மும்பை தேர்தல்: தொகுதிப் பங்கீட்டை முடிக்க போராடும் தாக்கரே சகோதரர்கள்: பாஜக-விட...
ஒரத்தநாடு: வைத்திலிங்கத்தால் நழுவிய வாய்ப்பு - திமுக பெண் நிர்வாகியின் காய்நகர்த்தல் பலிக்குமா?!
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்து விட்டது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்றவற்றில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, இப்போது புதிதாக தவெக-வும் களத்தில் இருக்கிறது. ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் ஆகி விட வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். மேல்மட்டத்தில் இருக்கும் நெருக்கம், அறிமுகம், செல்வாக்கு மூலம் சீட்டுக்கான காய் நகர்த்தல்களை திரைமறைவில் நடத்துகின்றனர்.

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதியை அரசியல் விழிப்புணர்வு கொண்ட தொகுதி என்று சொல்லலாம். இத்தொகுதியில் 2016ம் ஆண்டைத் தவிர அ.தி.மு.க-வில் தொடர்ந்து வெற்றி பெற்று தொகுதியைத் தக்கவைத்துள்ளார் வைத்திலிங்கம். இவர் தற்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார். ஒரு வேளை பா.ஜ.க மேலிட முயற்சியின் மூலம் கூட்டணி அல்லது ஒருங்கிணைப்பு அமைந்தால், வைத்திலிங்கம் தான் வேட்பாளர் என்கிறார்கள். இல்லை என்றால்... அ.தி.மு.க சார்பில் மா.சேகர் தான் வேட்பாளர் என்கிறார்கள்.
தி.மு.க-வைப் பொறுத்தவரை சீட்டுக்கான ரேஸில் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, டாக்டர் அஞ்சுகம் பூபதி, நடிகர் துரை.சுதாகர், கலைமணி இளையபாரதி, எல்.ஜி.அண்ணா, திராவிடக் கதிரவன் உள்ளிட்ட பலர் உள்ளனர். இதில் டாக்டர் அஞ்சுகம் பூபதி, நடிகர் துரை.சுதாகர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. பெண் நிர்வாகியான கலைமணி இளையபாரதி, வேட்பாளர் லிஸ்ட்டில் தனது பெயர் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக காய்நகர்த்தல்களைச் செய்கிறார். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் இவர் நடத்தும் அறக்கட்டளை மூலம் செய்து வரும் சேவைகள் இதற்கு `விசிட்டிங் கார்டாக' அமைந்துள்ளது என்கிறார்கள். கிட்டத்தட்ட 20 வருடங்களாகப் பெண் நிர்வாகி கலைமணி இளையபாரதி சீட்டுக்காகப் போராடி வருவதாகத் தொகுதிக்குள் பேசப்படுகின்றது.

இது குறித்து தி.மு.க வட்டத்தில் சிலரிடம் பேசினோம். ``கலைமணி தி.மு.க-வில் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயாலளர் உள்ளிட்ட பதவிகள் வகிக்கிறார். இவரின் கணவர் இளையபாரதி வழக்கறிஞர். துர்கா ஸ்டாலின் பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் இவர், கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்படக்கூடியவர். 2006-ம் ஆண்டு தேர்தலில் விருப்ப மனுத்தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. அப்போது தலைவரான கருணாநிதியிடம், முரசொலி தொண்டு நிறுவனம் பெயரில் தான் செய்த சேவை பணிகள் அடங்கிய ஆல்பத்தைக் காட்டி, வாய்ப்பு கேட்டிருக்கிறார்.
உடனே கருணாநிதி, அருகில் இருந்த கோசி.மணியிடம், `மணி என்னய்யா... இந்தப் பொண்ணு சீட்டு கேட்குது, சரி வருமா?' எனக் கேட்க, அவரும் `ஆமாண்ணே! தொகுதியில் நல்ல பேர் இருக்கு... கொடுக்கலாம்' எனச் சொல்லி இருக்கிறார். இதையடுத்து தலைமை கலைமணியைப் பற்றி விசாரித்து தேர்தலுக்குத் தயாராகவும் அறிவுறுத்தியுள்ளது. வேட்பாளர் லிஸ்ட்டில் இவரது பெயரும் இடம்பெற்ற நிலையில், வேட்பாளர்கள் லிஸ்ட்டை கருணாநிதி அறிவிக்கப் போகும் சூழலில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த முக்கியப் புள்ளி ஒருவர், ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தினால் சரியாக இருக்காது என கருணாநிதியிடம் சொல்கிறார்.

கருணாநிதியும் யோசிக்க அவர்களுக்குள் ஆலோசனை நடக்கிறது. கலைமணிக்கு பதில் ராஜமாணிக்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பு வைத்திலிங்கத்தால் நூலிழையில் கலைமணிக்கு கை நழுவியது. அப்போது வரை விடாமுயற்சியுடன் சீட்டுக்காகப் போராடி வருகிறார். அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கோவி.செழியன் ஆகியோரின் குட்புக்கில் இருக்கிறார். சமீபத்தில் மண்டல பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேருவிடம், `நான் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ ஆகணும். என்னை வாழ்த்துங்கண்ணே' என்றுள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரு, `நான் வாழ்த்துறேன்... தலைவர்தான் சீட்டு யாருக்குனு முடிவு செய்வார், நானும்பேசுறே'ன் என்றதாகச் சொல்லப்படுகிறது.
கலைமணியின் மருமகள் வினோ செங்கதிர், துர்கா ஸ்டாலின் ஊரான திருவெண்காட்டைச் சேர்ந்தவர். துர்காவிற்கு நெருக்கமான குடும்பம் என்கிறார்கள். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த துர்காவிடம் சீட்டு குறித்து பேசியுள்ளனர். கைக்கு வந்த வாய்ப்பு ஒரு பெண் என்பதால் கை நழுவியது. கட்சிக்காக பணி செய்த எனக்கு தொகுதி மக்களுக்காக உழைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுங்கள் என்றாராம். இதே போல் நடிகர் சுதாகரும், சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருகிறார். டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் இரு தொகுதிகளையும் குறிவைத்துச் செயல்படுகிறார்.
2016ல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் எஸ்.எஸ்.ராஜ்குமார். வைத்திலிங்கம் வலுவாக இருந்த காரணத்தால் இவர் சீட்டு வேண்டாம் என்று ஒதுங்கினார். பின்னர் வேட்பாளர் ஆன புல்லட் ராமச்சந்திரன், வைத்திலிங்கத்தை வீழ்த்தினார். 2021ல் சொந்த கட்சியினர் செய்த உள்ளடிகளால் தோல்வியைத் தழுவியவர், இந்த முறையும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். யாருக்கு சீட் என்பது தலைமையில் கையில்தான் இருக்கிறது" என்றனர்.














