"Gabby அம்மாவுக்கு... Jishnu அப்பாவுக்கு!" Lithanya Cute Speech | Vikatan Tele A...
கோவை: பேக்கரியில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு; என்ன நடந்தது?
உத்தரப்பிரதேசம் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த். இந்த இளைஞர்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 15-ம் தேதி அவர்கள் இருவரும் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்குச் சென்றுள்ளனர். அப்போது கடையிலிருந்த இரண்டு நபர்கள், வட மாநில இளைஞர்களிடம் தமிழில் ஏதோ கேட்டுள்ளனர்.
தங்களுக்குப் புரியாததால் வட மாநிலத் தொழிலாளர்கள் சைகை மூலம் விளக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 2 பேர் கொண்ட கும்பல், திடீரென்று இரண்டு தொழிலாளர்களையும் கடுமையாகத் தாக்கினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் குத்தித் தாக்கியுள்ளனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களைச் சமாதானப்படுத்தி வட மாநில இளைஞர்களைப் பத்திரமாக மீட்டனர். தாக்குதல் நடத்திய நபர்கள் வட மாநில இளைஞர்களை மிரட்டிவிட்டுக் கிளம்பினார்கள்.
அவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த வட மாநிலத் தொழிலாளர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகிப் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய அந்த மர்ம ஆசாமிகளைத் தேடி வருகிறார்கள்.




.jpeg)














