கைகொடுத்த யூடியூப், தந்தையின் செல்வாக்கு; துபாயில் 14 கிலோ தங்கம் நடிகை ரன்யாவிடம் கைமாறியது எப்படி?
கடந்த 3ம் தேதி கன்னட நடிகையும், மூத்த ஐ.பி.எஸ்.அதிகாரியின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவர் விமான நிலையத்தில் இருந்து எந்த வித சோதனையும் இல்லாமல் வெளியில் வந்துவிட்டார். ஆனால் விமான நிலையத்தை விட்டு வெளியில் வர சில அடிகள் இருந்த நிலையில், அவரை சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்தனர். அவரை சோதனை செய்தபோது அவர் உடல் முழுக்க தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தை விட்டு வெளியில் வர அவரது தந்தையின் ஐ.பி.எஸ் அதிகாரம் கைகொடுத்திருக்கிறது. நடிகையின் தந்தையின் நண்பர் பசப்பாதான் விமான நிலையத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்தார்.
அவர்தான் நடிகை ரன்யாவை பாதுகாப்பு சோதனையில் இருந்து காப்பாற்றி வெளியில் அழைத்து வந்தார். ஆனால் நடிகை அடிக்கடி வெளிநாடு சென்று வந்தது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்தே அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளது. துபாயில் இருந்து புறப்படும்போது தங்கம் கடத்தி வருவது என்று முடிவு செய்த ரன்யா ராவிற்கு, துபாய் விமான நிலையத்தில் இருந்தபோது இண்டர்நெட் அழைப்பு வந்தது.

அதனை தொடர்ந்து தன்னை மர்ம நபர் விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் சந்தித்ததாக நடிகை குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்தில் சந்தித்த அந்த நபர் மிகவும் உயரமாகவும் அதேசமயம் அமெரிக்காவைச் சேர்ந்தவர் போல் இருந்ததாக விசாரணையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவரிடம் விசாரித்த போது தன்னை சந்தித்த நபர் தன்னை உணவகத்தில் ஒதுக்குப்புறமான ஓர் இடத்திற்கு அழைத்து சென்று, இரண்டு பாக்கெட்களையும் கொடுத்ததாகவும்... அதனை வாங்கிக்கொண்டு நேராக அங்குள்ள வாஷ்ரூம் சென்றதாகவும், அங்கு வைத்து தங்கம் இருந்த பாக்கெட்களை திறந்து பார்த்தபோது, அதில் 12 தங்க கட்டிகளும், சில சிறிய துண்டுகளும் இருந்ததாகவும் கூறியிருக்கிறார். அவற்றின் மதிப்பு ரூ.12.56 கோடியாகும்.
``அதனை எப்படி உடலுக்குள் மறைத்து வைக்கலாம் என்று திட்டமிட்டேன். ஏற்கனவே முன்கூட்டியே திட்டமிட்டு டேப் வாங்கிச் சென்று இருந்தேன். விமான நிலையத்தில் டேப்பை வெட்ட கத்திரிக்கோல் இருக்காது என்று கருதி, டேப்பை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து சென்று இருந்தேன். அப்படி இருந்தும் அவ்வளவு தங்கத்தை எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் இருந்தது. உடனே யூடியூப் வீடியோவை திறந்து உடம்பில் எப்படி தங்கத்தை மறைத்து வைப்பது என்பது குறித்து தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் கழுத்து, கையில் தங்கத்தை வைத்து டேப்பை கொண்டு ஒட்டினேன். சிறிய துண்டு தங்கத்தை ஷூவிற்குள் மறைத்து வைத்தேன்'' என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ரன்யா ராவ் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தபோது இத்தகவல்களை சுங்க அதிகாரிகள் தாக்கல் செய்து அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று வாதிட்டனர். கடந்த 6 மாதங்களில் ரன்யா ராவ் 27 முறை துபாய் சென்று வந்துள்ளார். அதுவும் இரண்டு வாரத்தில் 4 முறை துபாய் சென்று வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் துபாய் சென்று வரும்போது கணிசமான அளவு தங்கத்தை கடத்தி கொண்டு வந்துள்ளார். நடிகையின் நண்பர் விமான நிலையத்தில் உதவி செய்து இருக்கிறார்.