மேற்கு வங்கம்: தனித்து போட்டியிடும் காங்கிரஸ்; உருவாகும் நான்கு முனைப்போட்டி - ப...
கேரளா: பாங்கோடு ராணுவ முகாமில் டிஜே பார்ட்டி; 2 யானை தந்தங்கள் கொள்ளை... விசாரணை நடத்தும் போலீஸ்!
கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாங்கோட்டில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மிலிட்டரி கேம்ப் உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் இந்த முகாமுக்குள், அனுமதி இல்லாமல் யாரும் நுழையமுடியாது. இங்கு பாதுகாப்பாக வைக்கும்படி 2 யானைக் தந்தங்களை 1992-ம் ஆண்டு அரசு வழங்கியது. அரசு கேட்கும்போது திரும்ப வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டன. சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த தந்தங்கள் மெட்ராஸ் ரெஜிமென்ட் ஆபீஸர்ஸ் மெஸ்ஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே குடியரசுதின விழாவில் 2-ம் மெட்ராஸ் ரெஜிமென்ட் கரசேனை அதிகாரிக்குப் பாராட்டு (காமாண்டேஷன்) கிடைக்கப் பெற்றதைக் கொண்டாடும் வகையில், கடந்த புதன்கிழமை இரவு டி.ஜே பார்ட்டி நடத்தப்பட்டது. மறுநாள் விடிய விடிய நடைபெற்ற பார்ட்டியின்போது சிலர் இரண்டு யானை தந்தங்களைத் திருடிச் சென்றுள்ளனர். தந்தங்கள் திருடப்பட்ட தகவல் வியாழக்கிழமை காலையில் தெரியவந்ததைத் தொடர்ந்து கேம்ப் வளாகம் முழுவதும் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிட்டி போலீஸ் கமிஷனர் கார்த்திக்கிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புதன்கிழமை இரவு கேட்டரிங், டி.ஜே மற்றும் லைட்டிங் அமைக்க வெளியில் இருந்து 19 பேர் வந்திருந்தனர் என்பது தெரியவரவே அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராணுவ முகாமுக்குள் சென்றுவர பிரதான வாயில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. வெளிநபர்கள் உள்ளே செல்லும்போதும், வெளியே வரும்போதும் பலத்த சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுவார்கள். வளாகம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படுள்ளன. இவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியில் யானை தந்தங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் ஆபீஸர்ஸ் மெஸ்ஸில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை என்பதால் திருடியவர்களைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு யானை தந்தங்களும் சுமார் 100 கிலோ எடை இருக்கும் என்பதால் ஒருவராக இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள் எனவும், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து இதைச் செய்திருக்கலாம் எனவும், ராணுவ முகாமுக்குள் இருந்தும் யாராவது அவர்களுக்கு உதவியிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். தந்தங்கள் திருடப்பட்ட பகுதியில் இருந்து சில கைரேகை பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த பதிவுகளை டி.ஜே பார்ட்டியில் கலந்துகொண்டவர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுபார்க்கும் பணி நடந்துவருகிறது. கேட்டரிங் பொருட்கள் வந்த வாகனம் மூலம் கடத்தப்பட்டிருக்கலாமா? அல்லது ராணுவ முகாம் வளாகத்தில் எங்காவது மறைத்து வைத்திருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


















