Long war-க்கு தயாராகும் Iran - USA-வால் சமாளிக்க முடியுமா? - Prof Bernard D' Sam...
ராஜஸ்தான்: 170 ஏக்கரில் ரூ.275 கோடி மதிப்பிலான ஓபியம் தோட்டம் - கண்டுபிடித்து அழித்த காவல்துறை
ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சிலர் ஓபியம் எனப்படும் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் செடிகள் வளர்க்கப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், போலீஸாரும் உதைப்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்டா தாலுகாவில் உள்ள சமோலி, குனா மற்றும் பிப்லி ஆகிய தொலைதூர பழங்குடி மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் சோதனை நடத்தியதில் சுமார் 170 ஏக்கர் அளவுக்கு சட்டவிரோத ஓபியம் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
அதனை பயிரிட்டு இருந்த விவசாயிகள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

அழிக்கப்பட்ட ஓபியத்தின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.275 கோடி என்று போலீஸார் தெரிவித்தனர். இதே போன்று வேறு யாராவது ஒபியம் பயிரிட்டு இருக்கிறார்களா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர். ராஜஸ்தானில் பயிரிடப்படும் ஓபியம் பஞ்சாப்பிற்கு கடத்தப்படுவது விசாரணையில் தெரிய வந்தது.
பஞ்சாப் மாநிலத்தில் பதிந்தா என்ற இடத்தில் போலீஸார் வாகன சோதனை நடத்தியபோது காரில் கடத்தி வரப்பட்ட 6.5 கிலோ ஓபியம் பறிமுதல் செய்யப்பட்டது. அக்காரில் பயணம் செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப்பில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. பஞ்சாப்பிற்கு பாகிஸ்தானில் இருந்து அதிக அளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது.
ஒபியம் எப்படி தயாரிக்கப்படுகிறது?
ஓபியம் (Opium) என்பது கசகசா செடியின் (Papaver somniferum) காயிலிருந்து பெறப்படும் ஒரு போதைப்பொருள். இது மருத்துவ ரீதியாகவும், போதைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கசகசா காயின் பால் (Latex) உலர்த்தப்பட்டு இது தயாரிக்கப்படுகிறது. இதில் மார்ஃபின் (Morphine) மற்றும் கோடின் (Codeine) போன்ற வலிநிவாரணி வேதிப்பொருட்கள் உள்ளன. கடுமையான வலி நிவாரணியாகவும், இருமல் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதோடு இது ஒரு மிகக் கடுமையான போதைப்பொருள். இதற்கு அடிமையானால் உடல் நலம் மற்றும் நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஓபியம் ஹெராயின் தயாரிக்கவும் பயன்படுகிறது.
















