அன்பில் மகேஸ்: `அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது; சட்டப்படி எதிர்கொள்வார்!'- கைதுக...
கொலை மோசடி வழக்கிலிருந்து தப்பிக்க நூதன யோசனை; AI பயன்படுத்தி தனக்கு தானே இறுதிச்சடங்கு நடத்திய நபர்
கொலை வழக்கில் இருந்து தப்பிக்க சிலர் தலைமறைவாக வாழ்வர். சிலர் தங்களது அடையாளத்தை மாற்றிக்கொண்டு வேறு பெயர்களில் வாழ்வது வழக்கம். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கொலைக் குற்றவாளியும் அது போன்ற ஒரு வேலையைச் செய்து மாட்டிக்கொண்டார். உத்தரப்பிரதேசம் மாநிலம், மவ் என்ற இடத்தைச் சேர்ந்த யோகேஷ் சிங் என்பவரை 2016ம் ஆண்டு கொலைசெய்த வழக்கில் ராஜ்குமார் ராஜ்பார் என்பவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. 2016ம் ஆண்டு முன்ஷிபுரா ரயில் நிலையம் அருகில் யோகேஷ் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து ராஜ்குமார் ராஜ்பார் மற்றும் அவரது நண்பர் சுதர்ஷன் ராஜ்பார் ஆகியோருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராஜ்குமார் இவ்வழக்கில் ஜாமீனில் இருந்தார். இதற்கிடையில், மவ் நகராட்சியில் இறப்புச் சான்றிதழ் ஒன்றைப் பெற்று அதை நீதிமன்றத்தில் உறவினர்கள் மூலம் சமர்ப்பித்த ராஜ்குமார் ராஜ்பார், சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சுதந்திரமாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று குவாஜாஜஹான்பூர் பகுதிக்கு அருகில் வைத்து, ராஜ்குமார் ராஜ்பாரை போலீஸார் கைதுசெய்தனர். கொலை வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ராஜ்குமார் ராஜ்பார் தான் இறந்துவிட்டதாக ஒரு கதையைக் கட்டமைத்து, சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காக போலியான இறப்புச் சான்று ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜ்குமார் ராஜ்பார், கடந்த ஆண்டு மே 30ம் தேதி காஜிபூரில் தனது மரணத்தை போலியாக அரங்கேற்ற, செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் ஒரு திட்டத்தை வகுத்தார். தகன மேடையில் உடல் கிடப்பது போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட படம் பயன்படுத்தப்பட்டது. மேலும், மனித உடலுக்குப் பதிலாக ஓர் ஆடு தகனம் செய்யப்பட்டது.
மரணம் உண்மையானது என்று நம்பவைப்பதற்காக, இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்குகள் நடப்பது போன்ற புகைப்படங்களும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில், அவருக்கு இறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனுப் குமார் இது குறித்து கூறுகையில், ``12-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத ராஜ்குமார் ராஜ்பர், பங்குச் சந்தை வர்த்தகராகப் பணியாற்றி வந்தார். அவர் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய நபர்களிடம், பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி வசூலித்திருந்தார்.
ஒரு கொலை வழக்கில் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவும், வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கவும், அவர் தனது மரணத்தை ஒரு நாடகமாகத் திட்டமிட்டார்'' என்று தெரிவித்தார்.



















