SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும்...
கூட்டணி ஆட்சியில் உறுதியாக நிற்கும் பிரேமலதா; தயங்கும் பிரதான கட்சிகள்; குழப்பத்தில் நிர்வாகிகள்!
"மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும், இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாகச் சரியான நேரத்தில் முடிவெடுப்போம், கூட்டணி அமைச்சரவையில் நாங்கள் இருப்போம்" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழுத்தமாகப் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் நடந்த தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தேமுதிக உடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கின்றன. மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும்.
இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாகச் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம். கூட்டணி மந்திரி சபையில் நாங்கள் இருப்போம்.
மதுரை மண்ணின் மைந்தர் கேப்டன், இந்த மண்ணின் மருமகள் நான். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் பல பிரச்னைகள் உள்ளன. போதைப் பொருள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்ட ஒழுங்கு பிரச்னை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் வரும் தேர்தலில் நாம் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இன்று யார், யாரோ மாநாடு நடத்துகிறார்கள், கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், ஆனால் அதற்கெல்லாம் முன்மாதிரியாக இருப்பது, இருந்தது நம்முடைய கேப்டன் மதுரையில் நடத்திய முதல் மாநில மாநாடுதான். மதுரையில் ஏற்கனவே இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம்.
மீண்டும் நிறைய சட்டமன்றத் தொகுதிகளை வென்றெடுப்போம். மக்கள் விரும்பும் கூட்டணி உறுதியாக அமைக்கப்படும். அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என விரும்புகின்றன. இந்த முறை கூட்டணி மந்திரி சபை கண்டிப்பாக அமையும்'" என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "யாருடைய கூட்டணியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கூட்டணிகள் மாறலாம், தேர்தல் நேரத்தில் முடிவு தெரியவரும். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியொரு சூழல் வந்தால் அதற்குச் சம்பந்தப்பட்ட கட்சிகள் உடன்படுவார்கள்.
ஏற்கனவே திமுக, அதிமுக இரு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலிலும் அப்படியொரு சூழல் வரலாம், அப்போது கூட்டணி ஆட்சி அமையும். எல்லா கட்சிகளும் எங்களுக்குத் தோழமைக் கட்சிகள்தான். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூட என்னைச் சந்திக்க வந்துள்ளார்" என்றார்.

ஆர்.பி.உதயகுமார் வந்து சந்தித்துப் பேசியதன் மூலம் அதிமுக தரப்பில் தேமுதிக-வுடன் கூட்டணி வைக்க முயற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படும் சூழலில், 'கூட்டணி ஆட்சி' என்ற கருத்தை பிரேமலதா திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருவது அதிமுக தலைமையை அதிருப்தி அடையச் செய்யும் என்றும், அதிலும் ஆளும்கட்சியான திமுக இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ளாது என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
நம்மிடம் பேசிய தேமுதிக நிர்வாகிகள்,"'கடந்த 10 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் அதிமுக, திமுக ஆட்சியில் எந்தச் செயல்பாடும் இல்லாமல் கட்சித் தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர். இந்த நிலையில் சுமூகமாக ஏதாவதொரு பிரதான கட்சியின் கூட்டணியில் இணைந்து கட்சியினரை உற்சாகப்படுத்த வேண்டும். அதைவிட்டு, கூட்டணி ஆட்சி என்று டிமாண்ட் வைத்தால் மூன்றாவது அணியாகத் தனித்து நிற்கும் நிலை வந்துவிடும், அண்ணியார் இதைப் பரிசீலிக்க வேண்டும்" என்றனர்.














