செய்திகள் :

கௌரி கிஷன் விவகாரம்: ``நடிகர், இயக்குநரின் மௌனமும் வன்முறைதான்" - இயக்குநர் பிரேம் குமார்

post image

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயகனுடன் ‘OTHERS’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது.

96 நடிகை கெளரி கிஷன் பேட்டி
96 நடிகை கெளரி கிஷன்

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் "கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது.

அப்போது நடிகை கௌரி கிஷன், ``இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம்.

அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப் போறீங்க?. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்.

ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்?

இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை.

கௌரி கிஷன்
கௌரி கிஷன்

இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. பலரும் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர்.

அதைத் தொடர்ந்து 96, மெய்யழகன் போன்ற படங்களில் இயக்குநர் பிரேம்குமார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

அவரின் பதிவில், ``நடிகை கௌரி கிஷன் மீது ஏவப்பட்ட வன்மமும் வக்கிரமும் நிறைந்த கேள்விக்கு அவர் கொடுத்த சாட்டையடி பதில் சரியே. ஒரு பெண்ணாக தன்னந்தனியாக தன் தரப்பு நியாயத்தை தைரியமாக நிலைநாட்டியது பாராட்டுக்கு உரியது.

OTHERS திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரின் வக்கிரமான பேச்சை அங்கிருந்த மற்ற யாரும் தடுக்கவில்லை. மாறாக அதற்கு கௌரி பதில் தரும்போது, கூட்டமாக கூச்சலிட்டு தடுத்தது கோழைத்தனமான இழிசெயல். செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும்.

அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன்
அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன்

இந்தச் செயலை செய்தவர்களை நான் பத்திரிகையாளர்களாகவே கருதமாட்டேன். வக்கிரமாக கேள்வி கேட்கும் நீங்களும் இனி கேள்விக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதனால் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஆணவம் வேண்டாம்.

எல்லோரைப் போல நீங்களும் உங்கள் வருமானத்துக்கு ஒரு தொழில்தான் செய்கிறீர்கள். சினிமாவுக்கு இலவச சேவை ஒன்றும் செய்யவில்லை. அது தேவையும் இல்லை.

இனியாவது ஒரு பெண்ணிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உண்மையான அறம் சார்ந்த பத்திரிக்கையாளர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

தங்கள் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண்ணை சூழ்ந்துகொண்டு அத்தனை பேர் வார்த்தை வன்முறையில் ஈடுபடும்போது, அருகிலேயே செயலற்று அமர்ந்திருந்த இயக்குநர் மற்றும் கதாநாயகனின் மௌனம் அதைவிட பெரிய வன்முறை.

ஒருவேளை எதிர்த்துப் பேசினால் உங்கள் படத்துக்கான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்திருந்தால், அதைவிட ஒரு தவறான முடிவு வேறில்லை. மாறாக உங்கள் கதாநாயகிக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தால் உங்கள் மீதும் உங்கள் திரைப்படத்தின் மீதும் மரியாதை கூடியிருக்கும்.

இயக்குநர் பிரேம் குமார்
இயக்குநர் பிரேம் குமார்

இந்த இழிசெயலை அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள் கருத்தில்கொண்டு கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அறிக்கை வெளியிட்ட சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நன்றி!

இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு, எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், Youtubers மட்டும் வரக்கூடிய முறை மற்றும் நிலை வரவேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கௌரி கிஷன் விவகாரம்: பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட `அதர்ஸ்' பட நடிகர் ஆதித்யா மாதவன்!

கிராண்ட் பிக்சர்ஸ் & அப் செவன் வெஞ்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், 96 புகழ் நடிகை கௌரி ஜி கிஷன், அஞ்சு குரியன், முனிஸ்காந்த், ஹரீஷ் பெராடி, ஜெகன், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டப் பலர்... மேலும் பார்க்க

``மரியாதை என்பது ஒருவழிப்பாதை இல்லை" - கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பதிவிட்ட பிரபலங்கள்

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் க... மேலும் பார்க்க

KH 237: மலையாள சினிமாவிலிருந்து களமிறங்கும் டீம் - வெளியான அப்டேட்

கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய `நாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸாகி இருக்கிறது. சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவருடைய அலுவலகத்திற்கு கமல்ஹாசனுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும... மேலும் பார்க்க

Others Review: திருநர் சமூகத்தினரைப் பொறுப்புணர்வுடன் காட்சிப்படுத்த வேண்டாமா? அதர்ஸ் அரசியல் சரியா?

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சாலையில் திட்டமிடப்பட்ட கொள்ளை முயற்சி, எதிர்பாராத விதமாகக் கோரமான வேன் விபத்தாக முடிகிறது. வேனிலிருந்த நான்கு பேர் உயிரிழக்கின்றனர். இந்த வழக்கை உதவி ஆணையர் மாதவ் (ஆ... மேலும் பார்க்க

"அவரின் செயல் அருவருப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது"- கௌரி கிஷனுக்கு ஆதரவாக சந்தோஷ் நாராயணன்

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று (நவ.7) வெளியாகியிருக்கிறது.இந்தப் படத்தின் ... மேலும் பார்க்க