"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்
"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம்
நாளை மறுநாள் (மே 4), தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விசிகவினர் தேர்தல் பணிகள் குறித்து பேசியுள்ளார்...
வெற்றி எதிர்பார்ப்பு
"தேர்தல் முடிவுகள் குறித்து எல்லோரையும் போல, மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.
நம்முடைய தொகுதிகளில் மட்டுமின்றி நாம் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும்' என்கிற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.
ஏறத்தாழ பத்து நாள்களுக்கு மேலாக நான் நம்முடைய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளோடு தோழமை கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கும் வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டேன்.
காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதை நீங்கள் அறிவீர்கள். களத்தில் நாம் கண்ட உண்மை என்னவென்றால், மக்கள் பெருமளவில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கிறார்கள் என்பதாகும்.
ஒற்றுமை குறைபாடு
நம்முடைய கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்ட 'எட்டு தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்' என்றும் நான் பெரிதும் நம்புகிறேன்.
தேர்தலில் நம்முடைய கட்சித் தோழர்கள் அனைத்து தொகுதிகளிலும் கட்டுக்கோப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஒரு சில தொகுதிகளில் மட்டும் தோழர்களிடையே ஒற்றுமை குறைபாடு இருந்ததாக தகவல்கள் வருகின்றன. அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும், தோழமை கட்சிகளின் வேட்பாளர்கள் நம்முடைய கட்சியின் பணிகளைப் பாராட்டியுள்ளனர். களப்பணி ஆற்றிய தோழர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதோடு, விரைவில் 'மாவட்ட செயலாளர்கள் கூட்டம்' மற்றும் தேர்தல் பணிக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்."















