கூட்டுறவு வங்கி: விவசாயிகளின் ரூ.5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; தமிழ்நாடு அ...
கூட்டுறவு வங்கி: விவசாயிகளின் ரூ.5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாரணையில், ''தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, கடந்த 01.05.2025 முதல் 28.02.2026 வரையிலான காலக்கட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று நிலுவை வைத்துள்ள விவசாயிகளின் உத்தேச கடன் தொகையான ரூ.5,932.23 கோடியைத் தள்ளுபடி செய்வதற்கான இந்த அரசாணையை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு கடன் தொகையும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், 75,000 ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 35,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சமாக ரூ.35,000/-ம், அதிகபட்சமாக ரூ.75,000/- வரையிலும் பணப்பயன் கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இந்தக் கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதில் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள 8,33,773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடியும், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள 5,16,183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.42 கோடியும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.337.14 கோடியும் உத்தேசமாகத் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
இப்பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க பல்வேறு முக்கிய நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் பெற்ற பயிர்க்கடன்களுக்கு இத்தள்ளுபடி பொருந்தாது.
கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுவினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற கடன்களுக்கு விலக்கு அளிக்கப்பட மாட்டாது.
ஆதார் மற்றும் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) எண்ணின் அடிப்படையில், ஒரே விவசாயி அல்லது ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்க்கடன்கள் பெறப்பட்டிருந்தால், ஏதேனும் ஒரு கடனுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும்.
வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் குத்தகை விவசாயிகளுக்கும் பயிரிடும் பரப்பின் அடிப்படையில் இந்தத் தள்ளுபடி பொருந்தும்; ஆனால் நில உரிமையாளருக்கு இத்திட்டம் பொருந்தாது.
போலியான, புனையப்பட்ட ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட கடன்கள் மற்றும் பினாமி கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேலும், 01.05.2025-க்கு முன்னர் பெற்ற கடன்களுக்கும், 28.02.2026 அன்றைய நிலுவைக்குப் பின் அரசாணை வெளியிடுவதற்குள் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, இத்திட்டத்திற்கான தகுதியான விவசாயிகளின் பட்டியல் e-PACCS ERP மென்பொருள் தரவுகள் மூலம் சங்கம் வாரியாக சரிபார்க்கப்படும்.
இதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளர், துறை அலுவலர் மற்றும் கூட்டுறவுத் தணிக்கைத் துறை அலுவலர் அடங்கிய சிறப்புச் "சரிபார்ப்புக் குழு" அமைக்கப்படும். இக்குழுவினர் 21 நாட்களுக்குள் சரிபார்த்து பட்டியலைச் சமர்ப்பிப்பர்.
பின்னர், TNeGA (தமிழ்நாடு மின் ஆளுமை முகமை) மூலம் இறுதிப் பகுப்பாய்வு செய்யப்பட்டு 45 நாட்களுக்குள் தள்ளுபடித் தொகை கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசால் முழுமையாக விடுவிக்கப்படும்.
கடன் தள்ளுபடி முழுமையாக நேர் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, அவர்கள் பிணையாக வைத்த அசல் நில ஆவணங்கள் மற்றும் நகைகள் உடனடியாகத் திருப்பி அளிக்கப்படும்.
மேலும், கடன் நிலுவை ஏதுமில்லாத விவசாயிகள், வரவிருக்கும் சாகுபடிப் பருவத்திற்குப் புதிய பயிர்க்கடன்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதி உடையவர்களாவர் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.














