தவெக-வுக்கு ஆதரவு: ``ஸ்டாலினின் இசைவோடுதான் ஆதரவு" - விசிக தலைவர் திருமாவளவன் வி...
கேன்ஸ்: 1,500 மணிநேர உழைப்பில் உருவான அற்புதம்! - ஃபேஷன் உலகம் பிரமித்த ஐஸ்வர்யா ராய் ஆடையின் கதை
`சில சிவப்பு கம்பளங்களில் பிரபலங்கள் வெறுமனே நடந்து செல்வார்கள், ஆனால் ஐஸ்வர்யா ராய் பச்சன் அடியெடுத்து வைக்கும் சிவப்பு கம்பளங்கள் உயிர்பெற்று எழுகின்றன' எனும் வாக்கியம் பாலிவுட் ஃபேஷன் உலகில் மிக பிரபலம்.
79வது கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்தியாவின் கேன்ஸ் ஐகானாக வலம்வரும் ஐஸ்வர்யா, மீண்டும் ஒருமுறை கேமராக்களின் பார்வைக்காக மட்டும் வரவில்லை; ஃபிளாஷ் பல்புகள் ஓய்ந்த பிறகும் மக்களின் மனதில் நீங்காத ஒரு முத்திரையைப் பதிக்க வந்திருந்தார். இந்த ஆண்டு, பிரபஞ்சத்தையே ஆடையாக அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

Luminara
முன்னாள் உலக அழகியும், லோரியல் பாரிஸ் நிறுவனத்தின் தூதருமான ஐஸ்வர்யா, இந்திய ஆடை வடிவமைப்பாளர் அமித் அகர்வால் பிரத்யேகமாக வடிவமைத்த 'லுமினரா' (Luminara) எனும் கவுனில் சிவப்பு கம்பளத்தில் தோன்றியபோது, மொத்த கேமராக்களின் கவனமும் அவர் மீதே இருந்தது.
அது ஒரு ஆடை என்பதை விட, ஒரு இயற்கை சக்தி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். சுற்றியுள்ள ஒளியை உள்வாங்கிக் கொள்ளும் ஆழமான நீல நிறத்தில், அந்த ஆடை ஒரு சிற்பம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. வடிவமைப்பாளர் அமித் அகர்வாலின் தனித்துவமான 'பயோமிமிக்ரி' (Biomimicry) பாணியில், இறக்கைகள் போன்ற தோள்பட்டை நீட்சிகள், ஐஸ்வர்யாவிற்கு ஒரு விண்ணுலக தேவதைக்கும், நடமாடும் கலைப்படைப்பிற்கும் இடைப்பட்ட ஒரு தோற்றத்தைக் கொடுத்தது என வர்ணிக்கிறார்கள்.
இந்த ஆடையின் முக்கியத்துவம் என்பது , 1500 மணி நேரத்திற்கும் மேலான கைவினை உழைப்பில் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான படிகங்கள் மற்றும் கிரிஸ்டல்கள், 'கிரிஸ்டல் வெயின்' (Crystal Vein) என்ற நுட்பமான எம்ப்ராய்டரி மூலம் ஆடை முழுவதும் கையால் கோர்க்கப்பட்டிருந்தன. ஐஸ்வர்யா நடக்கும் ஒவ்வொரு அசைவிற்கும், அந்தப் படிகங்கள் ஒளியை உள்வாங்கிப் பிரதிபலித்தபோது, ஒளியே அந்த ஆடை வழியாகப் பயணிப்பது போன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்தியது. இது வெறும் ஆடை அல்ல; வடிவமைப்பாளர் அமித் அகர்வால் சொன்னது போல, இது "ஒரு ஆற்றல் களம்".

வடிவமைப்பாளர் அமித் அகர்வால், ஸ்டைலிஸ்ட் மோஹித் ராய் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் இந்த கூட்டணி, சினிமாவின் கம்பீரத்தையும் ஆடை வடிவமைப்பின் புதுமையையும் ஒரு புள்ளியில் இணைத்ததாக பத்திரிக்கை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
"ஐஸ்வர்யா எப்போதும் கேன்ஸ் விழாவை ஒரு தனித்துவமான கண்ணோட்டத்துடன் அணுகுபவர். 'லுமினரா' மூலம், மோஹித்தும் நானும் ஒரு ஆடையை விட, அவரைச் சுற்றி ஒரு ஆற்றல் களத்தை உருவாக்க விரும்பினோம். ஒளி என்பது வலிமை, இயக்கம் மற்றும் மாற்றத்தின் குறியீடு. பல தசாப்தங்களாக உலக அரங்கில் அவர் கொண்டு வந்துள்ள அந்த அசாதாரண ஒளியைக் கொண்டாடும் விதமாக இந்த ஆடை உருவாக்கப்பட்டது," என்று அமித் அகர்வால் குறிப்பிட்டார்.
ஆடையைப் போலவே ஐஸ்வர்யாவின் ஒப்பனையும் கவனமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. 'ராயல் சஃபையர்' (Royal Sapphire) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, கிளாசிக் அழகுக்கு நவீன கூர்மை கொடுக்கப்பட்டிருந்தது. துல்லியமான ஐ லைனர், அடர்த்தியாக நீண்ட இமைகள் என அவரது கண்கள் கேன்ஸ் விழாவிற்கே உரிய கம்பீரத்தைக் காட்டின. ஆனால், அனைவரையும் கவர்ந்தது அவரது லிப் ஸ்டிக் தானாம். சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில், சாடின் ஃபினிஷிங்குடன் இருந்த அந்த நிறம், ஆடையின் குளிர்ச்சியான நீல நிறத்திற்கு எதிராக ஒரு கதையைச் சொன்னது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அவரது பயணம், ஐஸ்வர்யாவை வெறும் ஒரு விருந்தினராக அல்லாமல், அந்த விழாவின் ஒரு அங்கமாக, ஒரு நிறுவனமாகவே மாற்றிவிட்டது. ஆனாலும், ஒவ்வொரு முறையும் கணிக்க முடியாத தோற்றங்களில் வந்து ஆச்சரியப்படுத்துவதே அவரது தனித்துவம்.
ஒளியையும் இயக்கத்தையும் ஆடையாக அணிந்து, சக்தியையும் துல்லியத்தையும் ஒப்பனையில் காட்டிய இந்த 2026 தோற்றம், ஐஸ்வர்யாவின் கேன்ஸ் அத்தியாயத்தில் ஒரு மைல்கல் என்கிறார்கள் ஃபேஷன் உலகில். !


















