செய்திகள் :

சர்க்காரியா போய் ரே வந்தது; அதிமுக காங்கிரஸ் சேர்ந்தது! - திருப்பம் தந்த திருப்பத்தூர் | ஆடுபுலி 04

post image

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் செய்யத் தொடங்கிய கருணாநிதியும், எம்ஜிஆரும் அதே காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி அமைத்தார்கள். ஒரு இடைத்தேர்தலில் நடந்த ஆடுபுலி ஆட்டம் அதிமுக காங்கிரஸ் கூட்டணியை இறுகப்பற்றிக் கொள்ளச் செய்தது. 

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கிய பின்பு, 1971ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், கலைஞர் கருணாநிதி தலைமையில், திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு நடந்த பொதுத்தேர்தல் அது, திமுகவுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், பிரஜா சோசலிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் 1971 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை, அவரது தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 201 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியுடன் ராஜாஜியின் சுதந்திரா கட்சி கூட்டணி சேர்ந்திருந்தது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. காமராஜர் இடைத்தேர்தலில் வென்ற நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதிக்கான போட்டியில் இருந்தார். கருணாநிதி சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

காமராஜர், கருணாநிதி

1971 தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடியைக் கொடுத்தது. 203 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 184 தொகுதிகளை வென்றது. 201 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 15 தொகுதிகளை மட்டுமே வென்றது. 

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அரசியல் ஆடுபுலி ஆட்டத்தில் கருணாநிதிக்கு மிகப்பெரிய அடி காத்திருந்தது. 

அண்ணா மறைந்த பிறகும் கருணாநிதிக்கு உற்ற தோழராக இருந்த எம்ஜிஆர் திமுகவில் அனைத்து நிர்வாகிகளும் கணக்கு காட்ட வேண்டுமென தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தார். கருணாநிதி – எம்ஜிஆர் இடையிலான உரசல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கியது.

எம்ஜிஆர் தனது மக்கள் செல்வாக்கை நிரூபிக்க திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. 1971 நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக எம்பி ராஜாங்கம் மறைவையொட்டி, நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக பொன். முத்துராமலிங்கம், அதிமுக மாயத்தேவர், ஸ்தாபன காங்கிரஸ் என்.எஸ்.வி.சித்தன், இந்திரா காங்கிரஸ் சீமைச்சாமி என்று நான்கு முனைப் போட்டி நிலவியது.

1972 அக்டோபரில் தொடங்கப்பட்ட அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் 1973, மே 22 அன்று நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாகை சூடினார். அதிமுக தனது முதல் கணக்கைத் தொடங்கியது. கட்சி தொடங்கிய ஓராண்டிற்குள் மாபெரும் வெற்றி பெற்றார் எம்ஜிஆர். கருணாநிதியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. அடுத்த ஆண்டு 1974ல் கோயம்புத்தூர் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. கோபால் மறைவையொட்டி, நடந்த இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் அரங்கநாயகம் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். 

அடுத்தடுத்த வெற்றிகள் எம்ஜிஆரை அரியாசனத்துக்கு அழைத்துச் சென்றது. 1975இல் நடக்கவேண்டிய பொதுத்தேர்தல் நெருக்கடி நிலை காரணமான நடக்கவில்லை. 1977இல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் கருணாநிதியா எம்ஜிஆரா என்று களம் மாறியிருந்தது. திமுக கருணாநிதி, அதிமுக எம்ஜிஆர், காங்கிரஸ் கருப்பையா மூப்பனார் என்று நடந்த மும்முனைப் போட்டியில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. 

எம்.ஜி.ஆர்

ஆனால், அந்தக் காலகட்டங்களில் மத்தியில் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ, அவர்கள், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆட்சியை ஏதாவது ஒரு காரணம் சொல்லி கலைத்து விடுவார்கள். 1977இல் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி, இந்திரா காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆட்சியைக் கலைத்தார்கள்.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது இந்திரா காங்கிரஸ். இந்த முறை இந்திரா காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தது. நெருக்கடி நிலைக்குப் பிந்தைய இரண்டாவது தேர்தல்தான் என்றாலும் காங்கிரஸ் – திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. குறிப்பாக அதிமுக முதன்முதலாக வென்ற திண்டுக்கல் தொகுதியை திமுக வென்றது அக்கட்சித் தொண்டர்களுக்கு கொண்டாட்டமாக மாறிப்போனது.

இந்திராகாந்தி பிரதமர் ஆனதும், தமிழ்நாட்டில் எம்ஜிஆர் தலைமையிலான ஆட்சியைக் கலைக்கும் கோரிக்கைகள் எழுந்தன. பல்கேரியா நாட்டில் இருந்து கப்பல் வாங்குவதற்காக எம்ஜிஆர் ஊழல் செய்ததாக திமுக குற்றம் சுமத்தியது. 1980 பிப்ரவரி 17 அன்று டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை, தமிழ்நாடு உள்ளிட்ட ஒன்பது மாநில அரசுகளைக் கலைப்பதாக அறிவித்து விட்டனர்.

ஆட்சிக் கலைப்பு மக்கள் மத்தியில் எம்ஜிஆர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. 

கழக கண்மணிகளே! தமிழ் பெருமக்களே, என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன் பிறப்புகளே, நாம் எதிர்பார்த்தபடி, சட்டத்தின் பெயரால் “அண்ணாவின் அரசு” கலைக்கப்பட்டுவிட்டது என்று தொண்டர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதிய எம்ஜிஆர் அதையே மக்களிடத்தில் பரப்புரையாகக் கொண்டு சென்றார். 

எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தி

சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் வென்ற எம்ஜிஆர் 1980 ஜூன் 9 அன்று பதவியேற்றுக் கொண்டார். ஆனால், டெல்லியில் அதிமுகவுக்கு எதிரான திமுக கூட்டணியில் வென்ற காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

எம்ஜிஆர் மத்திய அரசுடன் இணக்கமாகப் போக விரும்பினார். ஆனால், எம்ஜிஆர் ஆட்சியில் எரிசாராய ஊழல் நடைபெற்றதாக, திமுக, காங்கிரஸ் எம்பிக்களும், ஜனதா கட்சி எம்பியான சுப்பிமணியன் சுவாமியும் கொடுத்த புகார்களின் அடிப்படையில் பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. ஒடிசா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.ரே தலைமையில் தமிழ்நாடு, கேரளா இருமாநிலங்களின் எரிசாராய ஊழல் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்தது உள்துறை அமைச்சகம். 

ரே கமிஷன் என்றழைக்கப்பட்ட அந்த ஆணையம் அரசியலில் முக்கிய இடம் பிடித்தது. திமுகவுக்கு சர்க்காரியா கமிஷன், அதிமுகவுக்கு ரே கமிஷன் என்றளவில் மத்திய அரசின் அழுத்தம் மாநிலக் கட்சிகளுக்கு நெருக்கடியை உண்டாக்கியது.

இந்த சூழலில்தான், இன்றைய சிவகங்கை மாவட்டம், அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வெ.வால்மீகி திடீரென மரணமடைந்தார். 1981 நவம்பர் 29 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. 

முந்தைய தேர்தலில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. வால்மீகி என்பதால், மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்தார்கள். அதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணியின் சார்பாக யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இடைத்தேர்தல் என்றாலே மாநிலத்தில் ஆளுங்கட்சிகளே வெற்றிபெறும் நிலை இருந்ததால், அதிமுக போட்டியிட வேண்டுமென முதலமைச்சர் எம்ஜிஆரிடம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

எம்.ஜி.ஆர்

திருப்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளராக எ. அருணகிரி அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்கியது. அதிமுக தொடங்கியது முதலே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்ஜிஆருக்கு ஆதரவாக இருந்தது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் எம். கல்யாணசுந்தரம் எம்ஜிஆரின் நெருங்கிய அரசியல் நண்பராகவும் இருந்தார். அந்த அடிப்படையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை முதலமைச்சர் எம்ஜிஆர் ஆதரிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். 

ஆனால், அரசியல் ஆடுபுலி ஆட்டத்தின் திடீர் திருப்பமாக, இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் முதலமைச்சர் எம்ஜிஆரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கட்ராமன் கூட்டணிக் கட்சியான திமுகவை கலந்து ஆலோசிக்காமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது என்று அறிவித்தார். 

நடப்பது ஒரே ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் என்றாலும் கூட, தமிழக அரசியலில் ஒவ்வொரு நாளும் ஆடுபுலி ஆட்டங்கள் தொடர்ந்தன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அதிமுக கூட்டணியில் இருக்கும் ஏழு கட்சிகளும் ஆதரிக்க வேண்டுமென கல்யாணசுந்தரம் கோரிக்கை விடுத்தார்.

திமுகவுக்கும், காங்கிரசுக்கும் சட்டமன்றத் தேர்தலோடு இருந்த உறவு முடிந்துவிட்டது, இது இடைத்தேர்தல் என்று காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கருப்பையா மூப்பனார், டெல்லியிலிருந்து காங்கிரஸ் மேலிடமும், பிரதமர் இந்திராகாந்தியும் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்றார்.

1981 அக்டோபர் 24 அன்று திமுக தலைவர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோருடன் கருப்பையா மூப்பனார், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அப்துல் சமது அந்தப் பேச்சுவார்த்தையில் உடனிருந்தார்.

இதற்கிடையில் அக்டோபர் 31 அன்று தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் திடீர் பயணமாக டெல்லி சென்றார். பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்கள். பாரதி நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பு என்றார்கள். 

திருப்பத்தூர் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி எந்தக் கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை. அவர்களாக ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறோம் என்று அறிவித்தார்கள். காங்கிரஸ் மேடையில் வேறு கட்சித் தலைவர்கள் ஏறவில்லை. 

ஆதரவு கேட்காமலேயே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அருணகிரிக்கு ஆதரவாக எம்ஜிஆர் பரப்புரை செய்தார். காங்கிரஸ் மேடையில் ஏறவில்லை. வேன் மூலமாக தொகுதியைச் சுற்றி வந்தார். 

திருப்பத்தூர் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வென்றது. காங்கிரஸ் அதிமுக கூட்டணி மலர்ந்தது. அன்று முதல் எம்ஜிஆரின் இறுதிக்காலம் வரை காங்கிரஸ் அதிமுக கூட்டணி தொடர்ந்தது.

சர்க்காரியா கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி சேர்ந்தது என்று விமர்சித்த எம்ஜிஆரை, இந்த முறை ரே கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் அதிமுக கூட்டணி அமைத்தது என்று விமர்சனம் செய்தார் கருணாநிதி.!

அரசியலில் எல்லாம் ஆடு புலி ஆட்டம் தான் போல!

(ஆடு புலி ஆட்டம் தொடரும்)

`அமெரிக்காவில் முதலீடு... உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்'- விளக்கும் பியூஷ் கோயல்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்தது ... மேலும் பார்க்க

தவெக கொங்கு மண்டல கூட்டம்: செங்கோட்டையன் ஆப்சென்ட்; டென்ஷனான அருண்ராஜ்!

தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒவ்வொரு மண்டலமாக பயணித்து மக்களின் கருத்துகளை கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் மேற்கு மண்டல மக்களின் கருத்து கேட்பு கூட்டம் கோவை கணியூர் பகுதியில் இன்று நடைபெற்றது... மேலும் பார்க்க

இந்தவாரம் Vikatan.com ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா? அப்போ பதில் சொல்லுங்க... பரிசை அள்ளுங்க!

விகடன் இணையதளத்தில் வெளியான தொடர்களை ஏற்கனவே படிச்சிட்டீங்கனா, கீழே உள்ள லின்ங்கை கிளிக் செய்து க்விஸ் போட்டியில் உடனே பங்குபெறுங்கள். தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு பரிசு இருக்கு... https://... மேலும் பார்க்க

StartUp சாகசம் 56: `இணையவழி இணைப்பு + AI' - Smart Toilet துறையில் சாதிக்கும் காளியப்பன் | Sprint 6

Sprint6StartUp சாகசம் 56எதிர்கால இந்தியாவில் மிகப்பெரும் அச்சுறுத்தல்கள் எங்கிருந்து வந்தாலும் உள்ளேயே உள்ள அச்சுறுத்தல் கழிவு மேலாண்மைகள், அந்த கழிவு மேலாண்மையில் கழிவறைகளில் மேலாண்மை என்பது மிக முக்... மேலும் பார்க்க

நள்ளிரவு கைது: `என் உயிருக்கு ஆபத்து' - 30 வருட பழைய வழக்கில் பீகார் எம்.பி மீது அதிரடி நடவடிக்கை

பீகார் மாநிலம் பூர்னியா தொகுதி சுயேட்சை எம்.பி பப்பு யாதவ். இவர் 1995-ம் ஆண்டு வீடு வாடகைக்கு எடுத்து அதில் எம்.பி அலுவலகம் அமைத்ததால், வீட்டு உரிமையாளர் மோசடி வழக்கை பதிவு செய்திருந்தார். இந்த நிலையி... மேலும் பார்க்க