மும்பை தேர்தல்: தொகுதிப் பங்கீட்டை முடிக்க போராடும் தாக்கரே சகோதரர்கள்: பாஜக-விட...
'பதவி பரிந்துரைக்கு ரூ.15 லட்சம் கேட்டார்'- காங். மேலிட பார்வையாளர் மீதான குற்றச்சாட்டும் விளக்கமும்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பரிந்துரைப்பதற்காக மேலிட பார்வையாளர் அனில்போஸ் என்பவர் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக ஆர்.எஸ்.ராஜன் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் மாநில விவசாய அணி பொதுச்செயலாளராக உள்ள ஆர்.எஸ்.ராஜன் கூறுகையில், "நான் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளேன். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவராக எனது பெயரை பரிந்துரை செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்ட மேலிட பார்வையாளர் அனில்போஸ் என்பவர் என்னிடம் பணம் கேட்டார். அதற்காக வாட்ஸ் அப் மூலம் அவர் ஒரு வங்கி கணக்கையும் அனுப்பினார். அந்த வங்கிக் கணக்கு என்னிடம் உள்ளது. ஆனால் நான் பணம் அனுப்பவில்லை. இது போன்ற ஊழல் செயல்பாடுகள் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்" என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆர்.எஸ்.ராஜன் சமூக வலைதளங்களிலும் தகவல்களை பகிர்ந்தார். கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர்தான் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அனில்போஸ். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அனில்போஸிடம் விளக்கம் கேட்டு பேசினோம், "போலியாக தகவல்களை உருவாக்கி என்மீது அவதூறு பரப்புகிறார் ஆர்.எஸ்.ராஜன். அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே அவர்மீது போலி ஆவணம் உருவாக்கியதற்கும், தனிபட்ட முறையில் என் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு குற்றங்களுக்காகவும் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன். அவர் வெளியிட்டுள்ளது எனது வங்கிக் கணக்கோ, எனது நண்பர்களின் வங்கிக் கணக்கோ அல்ல. அது எனது வாட்ஸ் அப் அல்ல. அவர் போலியாக உருவாக்கி உள்ளார். அவரது பெயர் லிஸ்ட்டில் வரவில்லை என மக்களிடம் காட்டுவதற்காக மோசடியாக நாடகம் ஆடுகிறார்.

நான் கன்னியாகுமரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை நேரில் சந்தித்தேன். என்னிடம் நூறுபேர் விண்ணப்பம் தந்தார்கள். அவர்களிடம் நேர்காணல் நடத்தினேன். அதில் மாவட்டத் தலைவர், கட்சியின் வெவ்வேறு வகையான நிர்வாகிகள், அந்தப் பகுதியில் மரியாதை அளிக்க வேண்டியவர்கள் என மூன்று வகையாகப் பட்டியலில், 36 பேரின் லிஸ்ட்டை ஹைகமாண்டுக்கு வழங்கினேன். அதில் மூன்று மாவட்டத் தலைவர்களும், பிற நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தப் பட்டியலை தலைமைதான் சரிபார்த்து முடிவு எடுக்கும். இந்த ரிப்போர்ட்டை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்குத்தான் நான் அளித்துள்ளேன். அந்தப் பட்டியலில் யார் இருக்கிறார்கள் என மற்றவர்களுக்கு எப்படித் தெரியும். ஆனால், உள்ளூரில் யூகங்களின் அடிப்படையில் பொய் பிரசாரம் செய்கிறார்கள்" என்றார்.














