மதுரை: `நாம தான் ஜெயிக்கிறோம், எப்பவுமே நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்'- மு.க.ஸ்டா...
கும்பகோணம்: பாமக மாவட்ட செயலாளர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிவு! - பின்னணி என்ன?
கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி 3-ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு வயது 20. திருமங்கலக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவருக்கும் வயது 20. இருவரும் பள்ளி படிக்கும் போதிலிருந்தே பழகி வந்துள்ளனர். பாலகிருஷ்ணன் அந்த மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாணவிக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயம் செய்திருந்தனர்.

இதையடுத்து கடந்த 17-ம் தேதி கல்லூரிக்கு வந்த மாணவியிடம் பேச வேண்டும் என்ற பாலகிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயற்சி செய்ததாவும், இதற்கு மாணவி மறுத்ததால் அவரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் மாணவி மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து மாணவனை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வலுகட்டாயமாக தாலி கட்டுவதற்கு செய்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க-வினர் (ராமதாஸ் அணி) ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக அறிவித்ததுடன், கும்பகோணம் பகுதியில் போஸ்டரும் ஒட்டினர். இந்நிலையில் வருகிற 27ம் தேதிக்குள் மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் 28ம் தேதி அன்று ஆடுதுறையில் கடையடைப்பு செய்து, ஊர்வலம் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தங்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து மற்றும் பதிவுகளை பா.ம.க. தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ம.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணனின் அம்மா கும்பகோணம் மேற்கு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீஸார் ம.க.ஸ்டாலின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



















