Penguin: 'வாழா என் வாழ்வை வாழவே' - வைரலாகும் ஒற்றை பென்குயின்; பின்னணி என்ன தெரி...
"சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்" - பிரதமர் மோடி கேரண்டி
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அம்ருத் பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். பின்னர் திருவனந்தபுரம் புத்தரிகண்ட மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றிய வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் 2026 சட்டசபைத் தேர்தல் பிரசாரம் தொடக்க விழா ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "கட்சிக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த திருவனந்தபுரத்தை நாட்டின் முன்மாதிரி நகரமாக உருவாக்குவோம்.
அதற்காக மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். மக்கள் பா.ஜ.க-வை நம்பத் தொடங்கியுள்ளதற்கு தலைநகரில் கிடைத்த வெற்றியே சாட்சி. மாறாதது இனி மாறும். மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் ஏற்பட்ட மாற்றம் கேரளாவிலும் ஏற்படும். பி.எம் ஸ்ரீ திட்டத்தை நிராகரித்ததன் மூலம் ஏழைக் குழந்தைகள் சிறந்த பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளது இடதுசாரி அரசு.
கேரளாவில் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளின் வழிமுறைகள் ஒன்றேதான். ஊழலும், வகுப்புவாதமும் 100 சதவிகிதம் உள்ளன. வெளிப்படைத்தன்மையும், வளர்ச்சியும் பூஜ்ஜியமாக உள்ளன.

காங்கிரஸ் பழைய காங்கிரஸ் அல்ல. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) என்பது முஸ்லிம் மாவோயிஸ்ட் காங்கிரஸ் (எம்.எம்.சி) என மாறிவிட்டது. முஸ்லிம் லீக்கை விட வகுப்புவாதமும், மாவோயிஸ்டுகளை விட அராஜகமும் அவர்களின் அடையாளமாகிவிட்டன.
காங்கிரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பா.ஜ.க அடிப்படை வசதிகளைப் பெருக்கி லட்சக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. கேரளாவில் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்களும், அம்ருத் பாரத் ரயில்களும் கேரளாவுக்குக் கிடைத்துள்ளன.
கேரளம் வளருவதற்கான ஒரு எடுத்துக்காட்டு விழிஞ்ஞம் துறைமுகம். துறைமுகத்தை நான் திறந்து வைத்த 6 மாதங்களில் 150 பெரிய கப்பல்களும், 3 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்பட்டுள்ளன. கூடுதல் வேலைவாய்ப்பு ஏற்படுவதன் மூலம் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
கேரளாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது ஊழல். கூட்டுறவு வங்கி மோசடி மூலம் சாதாரண மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துள்ளன இடதுசாரி மற்றும் வலதுசாரி கட்சிகள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அந்தப் பணம் திரும்பப்பெற்றுத்தரப்படும்.

நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு சபரிமலை ஐயப்ப சுவாமி மீது பக்தியும் நம்பிக்கையும் உள்ளன. ஆனால் சபரிமலையின் நம்பிக்கையையும், பாரம்பர்யத்தையும் இல்லாமல் ஆக்குவதற்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தியது இடதுசாரி அரசு. இப்போது சபரிமலையில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒன்றை நான் தெளிவுபடுத்துகிறேன். பா.ஜ.க கேரளாவில் ஆட்சி அமைக்கும். ஆட்சிக்கு வந்ததும் சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்ததாக இப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதுதான் மோடியின் கேரண்டி" என்றார்.
















