`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!' - சமூக மாற்றத்திற்காகச் சுழலும் கா...
குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!
குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்ட தண்ணீர் டேங்க் ஒன்றை கட்டியது.
இதனை கட்டுவதற்கு தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் சமீபத்தில் தண்ணீர் டேங்கை கட்டி முடித்தார். இதையடுத்து அரசு பொறியாளர்கள் தண்ணீர் டேங்கை ஆய்வு செய்வதற்காக வந்தனர். அவர்கள் தண்ணீர் டேங்க் முழுக்க தண்ணீரை நிரப்பினர். தண்ணீரை நிரப்பியபோதே தொட்டியில் கசிவு ஏற்பட்டது. தண்ணீர் முழுமையாக நிரப்பியவுடன் அதிகாரிகள் முன்னிலையில் தொட்டி அப்படியே இடிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 3 பேர் காயம் அடைந்தனர். கட்டி முடிக்கப்பட்டவுடன் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மிகவும் தரமில்லாத பொருட்களை கொண்டு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க மாநில அரசு 7 தனிப்பிரிவுகளை அமைத்து இருக்கிறது. இது தவிர போலீஸார் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்து அதிரடி ரெய்டு நடத்தி 7 பேரை கைது செய்து இருக்கின்றனர். மேலும் அரசின் துணை நிர்வாக பொறுப்பாளர் இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய பல அதிகாரிகள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரூ.21 கோடியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி நொடியில் அப்படியே அப்பளம் போன்று உடைந்து விழுந்தது மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


















