பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
திருச்சி, ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் கோயில்: சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் வெட்டிவேர் தீர்த்தம்!
இறைவனைச் சரணடைந்தால் அருளும் முக்தியும் கிடைக்கும் என்பது எவ்வளவு சத்தியமோ அந்த அளவுக்கு இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆரோக்கியம் அருளும் சில தலங்களை நம் முன்னோர் கண்டு அவற்றில் சில குறிப்பிட்ட வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆலயங்களில் மிகவும் முக்கியமானது ஊட்டத்தூர் சுத்தரத்னேஸ்வரர் திருக்கோயில்.
தரிசனம் செய்தால் ரத்தினம் போல் ஜொலிக்கும் திருமேனியுடைய ஈசன் என்பதால் இவருக்கு இந்தத் திருநாமம். மேலும் சிந்தாமணீஸ்வரர், ரத்தினமுடையார், தூய மாமணி, மாசிலாமணி, துகுமாமணி போன்ற வேறு பல நாமங்களும் இவருக்கு உண்டு.
தாயார், அகிலாண்டேஸ்வரி. இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று சிறுநீரகப் பிரச்னைகளைப் போக்கும் தலம் இது என்பதுதான்.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள்கூட இந்த ஆலயத்துக்கு வந்து பிரார்த்தனை செய்து பலன்பெற்றிருக்கிறார்கள் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் அந்த அற்புத ஆலயம் குறித்துத் தெரிந்துகொள்வோம்.
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு 40 கி.மீ முன்பாக உள்ளது பாடாலூர். இந்த ஊரிலிருந்து இடப்புறம் பிரியும் சாலையில் 5 கி.மீ தொலைவில் ஊட்டத்தூரை அடையலாம். தண்ணீர் ஊற்றுகள் நிறைந்திருந்த ஊர் இது என்பதால் ஊற்றத்தூர் என்றாகி அதுவே ஊட்டத்தூர் என்று வழங்கப்பட்டது என்கிறார்கள். மேலும் இங்கு வந்தாலே உடல் ஊட்டம் பெறும் என்பதாலும் இந்தப் பெயர் என்பது ஊர்க்காரர்களின் கருத்து.
இங்கே அருளும் அம்பிகை அகிலாண்டேஸ்வரி அழகே வடிவானவள். நான்கு திருக்கரங்கள், இரண்டு திருச்செவிகளிலும் தாடங்கம் அணிந்து நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறாள். இவளை வணங்கினால் திருமண வரம், பிள்ளைப்பேறு கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை. ஈசனின் சந்நிதிக்கு நேர் எதிரிலேயே கோயில் தீர்த்தம் அமைந்திருப்பது சிறப்பம்சம்.
ராஜராஜ சோழன் நோய் உற்றபோது இங்கு வந்து சுத்தரத்னேஸ்வரரை வழிபட்டு தன் நோய்நீங்கப்பெற்றாந் என்கிறார்கள். எனவே வரலாற்றில் ஆரோக்கியம் அருளும் தலமாக இந்தத் தலம் விளங்குகிறது.

இங்கே கோயில் கொண்டிருகும் நடராஜப் பெருமான் திருவடிவே மிகவும் பிரசித்தம். இந்தத் திருமேனி அபூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் ஆனது என்கிறார்கள்.
இந்தக் கல் சூரியக்கதிர்களின் ஆற்றலை ஈர்க்கும் திறன் கொண்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். எனவே இந்தத் தலத்துக்கு வந்து வழிபாடு செய்தாலே அனைவரும் தாங்கள் வேண்டியவற்றை அடையலாம் என்பது நம்பிக்கை.
இவருக்கு அருகிலேயே சிவகாமி அம்மையும் காட்சி தருகிறார். தன் திருமுகத்தைச் சாய்த்து, தனக்கு வலப்புறம் இருக்கும் ஈசனைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற அழகிய ஒயிலான தோற்றத்தில் சிவகாமி அம்மையின் அழகே அழகு.
சிறுநீரகக் கோளாறுகளை நீங்க அருளும் பிரார்த்தனை
ஆடல் அரசனான பஞ்சநதன நடராஜர்தான் சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்யும் மருத்துவன் எனப் போற்றப்படுகிறார்.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, ஒரு கிலோ வெட்டிவேர் வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாகத் தொடுத்து நடராஜருக்கு அணிவித்து, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பிறகு அந்த மாலையைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, ஈசனுக்கு எதிரே அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்த நீரை ஒரு கேனில் (சுமாராக 5 லிட்டர்) எடுத்துச் செல்ல வேண்டும்.
வீட்டுக்குச் சென்றதும், தினமும் இரவில் பிரம்ம தீர்த்த நீரை ஒரு குவளையில் நிரப்பி (100 மி.லி), அதில் ஒரு வெட்டிவேர் துண்டைப் போட்டு ஊற விடவேண்டும். மறுநாள் காலையில் வெட்டிவேரை எடுத்துவிட்டு, அந்தத் தீர்த்தத்தைப் பருகவேண்டும்.
இப்படி 48 நாள்கள் பருகி வர, சிறுநீரகக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம் என்பது ஐதிகம். 48 நாள்களும் இந்தத் தீர்த்தம் கெடாது என்பதும் அதிசயம்.
48 நாள்கள் முடிந்ததும், வெட்டிவேர்த் துண்டுகளை நீர் நிலைகளில் சேர்த்துவிட வேண்டும். இப்படிச் செய்து பலன் பெற்றவர்கள் அநேகம் என்கிறார்கள் ஊரார்.

ஊட்டத்தூர் ஸ்ரீபஞ்சநதன நடராஜருக்கு சம்மேளன அர்ச்சனை எனும் சிறப்பு அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கும். ஈசனுக்கும் அம்பாளுக்கும் சேர்த்துச் செய்யப்படுவதே சம்மேளன அர்ச்சனை என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள்.
2000 ஆண்டுகளைக் கடந்த தலம் இது. கால வெள்ளத்தில் சிதிலமாகிப்போன இந்தக் கோயிலை ராஜராஜ சோழன் மீட்டெடுத்துக் கட்டியுள்ளார். அவருக்குப் பின் அவர் மகன் ராஜேந்திர சோழன் மற்றும் பேரன் ராஜாதிராஜன் ஆகியோர் பராமரித்திருக்கிறார்கள். அவர்கள் மூவரின் திருப்பணிகள் பற்றிய கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன.
இங்குள்ள ஈசனை ஆண்டுதோறும் மாசி மாதம் 12, 13, 14 தேதிகளில் சூரிய பகவானின் கதிர்கள், கருவறை தாண்டி மூலவர் சுத்தரத்னேஸ்வரர்மீது விழுந்து பூஜிக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.
இந்த அற்புதமான தலத்தில் ஈசனை வழிபட்டு நாம் அனைவரும் ஆரோக்கியமும் அருளும் ஒருங்கே பெறலாம்.



















