'ராஜ்மோகனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?' -...
கேரளம்: இன்ஸ்டாவில் பெண் குரலில் பேசி வரவழைத்து மாணவன் கொலை; காதல் விவகாரமா எனப் போலீஸ் விசாரணை
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பாங்கப்பாறை சங்கீத நகர் நேதாஜி லேன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மது.
ஆட்டோ ஓட்டுநரான இவரது மகன் அபிராம் (17). இவரது தாய் தர்மஜா மற்றும் சகோதரி ஆகியோர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். அபிராம், எம்.ஜி. கல்லூரி அருகே உள்ள என்.எஸ்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் நண்பர் அழைப்பதாகக் கூறிவிட்டு அபிராம் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் தந்தை மது செல்போனில் தொடர்புகொண்டார். அப்போது உடனே வந்துவிடுவதாகக் கூறிய அபிராம், அதன்பின் வீடு திரும்பவில்லை.
அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஸ்ரீகாரியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் அபிராமின் செல்போன் சிக்னல் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்தபோது, இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணின் குரலில் பேசி வந்த அழைப்பைத் தொடர்ந்தே அவர் வீட்டை விட்டுச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்துச் சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடித்து விசாரித்த போலீஸார், முதற்கட்டமாக 17 வயது சிறுவன், சிறுமி மற்றும் மற்றொருவரை விசாரித்தனர். பின்னர் நேற்று மீண்டும் அவர்களை வரவழைத்துக் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கொலையின் பின்னணி வெளிச்சத்துக்கு வந்தது.
திட்டமிட்டு அபிராமைக் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்த கும்பல், அவரைக் கீழே தள்ளிக் காலால் மிதித்துத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை சணல் சாக்கில் கட்டி பாங்கப்பாறை பேரூர் சந்திப்பு அருகே உள்ள ஆள்நடமாட்டமில்லாத புதரில் வீசிச் சென்றதாகக் கூறினர்.
குற்றவாளிகள் அளித்த தகவலின்படி போலீசார் அங்கு சென்று சாக்கு மூட்டையில் இருந்த அபிராமின் சடலத்தை மீட்டனர்.
இந்தக் கொலை தொடர்பாக 17 வயது சிறுவன், ஒரு சிறுமி மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான உமர் முக்தார் (22) ஆகிய 3 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட 17 வயது சிறுவனை நேற்றிரவு சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் தடயங்களைச் சேகரித்தனர். கைதானவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக திருவனந்தபுரம் மாநகர போலீஸ் கமிஷனர் அருள் பி. கிருஷ்ணா தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட ஒரு சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்த அபிராமின் நண்பரைத் தீர்த்துக்கட்டவே இந்தக் கும்பல் முதன்முதலில் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நண்பரைப் போனில் வரவழைக்க முயன்றபோது, ஏதோ விபரீதத்தை உணர்ந்த அவர் அங்கு செல்லவில்லை.
இதையடுத்து, அதே விவகாரத்தில் அபிராமுடன் பேசி வரவழைத்துள்ளனர். அங்கு சென்றபோது ஆபத்தை உணர்ந்து தப்பியோட முயன்ற அபிராமைப் பிடித்து அக்கும்பல் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாகவும் ஸ்ரீகாரியம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மாயமான அபிராமைத் தேடுவதில் போலீசார் தொடக்கத்தில் அலட்சியம் காட்டியதாகக் கூறி, அவரது உறவினர்களும் பொதுமக்களும் நேற்றிரவு ஸ்ரீகாரியம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.











.jpeg)









