ராஜ ராஜ சோழனின் 1,041-வது சதய விழா - விழாக்கோலத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில்!
குலசை தசரா திருவிழா: விண்ணைப் பிளந்த பக்தர்களின் காளி கோஷம்; விமரிசையாக நடந்த மகிஷாசூரசம்ஹாரம்
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், ”குலசை” என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினம், அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தசராத் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டு தசராத்திருவிழா, கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள் காப்பு கட்டினர்.

திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெற்றது. 10-ம் திருவிழாவான நேற்று காலை முதல் மாலை வரை முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவு சிறப்பு அலங்கார பூஜைக்குப் பிறகு மகிஷாசூரமர்த்தினி கோலத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரை நோக்கிப் புறப்பட்டார். அங்கு மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற்றது.
முதலில் மகிஷாசூரனையும், இரண்டாவதாக சிங்கமுகனையும், மூன்றாவதாக எருமை முகனையும், இறுதியாக சேவல் முகத்தோனையும் சம்ஹாரம் செய்தார். கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், “ஓம் காளி... ஜெய் காளி...” கோஷம் எழுப்பினர். சம்ஹாரம் முடிந்து இன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில் கடற்கரை மேடையில் எழுந்தருளியதும் அபிஷேக ஆராதனை நடந்தது.

பின்னர், 2 மணியளவில் சாந்தாபிஷேகத்தைத் தொடர்ந்து 3 மணிக்கு திருத்தேர், நிலையம் வந்ததடைந்தது. அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம் நடந்ததும், பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெற்றது. இன்று மாலை 4:30 மணிக்கு அம்மன் திருக்கோயிலை வந்தடைந்ததும் காப்பு களைதல் நடைபெறுகிறது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், புஷ்பாஞ்சலியுடன் தசராத்திருவிழா நிறைவு பெறுகிறது.
குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சூரசம்ஹாரத்தைக் காண கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் மழையால் அவதிக்குள்ளாகினர். பிளாஸ்டிக்தாள், விரிப்பிற்காகக் கொண்டு வந்திருந்த டிஜிட்டல் பேனர்களை தலையில் பிடித்தபடியே மழையிலிருந்து தற்காத்துக் கொண்டனர்.
மாலை முதல் இரவு வரை மழை சாரலாக நீடித்தது. வழக்கமாக மின்தடை ஏற்படாத வகையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்ப்படும். ஆனால், இந்தாண்டு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கினால் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மின் தடையால் பக்தர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பல பகுதிகளில் மின் விநியோகம் சீராகாததால் இரவு 9:30 மணியைக் கடந்தும் இருள் சூழ்ந்தே காணப்பட்டது. போக்குவரத்து ஓரளவு சீரமைக்கப்பட்டும் பல பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. திருகோயில் கருவறை முன்புள்ள மண்டபத்திற்குள் சினிமா பாடல்களுக்கு நடனமாட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தடையை ஆடல் பாடல்குழுவினர் குத்தாட்டம் போட்டதை போலீஸார் கண்டுகொள்ளவில்லை.
இதனால், ஆடல் பாடல் குழுவினருக்கு இடையே நடனமாடுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குலசேகரன்பட்டினத்தில் திரும்பும் திசையெங்கும் செவ்வாடை அணிந்த பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளித்தது.



















