``திருமண ஆசைகாட்டி ரூ.2 கோடி பணம், தங்க நகை மோசடி'' - பெண் டி.எஸ்.பி மீது ஹோட்டல...
கும்பகோணம், இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில்: அவப்பெயர் நீங்கும்... பிள்ளைகளின் கல்வி சிறக்கும்!
கல்வியே நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்கும் மாபெரும் செல்வம். அந்தச் செல்வத்தைக் குறைவின்றிப் பெற்றிட இறையருள் நமக்குத் தேவை. அப்படிப்பட்ட அருளை அள்ளி அள்ளித் தரும் தலம்தான் இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில். கும்பகோணம் - சுவாமிமலை வழியில் புளியஞ்சேரிக்கு வடக்கே 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இன்னம்பர் கோயில்.
இனன் என்றால் சூரியன். சூரியன் ஈசனை நம்பிச் சரண் அடைந்த ஊர் இது. தன் சாபம் தீர சூரியன், இத்தலத்துக்கு வழிபட வந்தபோது நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியவை ஈசனை மறைத்து நின்றன. சூரியன் மனமுருக வேண்டினான். தன் சாபம் தீர ஈசனை அடைய வழிகாட்டுமாறு பிரார்த்தித்தான். சூரியனின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த நந்தி, கொடிமரத்து விநாயகர், பலிபீடம் ஆகியவை விலகி வழி கொடுத்தனர். இதனால் நந்தி விலகிய தலங்களில் இந்தத் தலமும் ஒன்று என்பது சிறப்பு.
அதற்கு நன்றிக்கடனாக ஒவ்வோர் ஆண்டும் ஆவணி 31, புரட்டாசி 1, 2, பங்குனி 13, 14, 15 ஆகிய நாள்களில் சூரியன் ஈசனின் லிங்கத் திருமேனியைத் தன் கிரணங்களால் தொட்டு வழிபாடு செய்கிறான் என்கிறது தலபுராணம். இந்திரனின் யானையானை ஐராவதமும் ஈசனை வணங்கி சாபம் தீர்ந்த தலமும் இதுதான்.

அகத்தியர் தமிழ் கற்ற தலம்
ஈசனின் ஆணைப்படி தென்னகம் வந்த அகத்திய மாமுனிக்கு ஈசன் இங்குதான் தமிழின் எண்ணையும் எழுத்தையும் இலக்கணத்தையும் அறிவித்தான் என்கிறது தலபுராணம். எனவேதான் இத்தல ஈசனுக்கு எழுத்தறிநாதர் என்கிற திருநாமம் ஏற்பட்டது. மேலும் இந்த ஈசன் சுயம்புலிங்கம் என்பதால் தான்தோன்றியீசர் என்றும், அட்சரபுரீஸ்வரர், ஐராவதேஸ்வரர் என்றும் திருநாமங்கள் உண்டு. இந்த ஆலயத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் நமக்கு ஏற்பட்ட அவமானங்கள் நீங்கிப் புகழ் பெருகும் என்றும் சொல்கிறார்கள். இதற்குத் தலபுராணம் சொல்லும் சம்பவம் ஒன்று உண்டு.
இந்த ஆலயத்தின் கணக்கரான சுதன்மன், இந்தக் கோயிலின் பராமரிப்புக் கணக்குகளை மன்னனிடம் ஒப்படைத்தான். மன்னனுக்கு அந்தக் கணக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. இதனால் கலங்கிய சுதன்மன் இவ்வூர் ஈசனிடம் முறையிட்டான். ஈசன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று கணக்குகளை விளக்கி சந்தேகம் தீர்த்தான். மன்னனும் தெளிந்து சுதன்மனை(ஈசனை) பாராட்டினான். அதுகேட்டு வியந்த சுதன்மன் ‘எனக்காக எம் வடிவில் வந்து வினை தீர்த்தனையோ!' என்று சொல்லி இந்தக் கோயிலை மேலும் கட்டி எழுப்பித் தொண்டு செய்தான் என்கிறது தலவரலாறு.
இங்கு அம்பிகை, சுகந்த குந்தளாம்பிகை, நித்யகல்யாணி என்ற இரு தேவியர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். போக சக்தியான நித்யகல்யாணி, எப்போதும் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணம் வேண்டி இந்த தேவியை வழிபடுபவர்களுக்கு விரைவிலேயே திருமண பாக்கியம் கிடைக்கிறது என்கிறார்கள். யோகசக்தியான சுகந்த குந்தளாம்பிகை தவக் கோலத்தில் வீற்றிருக்கிறாள். இவளை வழிபட நிம்மதியும் ஞானமும் கிட்டும்.

இத்தலம்அப்பர் சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்டது. காவிரிக்கரையில் வடகரையில் அமைந்துள்ள 45 வது தலம் இது. கருவறை மூலவர் எழுத்தறிநாதர், பிரமாண்டத் திருமேனியராகக் காணக் காண இனிக்கும் கருணாமூர்த்தியாகத் திகழ்கிறார். கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை அருள் பாலிக்க, கணபதி, முருகப்பெருமான், நடராஜர், தட்சிண கயிலாய லிங்கம், காசி விஸ்வநாதர், நால்வர், விசாலாட்சி, ஸ்ரீமகாலட்சுமி, சண்டேஸ்வரர், சூரியன், சந்திரன், பைரவர், அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, காட்சி கொடுத்த நாதர், துர்க்கை ஆகியோர் தனிச்சந்நிதிகளில் அருள்கிறார்கள். பலா, செண்பகம் தல விருட்சங்கள். ஐராவதம் உண்டாக்கிய ஐராவத தீர்த்தம் சாபம் தீர்க்கும் சாப விமோசனியாக உள்ளது.
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் ஐந்து கலசங்கள் கொண்டுள்ளது. இவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களைக் குறிக்கிறது. கிழக்கு நோக்கிய இக்கோயிலில் கொடிமரமில்லை, பலிபீடம், நந்தி உள்ளன. ஈசனின் கருவறை முன்புறம் உள்ள டிண்டி, முண்டி என்ற தூவரபாலகர்கள் வேறெங்கும் இல்லாத வடிவங்கள் கொண்டவர்கள்.
பேச்சுத் திறமையும் கல்வியும் பெருக...
பேச்சில் வல்லமை பெறவும், நேர்முகத் தேர்வில் விளக்கவும் இங்கு வந்து ஈசனை வேண்டி அர்ச்சனை செய்து, தேனை வைத்து மந்திரத்தை எழுதி ‘ஓம் ஸ்ரீ அக்ஷரபுரீஸ்வராய நம:
ஓம் ஸ்ரீ அகஸ்தியாய நம: ஓம் ஸ்ரீசரஸ்வதியே நம:' என்று பிரார்த்தனை செய்தால் பலன் பெறலாம் என்கிறார்கள். பிறந்த குழந்தை முதல் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் வரை இங்கு வந்து பலன் பெற்றோர் அநேகம் என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர்.
பள்ளியில் சேரும் முன்பாக குழந்தைகளை இங்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். முதன்முறையாக அவர்களுக்கு நெல்லில் எழுத இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குச் செம்பருத்திப்பூவைத் தட்டில் கொட்டி எழுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பேச்சுத்திறமை குறைந்தவர்கள், படிப்பறிவு மந்தமானவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக்கூர்மை பெறுவர் என்பது நம்பிக்கை.

திருமண வரம் வேண்டும் ஆண்கள் 60 மஞ்சள் கிழங்குகளும், பெண்கள் 61 மஞ்சள் கிழங்குகளும் வாங்கி, அதோடு தேங்காய், பழம், எலுமிச்சை, மாலை எல்லாம் வாங்கிக் கொண்டு, ஒரு பௌர்ணமி நாளில் வரவேண்டும். நித்யகல்யாணி அம்மை சந்நிதியில் அர்ச்சனை செய்தபின், அவர்கள் வாங்கி வந்த மாலையைப் போடுவார்கள். ஆலயத்தை வலம் வந்து வணங்கிச் சென்றால், 60 நாள்களுக்குள் கல்யாணம் முடிந்துவிடும் என்பது ஐதிகம்.





















