'கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது, திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது' - நயினார...
`கெட்ட கொழுப்புன்னு ஒண்ணுமே இல்ல’ - US டாக்டர் சொன்னது உண்மையா?
கெட்ட கொழுப்பு என்று எதுவும் இல்லை என்று பரபரப்பையும், கூடவே கொழுப்புக் குறித்த பயத்தில் இருக்கிற நம் அனைவருக்கும் ’அப்பாடா’ என்கிற நிம்மதியையும் ஒருங்கே கொடுத்திருக்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் டாக்டர் ஜேக் வோல்ஃப்சன் (Dr Jack wolfson).
இது குறித்த உண்மையை அறிந்துகொள்ள சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களிடம் பேசினோம்.

’’முதலில் கொழுப்பு என்பதே கெட்டது கிடையாது. நம் உடலில் இருக்கிற கோடிக்கணக்கான செல்களின் வெளிப்புறச் சுவரே கொழுப்பால் உருவாக்கப்பட்டதுதான். நம்முடைய மூளையே கொழுப்பால் ஆன பிண்டம்தான்.
ஹார்மோன்கள் சீராக இயங்க, வைட்டமின் டி நம்முடைய உடம்புக்குக் கிடைக்க கொழுப்பு மிக மிக அவசியம். அதனால்தான் மருத்துவர்கள் நாங்கள் கொலஸ்ட்ரால் என்பது கெடுதல் கிடையாது என்பதை அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறோம்.
அப்படியென்றால் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள் என்கிற கேள்வி எழலாம். ரத்த நாளங்களில் படிவதால் அதற்கு கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) என்று பெயர் வைத்தார்கள். ஆனால், அதனுடைய உண்மையான வேலை என்னவென்று பார்த்தீர்கள் என்றால், நம்முடைய ஒவ்வொரு செல்களுக்கும் கொழுப்புச் சத்தை கொண்டு போய் சேர்ப்பதுதான்.
செல்கள் தங்களை புணரமைத்துக் கொள்வதற்கு, எப்படி நீர் தேவையோ, குளுக்கோஸ் தேவையோ அதே போல கொழுப்பும் தேவை. மற்றபடி எல்டிஎல் கொழுப்பின் வேலை ரத்த நாளங்களில் படிவது இல்லை.

ஆனால், இந்த எல்டிஎல் கொழுப்பை நமக்கு கெடுதலாக மாற்றுவது நாம்தான். அதிகமான மாவுச்சத்தை சாப்பிட்டு ரத்தத்தில் இன்சுலினை அதிகமாக இருக்க வைக்கிறோம். இதனால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலை வருகிறது. இதனால் ரத்த நாளங்களின் உள்புற சுவர்களில் உப்புத்தாளை வைத்து தேய்த்ததுபோல உள்காயங்கள் ஏற்பட்டிருக்கும்.
இந்த உள்காயங்களின் மேல் கெட்ட கொழுப்பு என்று சொல்லப்படுகிற எல்டிஎல் படிகிறது. ஏற்கனவே உங்கள் உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலை இருக்கிறது என்றால், உள் காயங்களின் மேல் படிகிற எல்டிஎல் கொழுப்பானது ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட எல்டிஎல் கொழுப்பாக மாறுகிறது.
இதனால் ரத்த நாளங்களில் படிந்த எல்டிஎல் கொழுப்பானது காயங்களின் வழியாக உள்ளே ஊடுருவி ரத்த நாளங்களுக்கு கீழே படிய ஆரம்பிக்கிறது. இது ஒரு கட்டத்தில் மெத்தை போல ஆகிவிடும். இதைத்தான் காரை அல்லது அடைப்பு என்று குறிப்பிடுவோம். ஆங்கிலத்தில் பிளேக் (Plaque).
இது மெள்ள மெள்ள நம் ரத்த நாளங்களின் விட்டத்தை குறைக்க ஆரம்பிக்கும். இந்த அடைப்பு திடீரென்ற, தாங்க முடியாத ஸ்ட்ரெஸ் காரணமாக அதன் தன்மையை இழந்தால் அதில் வெடிப்பு ஏற்படும். இந்த நேரத்தில்தான் மாரடைப்பு ஏற்படும்.

நமக்கு உதவி செய்வதற்காக இருக்கிற எல்டிஎல் கொழுப்பு மாரடைப்பு வரை ஏற்படுத்துவதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறைதான். நம்முடைய மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, இவை அத்தனையும் சேர்ந்துதான் எல்டிஎல் கொழுப்பை கெட்ட கொழுப்பாக மாற்றுகிறது.
தவிர, ரத்தத்தில் எப்போதுமே இன்சுலினை வைத்திருக்கும் நம்முடைய மாவுச்சத்து அதிகமான உணவு முறை. ஆக, எல்டிஎல் கொழுப்பால் நமக்கு எந்த பிரச்னையும் கிடையாது. நம் வாழ்க்கை முறையால் அது ஆக்சிஜனேற்றம் அடையும்போதுதான் கெட்ட கொழுப்பாக மாறி நம் உயிருக்கே கெடுதல் செய்து விடுகிறது.
செல்களின் வெளிப்புறங்களுக்கு உதவுவது; பிறகு கல்லீரலில் இருப்பது என, நாம் கெட்ட கொழுப்பு என்று சொல்கிற எல்டிஎல் அதுபாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டு என்றுதான் இருக்கும். அதனால்தான், அந்த அமெரிக்க இதயவியல் மருத்துவர் கெட்ட கொழுப்பு என்று எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாம் நல்ல கொழுப்பு என்று சொல்கிற ஹெச்டிஎல் கொலஸ்ட்ராலிலும் கெட்ட ஹெச்டிஎல் இருக்கிறது தெரியுமா..? ஹெச்டிஎல் கொழுப்பும் ஆக்சிஜனேற்றம் அடைந்தால் அதுவும் கெட்ட கொழுப்பாகத்தான் மாறும். இதற்கும் அதிக மாவுச்சத்து சாப்பிடுவது, ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைபார்ப்பது, இரவுகளில் தூங்காமல் இருப்பது, ஸ்ட்ரெஸ் ஆவது என அதே காரணங்கள்தான். நான் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்னைகளில் ஒன்றிரண்டை நீங்கள் தினமும் செய்து வந்தால், எல்லா கொழுப்பும் கெட்ட கொழுப்புதான்.
நம்முடைய ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக இன்சுலின் இருந்தாலே பிரச்னைதான். இவற்றைத் தவிர மரபணு என்றொரு பிரச்னை இருக்கிறது. வாழ்க்கை முறை சரியாக இருந்தாலும் அவர்களுடைய மரபணுவில் நீரிழிவு, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் வலுவாக இருந்தால் பிரச்னை வரும். ஆனால், இது அரிது தான்.
மூன்று வேளையும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்டு விட்டு, குப்பை உணவுகளையும் சாப்பிட்டால் எந்தக் கொழுப்பும் கெட்ட கொழுப்பாகத்தான் செய்யும். அதனால், குப்பை உணவுகள் வேண்டவே வேண்டாம். உங்கள் வாழ்வியல் ஆரோக்கியமாக இருந்தால் கொழுப்பு குறித்த அச்சமே உங்களுக்கு தேவையில்லை.
ரத்தத்தில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் 115-க்கும் கீழே இருந்தால்தான் நார்மல் என்கிறார்கள். ஆனால், ஹார்ட் அட்டாக் வருபவர்களில் 50 சதவீத பேருக்கு இந்த அளவில்தான் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதாவது கெட்ட கொழுப்பு இருக்கிறது. அப்படியென்றால் மாரடைப்புக்கு இது மட்டுமே காரணம் அல்ல.
மருத்துவம் குறிப்பிடுகிற அளவுக்கே எல்டிஎல் கொலஸ்ட்ரால் உங்கள் உடலில் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை முறையால் அதை கெட்ட கொழுப்பாக மாற்றினால்தான் பிரச்னை வரும்’’ என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா அழுத்தம் திருத்தமாக.














