செய்திகள் :

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்: மெகா வெற்றி பெற்ற பாஜக கூட்டணி; புனே, பாராமதியை தக்கவைத்த அஜித் பவார்

post image

மகாராஷ்டிராவில் நடந்த நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் ஆளும் மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 நகராட்சிகளில் 207 நகராட்சிகளை பிடித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் வெறும் 44 நகராட்சிகளை மட்டுமே பிடித்திருக்கிறது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்களின் தீவிர பிரசாரம் காரணமாக பா.ஜ.க 117 நகராட்சிகளை பிடித்திருக்கிறது. பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 53 நகராட்சிகளையும், தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) 37 நகராட்சிகளையும் பிடித்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் அதிகபட்சமாக 28 நகராட்சிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9 நகராட்சிகளிலும். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 7 நகராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

பட்னாவிஸ், ஷிண்டே,அஜித்பவார்

புனேயை தக்கவைத்துக்கொண்ட அஜித் பவார்

இத்தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பெரும்பாலான நகராட்சிகளில் தனித்தே போட்டியிட்டது. இதில் அஜித் பவாரின் சொந்த ஊரான புனே மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 நகராட்சிகளில் 10 நகராட்சிகளை அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிடித்துள்ளது. புனே மாவட்டத்தில் 4 நகராட்சிகளை சிவசேனா(ஷிண்டே) பிடித்துள்ளது. அஜித் பவார் மற்றும் சரத் பவாரின் சொந்த ஊரான பாராமதி நகராட்சியில் அஜித் பவார் கட்சி மொத்தமுள்ள 41 வார்டுகளில் 35 வார்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறது. சரத்பவார் கட்சி வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இத்தேர்தலில் சரத் பவாரோ அல்லது சுப்ரியா சுலேயோ பிரசாரம் செய்யவில்லை. சரத்பவாரின் பேரன் யுகேந்திர பவார்தான் சரத்பவார் கட்சிக்காக முழுமையாக பிரசாரம் செய்தார்.

விதர்பாவில் பா.ஜ.கவிற்கு பின்னடைவு

பா.ஜ.கவுக்கு மிகவும் செல்வாக்குள்ள விதர்பா பிராந்தியத்தில் பா.ஜ.கவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சந்திராப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 நகராட்சிகளில் 7 நகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. முன்னாள் அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரஸ் வெற்றியை பா.ஜ.கவால் தடுக்க முடியவில்லை. அமராவதி மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 நகராட்சிகளில் பா.ஜ.க 6 நகராட்சிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அதேசமயம் கட்சிரோலி மாவட்டத்தில் பா.ஜ.க முழுமையாக வெற்றி பெற்று இருக்கிறது. இதே போன்று மேற்கு மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 33 நகராட்சிகளில் 14 நகராட்சியில் பா.ஜ.க வெற்றி பெற்றது.

பா.ஜ.கவின் வெற்றியை தடுக்க கோலாப்பூர், சாங்கிலி, சோலாப்பூர், சதாரா மாவட்டத்தில் இதர கட்சிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட்டன. மராத்வாடாவில் உள்ள பார்லி நகராட்சியை பா.ஜ.கவும் தேசியவாத காங்கிரஸும் சேர்ந்து கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளன. இத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் தனஞ்சே முண்டே மற்றும் அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் சேர்ந்து பிரசாரம் செய்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் சவானின் சொந்த மாவட்டமான நாண்டெட்டில் பா.ஜ.க பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.

இது அசோக் சவானுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்பு அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். மக்களவை தேர்தலில் நாண்டெட் தொகுதியில் பா.ஜ.க தோல்வியை சந்தித்தது. கொங்கன் பகுதியில் சிவசேனா செல்வாக்காக இருந்த பல பகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கிறது. இத்தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

மும்பை தேர்தல்: தொகுதிப் பங்கீட்டை முடிக்க போராடும் தாக்கரே சகோதரர்கள்: பாஜக-விடம் இறங்கும் ஷிண்டே!

மகாராஷ்டிராவில் முதல் கட்டமாக உள்ளாட்சியில் உள்ள நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேலையில் அரசியல... மேலும் பார்க்க

ஒரத்தநாடு: வைத்திலிங்கத்தால் நழுவிய வாய்ப்பு - திமுக பெண் நிர்வாகியின் காய்நகர்த்தல் பலிக்குமா?!

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்து விட்டது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்றவற்றில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. திமுக கூட... மேலும் பார்க்க

'பதவி பரிந்துரைக்கு ரூ.15 லட்சம் கேட்டார்'- காங். மேலிட பார்வையாளர் மீதான குற்றச்சாட்டும் விளக்கமும்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பரிந்துரைப்பதற்காக மேலிட பார்வையாளர் அனில்போஸ் என்பவர் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக ஆர்.எஸ்.ராஜன் என்பவர் குற்றம்ச... மேலும் பார்க்க

"நீங்கள் அரசியல் சாசதனைத்தை மாற்றினாலும், மாற்றாவிட்டாலும் இந்தியா இந்து தேசம் தான்" - மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது 100-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று, கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அ... மேலும் பார்க்க