இந்தியா கூட்டணி: ``காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது" - திமுக ...
குழந்தைகளுக்கான Social Media Ban: `தடை மட்டும்தான் தீர்வா?' - சூழலை விளக்கும் உளவியலாளர்
ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் தடை
சமூக ஊடகப் பயன்பாடு குழந்தைகள் மத்தியில் வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் சமூக ஊடக பயன்பாடு குழந்தைகளிடம் எத்தகைய எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்த கவலை பலரிடமும் எழத் தொடங்கியுள்ளது.
இதற்கு மத்தியில் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளைத் தொடர்ந்து மலேசியாவிலும் 16 வயதுக்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முறையாக வயது சரிபார்ப்பு செய்யாத நிறுவனங்களுக்கு 2.5 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது போன்ற தடை குழந்தைகளின் மனநிலையை எவ்வாறு பாதிக்கும், இதன் நன்மைகள் என்ன, இந்தியாவிலும் இது போன்ற தடை தேவையா போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார், உளவியலாளர் அமலா டெய்சி பிரகாஷ்.
"இந்தத் தடை குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்குவதைத்தான் ஓரளவுக்குத் தவிர்க்குமே தவிர, பெற்றோரின் கணக்குகளை அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தடை மட்டும் முழுமையான தீர்வாக இருக்காது.
சமூக ஊடகங்கள் குழந்தைகள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. உடனுக்குடன் நடப்புகளைத் தெரிந்துகொள்ளவும், அறிவை வளர்த்துக்கொள்ளவும் துணை செய்கின்றன. சமூக ஊடகங்கள் மூலம் அவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன. அந்தத் திறமைகளுக்கான அங்கீகாரமும் கிடைக்கிறது. தொழில்நுட்ப அறிவைப் பெறவும், அறிவைப் பகிர்ந்துகொள்ளவும், கல்வி சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளவும் அவை உதவுகின்றன.

நன்மையும், தீமையும் உண்டு
ஆனால் குழந்தைகள் சமூக ஊடகங்களை அறிவு சார்ந்த நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. குறுகிய நேரக் காணொளிகள், தொடர்ச்சியான அறிவிப்புகள் போன்றவற்றைப் பார்க்கத் தொடங்கும்போது கவனச்சிதறல் ஏற்படலாம். கொஞ்சம் கொஞ்சமாக மொபைல் போனுக்கு அடிமையாகும் நிலை உருவாகலாம். இது அவர்களின் மூளை வளர்ச்சி, கண் ஆரோக்கியம், கற்றல் திறன் ஆகியவற்றையும் பாதிக்கக்கூடும். மறதி அதிகரிக்கலாம். சில வினாடிகளுக்கு மேல் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகலாம். இதனால் படிப்பும் பாதிக்கப்படலாம்.
மேலும், இணைய மிரட்டல் (Cyber Bullying), ஆன்லைன் தொல்லைகள், பிறருடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை போன்றவற்றை குழந்தைகளால் எளிதில் கையாள முடியாது. இவை அவர்களிடம் மன அழுத்தம், தன்னம்பிக்கை குறைவு, பதற்றம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

அதே நேரத்தில், சமூக ஊடகங்களை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்த குழந்தைகளுக்கு திடீரெனத் தடை விதிக்கப்படும்போது சில உளவியல் பாதிப்புகளும் ஏற்படலாம். ஏமாற்றம், கோபம், எரிச்சல், தனிமை உணர்வு போன்றவை உருவாகலாம். நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முடியவில்லை என்ற உணர்வும் சிலருக்கு ஏற்படக்கூடும். குறிப்பாக சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு பழக்கப்பட்ட குழந்தைகள் ஆரம்பத்தில் மன அமைதியின்மை மற்றும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற உந்துதலை அனுபவிக்கலாம். எனவே முழு தடையை விட படிப்படியாக குறைப்பது, பெற்றோர் வழிகாட்டுதலுடன் ஊடகங்களைப் பயன்படுத்துவது பலனளிக்கும்.
இந்தத் தடை மூலம் திரை நேரம் குறைவது, தூக்கத்தின் தரம் மேம்படுவது, நேரடி சமூக உறவுகள் அதிகரிப்பது போன்ற நன்மைகள் கிடைக்கலாம். ஆனால் குழந்தைகள் தடை செய்யப்பட்டதால் சமூக ஊடகங்களை முற்றிலும் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள் என்று கூற முடியாது.
படிப்படியாகக் குறைப்பது நல்லது
சமூக ஊடகப் பயன்பாட்டை திடீரென நிறுத்துவதற்குப் பதிலாக படிப்படியாகக் குறைப்பது நல்லது. ஒரு குழந்தை சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்தி வந்திருந்தால், அதற்கு மாற்றாக விளையாட்டு, வாசிப்பு, கலைச் செயல்பாடுகள், நேரடி நண்பர்கள் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும். வெறுமனே மொபைலைப் பறித்துக்கொள்வது மட்டும் தீர்வாக இருக்காது.
பெற்றோர்கள் குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்குப் பதிலாக அவர்களுடன் உரையாட வேண்டும். சமூக ஊடகங்களில் அவர்கள் என்ன பார்க்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள், என்ன மாதிரியான அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் ஏதேனும் இணைய மிரட்டல் அல்லது மனஅழுத்தத்தை சந்தித்தால் அதைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளக்கூடிய சூழலை வீட்டில் உருவாக்குவது முக்கியம்.

மேலும், பெற்றோர்களே மொபைல் மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை அதிகரிப்பது, திரை நேரத்திற்கான தெளிவான வரம்புகளை அமைப்பது, வயதுக்கேற்ற டிஜிட்டல் கல்வியைக் கொடுப்பது போன்றவை குழந்தைகள் சமூக ஊடகங்களை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த உதவும்.
இந்தியாவைப் பொறுத்தவரை முழுமையான தடை தேவையா என்பது குறித்து விரிவான ஆய்வுகள் தேவை. ஆனால் குழந்தைகளுக்கான வயது வரம்பு, பெற்றோர் கண்காணிப்பு, டிஜிட்டல் கல்வி, இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை வலுப்படுத்துவது தற்போது மிகவும் அவசியமாக உள்ளது. சமூக ஊடகங்களைத் தடை செய்வதை விட, அவற்றை பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த கற்றுக்கொடுப்பதே நீண்டகாலத்தில் சிறந்த தீர்வாக இருக்கும்." என்கிறார்.














