செய்திகள் :

கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில் : தென்னக அயோத்தி... ராமாயண ஓவியங்கள்... வேண்டிய வரம் தரும் சந்நிதி!

post image

அயோத்தி ராமபிரான் அவதரித்த தலம். வாழ்வில் ஒருமுறையேனும் அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம். அந்தத் தலத்துக்கு இணையான புண்ணியத்தைத் தரும் தலம் கும்பகோணத்தில் உள்ளது. இங்கு சென்று ஸ்ரீராமபிரானை தரிசனம் செய்தால் அயோத்தி சென்ற பலன் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். அதனாலேயே அதற்குத் தென்னக அயோத்தி என்றே பெயர். வாருங்கள் அந்த அற்புதத் தலம் குறித்து அறிந்துகொள்வோம்.

கும்பகோணத்தின் மத்தியில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். கும்பகோணம் மாநகரின் மத்தியில் பெரிய கடைவீதியின் தென்கோடியில் ஐந்து நிலை கோபுரமும் பரந்து விரிந்த பிராகாரமும் கொண்ட கோயிலாக இது விளங்கிவருகிறது. இங்கே ராமபிரான் பூலோகச் சக்கரவர்த்தியாக பட்டாபிஷேக கோலத்திலேயே அருள்கிறார். எனவே இவரை வழிபட்டால் பதவி யோகம், சொல்வாக்கு, அரசபோக வாழ்வு என அனைத்தும் கிடைக்கும் என்கிறார்கள்.

கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில்

பூலோக வைகுந்தம் என்றும் இந்தத் தலம் போற்றப்படுவதால் இந்த ஆலயத்தின் பிராகாரத்தில் மூன்று முறை வலம் வந்தாலே சம்பூர்ணமாக ராமாயணத்தை முழுமையாகப் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை நியாயமான செல்வங்களும் நீதியும் கிடைத்துவிடும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை வலம் வந்து வேலை, பதவி, சாதகமான தீர்ப்பு, மங்கல காரியங்கள் எனப் பலவும் அடைகிறார்கள் பக்தர்கள்.

கி.பி 1614-ம் ஆண்டு இந்த ஆலயம் தஞ்சை ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. ராமபக்தரான இவர் தினமும் ராம சரிதத்தைக் கேட்டும் படித்தும் இன்புற்று வாழ்ந்தார். பண்டிதர்கள் ராம கதையைப் படிக்கும்போதும் சொல்லும்போதும் மெய்சிலிர்த்து, அந்தப் பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே தாம்பூலம் மடித்துக்கொடுத்து மகிழ்வாராம். இதனால் `அனுவிரத ராம கதாம்ருத சேவகன்' என்ற சிறப்புப் பெயரே உண்டானதாம்.

இந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாக கருவறையில், ஸ்ரீராமரும் சீதா பிராட்டியும் ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி தர, பரதன் குடைபிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, லக்குவணன் ஸ்ரீராமரின் வில்லைத் தாங்கி நிற்கும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றனர். அனுமனோ வேறெங்கும் காண இயலாதவகையில் ஆனந்த நிலையில் அருளுகிறார். ஸ்ரீராமரையும் சீதாவையும் தரிசித்தபடி கருவறை வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார் அனுமன். இவரின் திருக்கரத்தை வீணை அலங்கரிக்கிறது. சதா சர்வ காலமும் ராமநாமத்தை அவரது சந்நிதியில் அமர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்யும் சிரஞ்சீவியாக அனுமன் அருள் பாலிக்கிறார். இங்கே நின்று உள்ளம் உருக ராம நாமத்தை உச்சரிப்பவர்கள், இகபர சுகங்களை அடைவதோடு அனுமனின் பாதுகாப்பிலும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில்

இங்குள்ள அர்த்த மண்டபத்தில் சிற்ப வடிவில் கரம் கூப்பி வழிபடும் கோலத்தில் காட்சி தருகிறார் கோவிந்த தீட்சிதர். இவர்தான் இந்த ஆலயத் திருப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட மகான்.

காசிக்கு நிகரான புனிதமும் அயோத்திக்கு நிகரான பெருமையும் கொண்ட இந்தக் கோயில் சிற்ப அழகிலும் தன்னிகரற்று விளங்கிவருகிறது. அதில் மிகவும் சிறப்பானவை மகாமண்டபச் சிற்பங்கள் மற்றும் பிராகார ஓவியங்கள். முக்கியமாகப் பிராகாரத்தில் உள்ள ராமாயணக் காட்சிகளைச் சித்திர வடிவில் தரிசித்தபடி ஒருமுறை வலம் வந்தால் முழுமையாக ராமாயணத்தைப் பாராயணம் செய்த திருப்தியும் பலனும் கிடைத்துவிடும். முன் மண்டபத்தில் உள்ள 62 தூண்களும் சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. அதில் பெருமாளின் பல்வேறு அவதார வடிவங்களும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

அட்சய திருதியை நாளில் கும்பகோணத்தில் நடைபெறும் 14 கருடசேவை விழாவில் இந்த ராமசாமியும் கருடன் மீதேறி அருளுவார். அவருடன் கும்பகோணம் சார்ங்கபாணி, சக்கரபாணி, ராஜ கோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரஹாரம் ஸ்ரீபட்டாபிராமர், மல்லுக தெரு ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், புளியஞ்சேரி ஸ்ரீவேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மேலக்காவேரி வரதராஜப் பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி உள்ளிட்ட 11 பெருமாள்களும் எழுந்தருளி சேவை சாதிப்பார்கள். இங்கு ராம நவமி உற்சவம் வெகு பிரசித்தம்.

கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில்

இங்கே கோயில்கொண்டுள்ள பட்டாபிஷேக ராமரை தரிசித்தால் நியாயமான அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது உறுதி. எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை கும்பகோணம் சென்று ராமசாமி கோயிலை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

தருமபுரி, நெருப்பூர் குகை நரசிம்மர் கோயில் : சுயம்புத் திருமேனி; நோய் தீர்க்கும் தலம்!

பெருமாள் நரசிம்மராக அருளும் தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நெருப்பூர் குகை நரசிம்மர் கோயில். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்திலிருந்து தென்மேற்கில் சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது நெருப்பூர்.... மேலும் பார்க்க

சென்னை பெரியமேடு ஸ்ரீபிரசன்ன வேங்கடேசபெருமாள் கோயில்: நெல்லிக்காய் தீபம் ஏற்றினால் செல்வவளம் சேரும்!

சென்னையில் உள்ள வைணவத்தலங்களில் மிகவும் பழமையானது ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் திருக்கோயில். இந்த ஆலயம் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும், ரிப்பன் மாளிகைக்கும் அருகில் உள்ள `பெரியமேடு' என்ற பகு... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டம் தலைமலை சஞ்ஜீவிராயப் பெருமாள் கோயில் : திருப்பதிக்கு நிகரான திருத்தலம்!

திருப்பதிக்கு இணையான தலங்கள் பல நம் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் இயற்கை எழில் சூழ்ந்த மலையில் இருக்கும் அற்புதத்தலம்தான் தலைமலை. இந்த மலை உச்சியில் கோயில் கொண்டு அருள்கிறார் சஞ்ஜீவிராய பெருமாள். இவரை... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் மலைத்தலம்!

அழகர்கோயில் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது மதுரை அழகர்மலையில் அமைந்திருக்கும் கள்ளழகர் திருக்கோயில்தான். அதற்கு நிகரான பெருமையோடும் அழகோடும் திகழ்கிறது ஒரு தலம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த ... மேலும் பார்க்க

தேனி, அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்: கால்நடைகள் பெருக, வேலை கிடைக்க, செல்வம் சேர அருளும் தலம்!

தமிழக கிராமங்கள்தோறும் முறுக்கு மீசையும் மிரட்டும் விழிகளுமாகக் காட்சி அருள்வார் ஐயனார். ஊரைக்காக்கும் கடவுளாக அவர் எழுந்தருள்வதால் அந்தத் திருவடிவம் நமக்கு பயம் தராமல் அபயத்தையே தரும். அப்படிப்பட்ட ஐ... மேலும் பார்க்க

ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் விழா; மஞ்சள் பூசி மகிழ்ந்த மக்கள் | Photo Album

ஈரோடு பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் விழா ஈரோடு பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் விழா ஈரோடு பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் விழா ஈரோடு பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் விழா ஈரோடு பெரிய மாரி... மேலும் பார்க்க