'Keep the body guessing': கோலியின் புறக்கணிப்புக்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத...
Cockroach Janta Party: "என் குடும்பத்திற்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது" - அபிஜித் தீப்கே ஆதங்கம்!
வேலை இல்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் என்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கருத்து பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து `கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற நையாண்டித் தளத்தை இணையத்தில் உருவாக்கி அரசின் மீதான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அபிஜித் தீப்கே. இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தார். அதில், ``இது நான் எடுத்த முடிவுதானே தவிர, என் குடும்பத்தினர் எடுத்ததல்ல. எனவே என் குடும்பத்திற்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்று நான் விரும்புகிறேன்.
எனக்கும் இந்தியாவில் உள்ள எனது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில், எங்கள் கருத்துக்களைத் தைரியமாக வெளிப்படுத்தியதற்காக மட்டுமே, ஒருவருடைய குடும்பம் இதுபோன்று கடும் மிரட்டலை எதிர்க்கொள்ளக்கூடாது. சற்று முன்புதான் எனக்கு ஒரு மிரட்டல் காணொளி வந்தது. அதில் பேசும் ஒரு நபர், தாங்கள் இந்தியாவில் உள்ள என் வீட்டின் வாசலுக்கே வந்துவிட்டதாகவும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய நான் மாலை வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
இது என்னை மற்றும் என் குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்துப் பெரும் கவலையடையச் செய்துள்ளது. அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த மக்கள் எழுச்சிகளுடன் (உள்நாட்டு கலவரங்களுடன்) எங்கள் அமைப்பை ஒப்பிட்டு, திட்டமிட்டு அவதூறு பரப்பும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நாங்கள் மிகவும் ஜனநாயக உணர்வு கொண்ட மக்கள். எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த நாங்கள் மேற்கொள்ளும் எத்தகைய நடவடிக்கையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகவும், மிகவும் அமைதியான முறையிலுமே அமைந்திருக்கும்.

இந்தியாவின் ‘GenZ’ தலைமுறையினரை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஏனெனில், இங்குள்ள இளைஞர்கள் அதிக கல்வி அறிவு பெற்றவர்கள். சொல்லப்போனால், தற்போது நாட்டை நிர்வகிப்பவர்களை விடவும் அவர்கள் அதிக கல்வி அறிவு பெற்றவர்கள். இது வன்முறைக்கானது அல்ல, ஒரு அரசியல் சார்ந்த இளைஞர் முன்னணியாகச் செயல்படும் அமைப்பு.
இந்த விவகாரம் இவ்வளவு பெரிதாக எதிரொலிக்கும் என்று தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்றைய இளம் தலைமுறையினர் (GenZ) 'பின்வாங்காதே! நீ இப்போதுதான் ஒரு விஷயத்தைத் தொடங்கி இருக்கிறாய், எனவே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்' என்று என் மீது மிகுந்த ஊக்கமளித்து வருகின்றனர்." என்றார்.
















