'புதிய அரசு அமைவது காலத்தின் கட்டாயம்; உடனே நடவடிக்கை எடுங்கள்' - ஆளுநருக்கு ஸ்ட...
கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு; தாழ்வான மின்மாற்றிதான் காரணமா? வனத்துறை சொல்வது என்ன?
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களுக்குள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நுழைவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் நடராஜன் என்பவரது தோட்டத்திற்குள் நேற்றிரவு ஒரு ஆண் காட்டு யானை நுழைந்தது. அப்போது மாந்தோப்பிற்குள் புகுந்து அங்குள்ள மின்மாற்றியை அந்த யானை தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், மின்வாரிய செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் யானை மின்சாரம் தாக்கித்தான் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, “மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் என்பது 30 அடி உயரம் கொண்டிருக்க வேண்டும். அதில் 5 அடி தரைக்கு அடியிலும், 25 அடி தரைக்கு மேலேயும் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இதில் உயர்மின்னழுத்த மின்மாற்றி தரையிலிருந்து 10 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்ததால், யானை எளிதாக அதை எட்டும் சூழல் உருவாகியுள்ளது.
பொதுவாக மின்மாற்றியில் இருந்து வரும் ஒருவித சத்தத்தினால் யானைகள் அதன் அருகே வராது. ஆனால் இந்த யானை எதிர்பாராத விதமாக கம்பியை இழுத்ததால் விபரீதம் நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளைச் சரிசெய்யுமாறு வனத்துறை சார்பில் மின்வாரியத்திற்குப் பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டு, அத்தகைய இடங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மின்மாற்றிகள் நிலையான உயரத்தில் மட்டுமே அமைக்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




















