காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸுக்கு இம்முறை வாய்ப்பு மறுப்பா? - குளச்சலில் அலையடிக்...
நாகை ஆயக்காரன்புலம் கலிதீர்த்த ஐயனார் கோயில்: வேண்டுதல் நிறைவேற்றும் கூத்து பிரார்த்தனை!
தமிழகத்தின் தொன்மையான வழிபாடுகளில் ஒன்று ஐய்யனார் வழிபாடு. ஐயனார் கோயில் இல்லாத ஊர் தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.
எளிய மக்களின் தெய்வமாக தாய் தந்தையைப் போன்று தன் பக்தர்களைக் காக்கும் ஐயனாரை பக்தர்களும் தங்கள் குல மூதாதையாக வழிபடும் தலங்கள் அநேகம். அப்படிப்பட்ட தலங்களில் ஒன்று ஆயக்காரன்புலம்.
இந்தத் தலத்தில் ஐயனார் கோயில்கொண்ட நிகழ்வு அற்புதங்கள் நிறைந்தது. வாருங்கள் அந்தத் தலம் குறித்தும் அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் குறித்தும் அறிந்துகொள்வோம்.
வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் நெடுஞ்சாலையில், ஆயக்காரன்புலம் கிராமம் வரும். அங்குதான் கலிதீர்த்த ஐயனார் கோயில் உள்ளது. கோயில் முழுவதும் சிலைகள் நிறைந்திருக்க தெய்விக அதிர்வுகள் நிறைந்து விளங்கும் இந்த ஆலயத்தில் நடக்கும் அற்புதங்கள் பல.
அதை அறிந்துகொள்வதற்கு முன் ஐயனார் கோயில் கொண்ட வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.

முன்னொருகாலத்தில் ஒரு பௌர்ணமி நள்ளிரவில் ஊரில் இருந்த பெரிய ஆலமரத்தின் மேலே பெரும் வெளிச்சம் ஒன்று தோன்றி, கீழே இறங்கி மீண்டும் மேலேறிச் சென்றது.
இதைக் கண்ட அந்தணர் ஒருவர் ஊரில் சொல்ல, அடுத்த நாளே மர்மமாக இறந்துபோனார். அதேபோல அடுத்த பௌர்ணமியிலும் நடைபெற, வேறொரு அந்தணரும் இறந்துபோனார்.
இதுகுறித்து பயந்துபோன ஊர் மக்கள், ஆலமரத்தின் அடியில் ஒரு செங்கல்லை நட்டு வழிபட்டனர். அடுத்த பௌர்ணமியில் வேறொரு அதிசயம் நடந்தது. அந்தச் செங்கல் வெடித்துக் கருங்கல்லாக மாறியது.
அதிலிருந்து கண்ணைக் கூசும் வெளிச்சம் உண்டாகி, ஊரார் அனைவரும் கேட்கும் வண்ணம் அசரீரி ஒலித்தது. `நான் உங்கள் கலி தீர்க்க வந்திருக்கும் ஐயனார். என்னை இங்கு வணங்கி பூசை போட்டு வேண்டினால் வேண்டியதை அருளுவேன்' என்று உறுதி கூறினார்.
இது கேட்டு மகிழ்ந்த ஊர் மக்கள், தங்களைக் காக்க வந்திருக்கும் ஐயனாரை பிரமாண்டமாக விழா எடுத்துக் கொண்டாடினார்களாம். அன்று முதல் இன்று வரை நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களின் குறைகளைத் தீர்க்கும் தெய்வமாக ஐயனார் இருந்துவருகிறார்.
கலிதீர்த்த ஐயனார் ஆலயம் முழுவதும் குதிரை, யானை, புலி, நாய் மற்றும் பல்வேறு மனிதர்களின் சிலைகள் நிரம்பி உள்ளன. யார் இங்கு வேண்டிக் கொண்டாலும் அந்த வேண்டுதல் நிறைவேறியதும் அவர்களின் சிலையை இங்கு வைத்துவிடுகிறார்கள்.
டாக்டராக, போலீசாக விரும்பிய பலரும் அது நிறைவேறியதும், அந்த உடையோடு சிலையாக நிற்பதையும் இங்கு காணலாம். திருமண வரம் வேண்டுவோர், திருமணம் ஆனதும் தம்பதியாக சிலைகளை இங்கு வைக்கிறார்கள். நோய் குணமானவர்களும் அவர்களுடைய சிலையை இங்கு வைக்கிறார்கள். ஆலயம் எங்கும் குழந்தை, மணமக்கள், புரவிகள் சிலைகளும் ஆயிரம் கண் பானைகளும் நிரம்பி இந்தக் கோயிலின் மகத்துவத்தைச் சொல்லியபடியே உள்ளது.

'இந்த மாதம் பிள்ளை பிறக்கும்' - பலிக்கும் பூசாரியின் வாக்கு
பிள்ளை வரம் வேண்டுவோர், இங்கு வந்து வேண்ட, பூசாரியின் அருள்வாக்கால் நல்ல சேதி கேட்கிறார்கள். இந்த மாதத்தில் இந்தப் பிள்ளை பிறக்கும் என்று சந்தோஷமான சேதியைக் கேட்டு அந்த ஐயனாரே உத்தரவு கொடுத்ததாக நம்பி உற்சாகம் கொள்கிறார்கள்.
அதேபோல பிள்ளை வரமும் கிடைக்க, மகிழ்கிறார்கள். இது கண்கூடாக இன்றும் நடந்துவரும் அதிசயம் என்கிறார்கள். ஏகாந்தமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் தூண்டில்காரன், வீரன், பெத்தாள், பெரியாச்சி, சம்பவராயன் சந்நிதிகளும் உள்ளன.
பிள்ளை வரம் வேண்டி வருபவர்களிடம் கோயில் பூசாரி ஒரு தேங்காயைக் கொடுத்து, வீட்டில் அதை பூரண கும்பம் போல் சொம்பில் வைத்து வணங்கி வரச் சொல்கிறார். குழந்தை பிறந்ததும் அந்தச் சொம்பும் தேங்காயும் கோயிலில் மீண்டும் சமர்ப்பிக்கப்படுகிறது.
அதேபோல், திருமணம் தள்ளிப்போனவர்களுக்கும், திருமண நாளை சரியாகச் சொல்லி அனுப்புகிறார் இந்தக் கோயில் பூசாரி என்பதும் சிறப்பு.
கூத்துப்பிரியர் ஐயனார்
இங்குள்ள கலிதீர்த்த ஐயனார் கூத்து பார்ப்பதில் பெருவிருப்பம் கொண்டவராம். அதனால் தன்னிடம் வேண்டுபவர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் இங்கு கூத்து நடத்துவதாக வேண்டிக்கொண்டால் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிவிடுவாராம்.
அதனால் இங்கு கூத்து நடத்தவென்றே பெரும் கூத்து மண்டபம் உள்ளது. கூத்தை நடத்தவென்றே இங்கேயே தங்கி இருக்கும் கூத்துக் கலைஞர்களும் இருக்கிறார்கள். வாரத்துக்கு ஒரு கூத்தாவது இன்றும் நடந்துவருகிறது என்கிறார்கள் ஊரார்.

குலதெய்வமாகவும் கிராம தெய்வமாகவும் தென்னகமெங்கும் வழிபடப்பட்டுவரும் ஐயனார், ஆயக்காரன்புலம் கிராமத்தில் கலி எனும் குறை தீர்க்கும் தெய்வமாக விளங்கிவருகிறார். குறைகள் தீரவேண்டும் என்று தவிப்பவர்கள் நிச்சயம் இந்த ஊருக்குச் சென்று ஐயனாரைத் தரிசித்து பலன்களைப் பெறலாம்.




















