சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் - என்ன ந...
சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் - என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்... அவருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் பரவியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கல்லூரி முதல்வர் அசோக், அம்மாணவி மற்றும் அவரின் தாயாரை அழைத்து எச்சரித்ததுடன், மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு எச்சரிக்கை செய்ததுடன், படிப்பை தொடருமாறு அறிவுறுத்தினாராம். இந்த நிலையில், மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் மிரட்டியதால்தான் அம்மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக்கூறி, எஸ்.எப்.ஐ மாணவர் சங்கத்தினர், அவரின் இறப்பிற்கு நீதி கேட்டும், உரிய இழப்பீடு கேட்டும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அளித்துள்ளது.
அதே நேரத்தில், தற்போது வைரலான புகைப்படம், ஓர் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது எனவும், அந்த படம் தற்போது எப்படி வைரல் ஆனது எனவும் சக மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கல்லூரி முதல்வர் அசோக்கின், உதவியாளர் மணிமாறன்தான் அந்த புகைப்படத்தை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாகவும், உயிரிழந்த மாணவியை பழி வாங்கும் விதமாகச் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் உதவியாளர் மணிமாறன் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாணவியின் தாயார் மற்றும் மாணவர்கள் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் நிலை குறித்து ஆய்வாளர் செல்வகுமாரிடம் பேசினோம், “புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. விசாரணையின் நிறைவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.















