உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரம...
கௌரி கிஷன் விவகாரம்: பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட `அதர்ஸ்' பட நடிகர் ஆதித்யா மாதவன்!
கிராண்ட் பிக்சர்ஸ் & அப் செவன் வெஞ்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், 96 புகழ் நடிகை கௌரி ஜி கிஷன், அஞ்சு குரியன், முனிஸ்காந்த், ஹரீஷ் பெராடி, ஜெகன், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இதற்கு முன்னர், `அதர்ஸ்' திரைப்பட புரோமோஷன் நிகழ்வில், கௌரி கிஷன் எடை குறித்து சினிமா நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பிய விவகாரம் விவாதமானது.
அதைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள், நடிகர் சங்கங்கள் அந்த நிருபருக்கு எதிரகாக் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,`` தங்கள் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண்ணை சூழ்ந்துகொண்டு அத்தனை பேர் வார்த்தை வன்முறையில் ஈடுபடும்போது, அருகிலேயே செயலற்று அமர்ந்திருந்த இயக்குநர் மற்றும் கதாநாயகனின் மௌனம் அதைவிட பெரிய வன்முறை.
ஒருவேளை எதிர்த்துப் பேசினால் உங்கள் படத்துக்கான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்திருந்தால், அதைவிட ஒரு தவறான முடிவு வேறில்லை.
மாறாக உங்கள் கதாநாயகிக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தால் உங்கள் மீதும் உங்கள் திரைப்படத்தின் மீதும் மரியாதை கூடியிருக்கும்." எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில், அதர்ஸ் படக்குழு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது இந்தப் படத்தின் நாயகன் ஆதித்யா மாதவன், ``ஒரு தனிநபர் தவறான கேள்வியைக் கேட்டு, பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார்.

நான் என்னதான் அமைதியாக இருந்தாலும் என்னுடைய ஆதரவு எப்போதும் கௌரி கிஷனுக்குதான். நான் இந்த ஊடகங்கள் மூலம் பகிரங்க மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்.
ஏற்கெனவே கௌரியிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டேன். ஆனால், அந்த நேரத்தில் நான் அமைதியாக இருந்திருக்கக் கூடாது. அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.
அந்த விவாதத்தின்போது அவர்களுக்கு மத்தியில் குறுக்கிட்டு பேசவேண்டாம், கௌரியின் கருத்தை அவர் தெளிவாகக் கூற இடமளிக்க வேண்டும் எனக் கருதிதான் அமைதியாக இருந்தேன்.
எனக்கு பேசுவதற்கு எந்த பயமுமில்லை. நான் எப்போதும் கௌரியுடனே உறுதியாக நிற்கிறேன். இதுதான் என் முதல் படம் என்பதால், மீடியாவை சந்திக்கும்போதும், கேள்விகளை எதிர்க்கொள்ளும்போதும் கொஞ்சம் பதற்றம் இருக்கிறது.
நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் லட்சக்கணக்கான மக்களிடம் சென்று சேர்கிறது என்பதால், நான் என்ன பேசுகிறேன் என்பதில் கவனம் இருக்கிறது." எனத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் அபின் ஹரிஹரன், ``அன்றைய சூழலில் அது படத்துக்கான பிரஸ் மீட் என்றுதான் கருதினேன். அதனால்தான் அமைதியாக இருந்தேன். அதற்காக என் தரப்பிலிருந்து நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்று நடந்த விஷயத்தை நான் தவிர்த்திருக்க வேண்டும். மேலும், அந்த நிகழ்வுக்காக நான் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்போது நடந்துகொண்டிருந்த விவாதத்தின்போது நானே அதிர்ச்சியில்தான் இருந்தேன்.
எனக்கும் இதுபோன்ற பிரஸ் மீட் எல்லாம் புதியது. கௌரி பேசும்போது எதிரில் இருந்தவர் பேச விடவே இல்லை. அப்போது நானும் உள்ளே நுழைந்து பேசினால் பிரச்னை பெரிதாகிவிடுமோ என பயந்தேன்.
இந்த பயம், அதிர்ச்சி எல்லாமேதான் என்னுடைய அன்றைய மௌனத்துக்கான காரணம். அதன்பிறகுதான் எனக்கு எல்லாமே புரிந்தது.
பொதுவாக ஒரு படத்தின் புரோமோஷன் என்றால் படத்தைப் பற்றி மட்டும் பேசினால் எல்லோருக்கும் நல்லது. ஒரு இயக்குநரை நம்பிதான் படக்குழு வருகிறது. அவர்களை பாதுகாக்க வேண்டியது இயக்குநராகிய என் பொறுப்பு.
நான் பெண்களை மதிக்ககூடியவன். அதை என் படத்தைப் பார்ப்பவர்களுக்குப் புரியும். ஆனால் அப்போது நடந்த சூழலை எனக்கு கையாளத் தெரியவில்லை என்பதால் நெருடலாக உணர்கிறேன். இதுபோன்ற சூழல் இனி யாருக்கும் வரக்கூடாது" எனத் தெரிவித்திருக்கிறார்.










