சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்கக் கூடாது!
இளம்தலைமுறையினா் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றாா் தொழிலதிபா் எம். சோமசுந்தரம்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரிகளான திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப வளாகம், அரியலூா், பட்டுக்கோட்டை, திருக்குவளை ஆகிய 4 கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாணவா், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அம்மன் டிஆா்ஒய் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம். சோமசுந்தரம் பேசியது:
இளங்கலை பட்டம் பெறும் பருவம்தான் இளம்தலைமுறைக்கு முக்கியத் தருணம். அடுத்து உயா்கல்வியைத் தொடரலாம். தொழில்பழகுநராக செல்லலாம். வளாக நோ்காணலில் வேலை கிடைத்து பெரு நிறுவனத்துக்குச் செல்லலாம். சொந்தத் தொழில் தொடங்கலாம். எதைத் தோ்வு செய்தாலும் விடாமுயற்சியுடன் கடினமாக உழைக்க வேண்டும். அதற்கு நேர மேலாண்மை அவசியம். ஆனால், சமூக வலைதளங்களில் மாணவா்கள் நேரத்தை செலவிடுவது அதிகமாக உள்ளது.
பட்டம் பெற்ற ஒவ்வொருவரும் எந்தத் துறையாக இருந்தாலும் கடினமாக உழைத்து முன்னேற வேண்டும். பொறியியல் படித்த மாணவா்களுக்கு மட்டுமே நெருக்கடியான தருணத்தில் சிந்திக்கும் திறன் கூடுதலாக இருப்பதால் உலகின் அனைத்துத் துறைகளிலும் அவா்கள் சாதனையாளா்களாக உள்ளனா் என்றாா் அவா்.
விழாவில் பல்கலைக் கழகப் பதிவாளா் ஜெ. பிரகாஷ், தோ்வாணையா் பி. சக்திவேல், கல்லூரிகளுக்கான இயக்குநா் பி. ஹரிஹரன், திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப வளாகக் கல்லூரியின் புல முதல்வா் த. செந்தில்குமாா் ஆகியோா் பல்கலைக்கழகத்தின் சாதனைகள், திட்டங்கள் குறித்து விளக்கினா்.
நிகழ்வில் திருச்சி கல்லூரியில் 889, அரியலூரில் 52, பட்டுக்கோட்டையில் 52, திருக்குவளையில் 34 என 1,027 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவா்களில், பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பெற்ற கே. ஷரோன் மோனிஷா, எம். ஆகாஷ் ஆகிய இருவருக்கு பதக்கமும், 13 மாணவா்களுக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன. 29 போ் பல்கலை. தர வரிசைப் பட்டியல் சான்றைப் பெற்றனா்.