கௌரி கிஷன் விவகாரம்: பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட `அதர்ஸ்' பட நடிகர் ஆதித்யா மாத...
கௌரி கிஷன்: "அதே நபரால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும்" - நடிகர் சங்கம் கண்டனம்
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று (நவ.7) வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (நவ.6) சென்னையில் நடைபெற்றது.
அந்த செய்தியாளர் சந்திப்பில் சினிமா நிருபர் ஒருவருக்கும், கௌரி கிஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏற்கனவே நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்த நிருபர் ஹீரோவிடம், "கௌரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கௌரி கிஷன், "நீங்கள் தானே அன்றைக்கு கேள்வி கேட்டது. எப்படி அதனைக் கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னவென்று கேட்குறீங்க. என்னோட எடை தெரிந்துகொண்டு என்ன செய்ய போகிறீர்கள்? இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்" என அந்த நிரூபருக்குத் தக்க பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பலரும் கௌரி கிஷனிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கமும், சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "திரைத்துறையும் பத்திரிகைத்துறையும் பிரிக்கவே முடியாத சகோதரர்கள். நல்ல திரைப்படங்களையும் திறமையான கலைஞர்களையும் உச்சி முகர்ந்து கடைக்கோடி மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நீங்கள், நாங்கள் தவறு செய்யும் போதும் சரியான விமர்சனங்களை மிகவும் நாகரிகமாக வெளிப்படுத்தி சரி செய்தும் வருகிறீர்கள்.
நேற்று நிகழ்ந்த இந்த நிகழ்வு மிகவும் விரும்பத்தகாதது. தமிழ் திரையுலகம் எப்போதுமே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகவே விளங்கி வருகிறது. 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரையுலகில் பெண்கள் நடிகைகளாக மட்டும் அல்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் பிரகாசித்துள்ளனர்.
ஆனாலும் திரைத்துறையில் ஒரு பெண் நுழைந்து சாதிப்பது என்பது இன்னமும் பெரும் சவாலான ஒன்றுதான். அப்படி பெரும் சவாலை ஏற்று ஏதாவது ஒன்றைச் சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெண்கள் திரைத்துறைக்கு அடி எடுத்து வைக்கின்றனர். அப்படி திரைத்துறைக்கு வரும் பெண்களை அவர்களுக்கான பாதுகாப்பையும் அவர்கள் தன்மானத்தையும் சுய கௌரவத்தையும் பாதுகாப்பது என்பது நம் எல்லோரது கடமையும் கூட.
ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிகையாளர்கள் போர்வையில் நடிகைகளைப் பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது. நேற்று எங்களது சகோதரி ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு அதே நபரால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்தது.
இன்றைய சூழலில் செல்போன் இருந்தால் ஒரு youtube சேனலை ஆரம்பித்து பத்திரிகையாளர் ஆகிவிடலாம், திரைத்துறையினர் பற்றி அவதூறுகளை ஆபாசமாகப் பரப்பி பார்வையாளர்களைப் பெற்று விடலாம் என்ற மோசமான நிலை நிலவுகிறது.
இந்தச் சூழலில் எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிகை துறையில் இது போன்ற களைகள் முளைத்திருப்பது நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளைத் தொடங்குவோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "'அதர்ஸ்' திரைப்படம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பு 6-11-2025 அன்று நடந்துள்ளது. இச்சந்திப்பில் திரைப்படக் குழுவினருடன் பங்கு கொண்ட கொண்ட திரைக்கலைஞர் கௌரி கிஷன் அவர்களின் உடல் எடை குறித்து கேள்வி கேட்ட youtubeபரின் செயல்பாட்டை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.
திரைப்படம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் அத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த பெண் கலைஞரின் உடல் எடை கேலிக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு கேள்வி கேட்பது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கது.
குறிப்பாக இக்கேள்விக்கு திரைக்கலைஞர் கௌரி கிஷன் தனது எதிர்ப்பைத் தெரிவித்த பிறகும் உடல் எடை குறித்து கேள்வியை நியாயப்படுத்தி பெண் திரைக்கலைஞரை நோக்கி கடினமான குரலில் எதிர் விவாதம் நடத்திய youtube-பரின் செயல்பாடுகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிப்பதோடு இதுபோன்று அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழியில் செயல்படுகிறவர்களை சக பத்திரிகையாளர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்த விரும்புகிறது.
மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டாகப் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், திரைக்கலைஞர் கௌரி கிஷன் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த செயல்பாடுகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.










