்தில், கரூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில்-காவிரிக்கும், அமராவதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது சோமூர். இங்குள்ள சோமேஸ்வரர் ஆலயம் 1,100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள். இங்கே அருள்பாலிக்கும் சோமேஸ்வரர், மனம் மற்றும் மூளை தொடர்பான பிணிகள் நீங்கிட வரம் தரும் அருள்கிறார் என்கிறார்கள்.

ஒருமுறை குரு அபவாதத்துக்கு ஆளாகி சாபம் பெற்ற சந்திரன் தேவகுருவின் சாபம் பெற்றான். அதனால் அவன் அழகு தேயத் தொடங்கியது. சந்திரன் தன் ஆணவம் நீங்கினான். தன் தவற்றுக்குப் பரிகாரம் தேடினான். தவற்றை உணர்ந்ததால் மனம் இறங்கிய குருபகவான் அப்போது அவன் முன் தோன்றி
"பூ உலகில் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள சோமேஸ்வரர் கோயிலுக்குச் சென்று புனித நீராடி, மலர்களால் பகவானை அர்ச்சித்து வழிபட்டால் சாபம் நீங்கும்’’ என்று எடுத்துரைத்தார்.
சந்திரனும் பூலோகம் வந்து அமராவதி ஆற்றின் கரையில் கோயில் கொண்டிருந்த ஈசனை வழிபட்டான். பூரண பக்தி காரணமாகக் காட்சிகொடுத்த ஈசன் சந்திரனின் சாபம் நீக்கி அருள்புரிந்தார். சந்திரனுக்கு சோமன் என்கிற பெயரும் உண்டு. எனவே சந்திரனின் சாபம் தீர்ந்த தலம் என்பதால் சோமூர் என்று இந்தத் தலத்துக்கும் சந்திரனுக்கு அருள் செய்த ஈசன் என்பதால் சோமேஸ்வரர் என்று ஈசனுக்கும் திருநாமம் உண்டாயிற்று. அன்றுமுதல் இந்த ஈசனை வழிபடுபவர்களுக்கு சந்திர தோஷங்கள் தீர்வது சத்தியமாயிற்று என்கிறது தலபுராணம்.
இந்த சோமேஸ்வரர் ஆலயம் சோழர் காலத்தில் கட்டப் பட்டது. பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் கருவறை சிறியதாகவும், அதையடுத்து அமைந்துள்ள அர்த்த மண்டபம் பெரியதாகவும் இருக்கும். ஆனால், இங்கே அர்த்தமண்டபம் சிறியதாகவும், கருவறை மண்டபம் பெரியதாகவும் அமைந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்க ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது இந்த ஆலயம். சந்திரன் வழிபட்டு அருள்பெற்றதால் சந்திர பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வந்து ஸ்வாமியை மனதார வழிபட்டால், மனநிலை பாதிப்புகள், மூளை தொடர்பான பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. மட்டுமன்றி திருமணத் தடை நீங்கவும் குழந்தை வரம் கிடைக்கவும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். சோமேஸ்வரர் அருளால் அவர்களின் வேண்டுதல்கள் விரைவில் பலிக்கின்றன. பரணர் எழுதிய 'பரணர் காட்டிய பாதை’ என்ற கருவூர் புராணத்தில் இக்கோயிலைப் பற்றியும் பாடப்பட்டுள்ளது.
முற்காலத்தில் மனோன்மணி அம்பிகைக்குத் தனிச் சந்நிதி இருந்திருக்கவேண்டும். காலப் போக்கில் அது சிதிலமுற்றிருக்கலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
கோயிலுக்கு அருகில், மண்ணில் புதைந்திருந்த சப்தமாதர் சிலைகள் சிதிலமுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மூல ஸ்தானத்தின் தெற்குப்புறத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலையும் சிதிலமடைந்துள்ளது. தண்டாயுதபாணி மூர்த்தத்தையும் இங்கே தரிசிக்கலாம். திருக்கோயிலுக்கு முன்பு நந்திசிலை-பலிபீடம் உள்ளன. அர்த்தமண்டபத்தில் ஜய-விஜயர்கள் துவார பாலகர்களாகக் காட்சி தருகிறார்கள்.
இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் `இந்தக் கோயில் மதுரை கொண்ட கோபரகேசரி முதலாம் பராந்தகச் சோழனின் ஆறாவது ஆட்சியாண்டுக்கு முந்தையது’ என்ற தகவலை அறிய முடிகிறது. ஆக, தஞ்சை பெரியகோயில் அமைவதற்கு முன்னதாக... அதாவது சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது என்று புலனாகிறது.

கோயிலின் தோற்ற அமைப்பும் கட்டட பாணியும் இக்கோயில் பிற்காலச் சோழர்களின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.
அற்புதமான இந்தச் சோழர் காலத்துச் சிவாலயத்தை நீங்களும் குடும்பத்துடன் சென்று தரிசித்து வாருங்கள். மனநிறைவும் மகிழ்ச்சியும் பெருகும். சந்திரனுக்கு அருள்பாலித்த சோமேஸ்வரர், உங்களுக்கும் சந்தோஷ வரங்களை வாரி வழங்குவார்.


















