செய்திகள் :

`சுற்றுச்சூழலின் Bio Indicators'- தனித்துவமான புலி வண்டுகள் குறித்து விளக்கும் பல்லுயிர் ஆய்வாளர்கள்

post image

இவ்வுலகில் வாழும் அத்தனை உயிர்களும் சூழலியலோடு ஒன்றி இயங்குவதோடு மட்டுமன்றி, சுற்றுச்சூழலின் நிலையையும் உயிர் காட்டியாக (Bio indicators) இருந்து சுட்டுகின்றன.

மழை வருவதை முன்கூட்டியே உணர்த்தும் தும்பிகள்! சீரான மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள்! நீரின் மாசற்ற தன்மையை உணர்த்தும் பூஞ்சைகளை போல “புலி வண்டு” இனமும் ஓர் உயிர்காட்டி தான்.

புலி வண்டுகள் சேலம் காவிரி ஆறு மற்றும் மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப்பகுதிகளிலும் உள்ளன என்பதை, ஆய்வின் மூலம் பதிவுசெய்துள்ள பல்லுயிர் ஆராய்ச்சியாளரான ஏஞ்சலின் மனோவிடம் பேசினோம்.

``கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து, சேலத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலையான ஏற்காடு மற்றும் காவிரி ஆறு, நீர்த்தேக்கப் பகுதியான மேட்டூரிலும் பறவை மற்றும் பல்லுயிர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த ஆய்வில் தான், அங்குள்ள புலி வண்டு வகையையும் கண்டுபிடிக்க முடிந்தது.

ஏற்கெனவே, ஏற்காடு பகுதியில் சில புலி வண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. நானும் கடந்த மாதத்திலிருந்து “புலி வண்டு” தேடும் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது காவிரி ஆறு மற்றும் ஸ்டான்லி நீர்த்தேக்கப்பகுதியில் (மேட்டூரில்) “கலோமெரா அங்குலேட்டா” (Sand Tiger Beetle Calomera angulata) என்ற புலி வண்டு இனத்தை பதிவு செய்துள்ளேன்.

இவ்வினம் இப்போது முதன்முறையாக சேலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புலிவண்டின் உடலைமைப்பு

சற்றுக் கூர்ந்து கவனித்தால், புலி வண்டுகளின் தனித்துவமான உடலமைப்பு எளிதில் நம் கவனத்தை ஈர்க்கும். இவற்றின் முகப்பகுதியில் காணப்படும் வளைந்த, கூர்மையான கீழ்த்தாடைப் பற்கள் (Mandibles) இரையைப் பிடிக்க உதவுகின்றன. தலையில் உள்ள இரண்டு உணர் நீட்சிகள் (Antennae) சுற்றுப்புற மாற்றங்களை உணரவும், பெரிய கூட்டுக்கண்கள் இரையைக் கண்டறியவும் பயன்படுகின்றன.

புலி வண்டு

வேகமாக ஓடுவதற்கேற்ற நீண்ட, மெல்லிய ஆறு கால்களையும் இவை கொண்டுள்ளன. முன் இறக்கைகள் மாற்றமடைந்து உறுதியான கவசம் போன்ற எளிட்ராவாக (Elytra) அமைந்துள்ளன. பறக்கும் போது, புலி வண்டு முதலில் எளிட்ராவை உயர்த்தி, அதன் கீழுள்ள இறக்கைகளை விரித்து பறக்கிறது. எளிட்ராவில் காணப்படும் பல்வேறு நிறங்கள், புள்ளிகள் மற்றும் வடிவமைப்புகள் புலி வண்டு இனங்களை அடையாளம் காண முக்கியமான பண்புகளாக விளங்குகின்றன.

புலி வண்டு பெயர் காரணம்..

புலி வண்டுகள் அதிவேகமாக ஓடி இரைதேடும் பண்புள்ளவை. சிறிய பூச்சிகள், புழுக்கள், சிலந்தி போன்றவற்றை வேட்டையாடி உண்ணும் திறன் படைத்தவை. தூரத்தில் இரையைக் கண்டால் அத்திசையை நோக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி, சட்டென நின்று மீண்டும் ஒரு நோட்டம்விடும். ஏனெனில், “கண்மண் தெரியாமல் ஓடுவது” என்போமே, அப்படித்தான் அதன் ஓட்டம் இருக்கும். ஆகவே, சிறிது தூரம் ஓடி, பின்னர் நின்று இரையைக் கண்டு கணநேரத்தில் அவற்றைத் தமது கூர்மையான கீழ்த்தாடையால் கவ்விப் பிடிக்கும்.

இந்தக் கீழ்த்தாடையில் உள்ள சிறிய ஓட்டையின் வழியே சுரக்கும் ஒரு நொதி, பிடித்த இரையை விரைவில் செரிக்க வைக்கும். புலி வண்டு (Tiger Beetle) எனப் பெயர் வரக் காரணம், காட்டுப் புலி போலவே இந்த வண்டு பிற பூச்சிகளை மிக வேகமாக வேட்டையாடி உண்பது தான். அதாவது சில புலி வண்டினங்கள், 1 மணி நேரத்தில் 9 கிலோ மீட்டர் பயணம் செய்யக்கூடியவை. ஆகையில், உலகத்தின் அதிவேக பூச்சியினத்தில் இதுவும் ஒன்று !

புலி வண்டு

புலி வண்டுகளின் வாழிடம்..

பொதுவாகவே, புலி வண்டுகள் நல்ல ஈரப்பகுதி, சதுப்பு நிலம், காடுகள், குறிப்பிட்ட நீர்நிலை சூழல் போன்ற சூழலியல் சமன்பாடு உள்ள பகுதிகளில் தான் வாழும்.

வேளாண் பூச்சிக் கட்டுப்பாடு..

புலி வண்டுகள் வேளாண் பயிர்களில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை வேட்டையாடும் தன்மையுடையது. இந்தியாவில் அரிசி, தேயிலை, கரும்பு மற்றும் காலிஃபிளவர் போன்ற பயிர்களில் புலி வண்டுகளின் பங்கு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்து பயிர் பாதுகாப்பிற்கு உதவுகின்றன. இதனால், இயற்கையான பூச்சிக் கட்டுப்பாட்டு முறையில் புலி வண்டுகளின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

புலி வண்டு - ஓர் உயிர் காட்டி !

இந்த புலி வண்டின் வாழ்வு, மேட்டூர் சுற்றுவட்டார பகுதியின் மாசற்ற தன்மை, மனிதர்கள் தொந்தரவு பெரிதாக இல்லாத நீர்நிலை சூழல், சீரான சூழலியல் அமைப்பு போன்றவற்றை சுட்டும் உயிர் காட்டியாக (Bio indicator) திகழ்கிறது.

மேலும், இதே பகுதியில் Little Tiger Beetle Cylindera minuta (சிலிண்டரா மைனூட்டா) மற்றும் Distinctive Tiger Beetle Myriochila distinguenda (மைரியோசிலா டிஸ்டிங்குவெண்டா) போன்ற புலி வண்டினங்களையும் பதிவு செய்துள்ளேன்.

ஷரன், ஏஞ்சலின் மனோ

இது போன்ற பல்வேறு தனிச்சிறப்பு வாய்ந்த சிறுகுறு உயிரினங்கள் நம் தமிழ்நாட்டை வாழிடமாக கொண்டுள்ளன. அதை கண்டறிந்து பதிவு செய்யவேண்டும். இப்படிப்பட்ட உயிரினங்களை ஆய்வு செய்வதின் மூலம் நம் சூழலியல் வளங்களையும் மாற்றங்களையும் நன்கு அறிய முடியும்" என்கிறார் ஆய்வாளர் ஏஞ்சலின் மனோ.

இது குறித்து, இந்திய அளவில் “புலி வண்டு காணல்” (Tiger beetle watch) முன்னெடுப்புக்கு நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டுவரும் ஷரன் கூறுவதாவது,

``இந்தியாவில் மொத்தம் சுமார் 250-க்கும் மேற்பட்ட புலி வண்டு சிற்றினங்கள் உள்ளன. அதிலும் சுமார் 120-க்கும் மேற்பட்டவை இந்தியாவில் மட்டுமே காணப்படுபவை. 1970-90 களில் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவில் புலி வண்டுகள் ‌ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிலும் தமிழ்நாட்டில் அதிக அளவிலான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, சேலத்தின் சுற்று வட்டார பகுதிகளில், ஜான்சீனியா ருகோசிசெப்ஸ், ஜான்சீனியா ரோஸ்ட்ருல்லா, ஜான்சீனியா வெஸ்டர்மேனி, ஜான்சீனியா பிளகாடிமாலோ, ஃபைரா கேட்டினா, சிசிண்டெலா காலிகிராம்மா, சிசிண்டெலா பிரின்செப்ஸ் போன்ற ஏழு இனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன‌.

புலி வண்டு காணல் (Tiger Beetle Watch)..

இது இந்தியா முழுவதும் நடைபெறும் ஒரு குடிமக்கள் அறிவியல் (Citizen Science) முயற்சியாகும். இதன் மூலம் புலி வண்டுகளின் பரவல், எண்ணிக்கை மற்றும் வாழ்விடங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இயற்கை ஆர்வலர்கள் தாங்கள் காணும் புலி வண்டுகளின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், அவற்றின் பரவல் மற்றும் சூழலியல் முக்கியத்துவத்தை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு உதவிவருகிறோம்.

புலி வண்டு பார்வையிடல் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகும்...

புலி வண்டுகள் வெறும் அழகிய பூச்சிகள் மட்டுமல்ல ! அவை பல்வேறு பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முக்கிய வேட்டையாடிகளாகவும் செயல்படுகின்றன. குறிப்பாக எறும்புகள் உள்ளிட்ட பல சிறிய பூச்சிகளை இரையாகக் கொண்டுள்ள.

மேலும், இவ்வண்டுகள் ஒரு பகுதியின் சமநிலையையும் உயிரினப் பன்மைத்தன்மையினையும் காட்டும் முக்கியக் குறியீடாகவும் விளங்குகின்றன.

புலி வண்டுகள் சுற்றுச்சூழல் மாற்றங்களை உணரும் ‌திறன் கொண்டவை. ஆற்றங்கரைகள், புல்வெளிகள், காடுகள், கடற்கரைகள் மற்றும் உப்பளங்கள் போன்ற குறிப்பிட்ட வாழிடங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால், அவற்றின் இருப்பு அந்தச் சூழலின் ஆரோக்கியத்தை மதிப்பிட உதவுகிறது.

பறவைப் பார்வையிடல், வண்ணத்துப்பூச்சி பார்வையிடல் போன்றே, புலி வண்டுகளை கவனித்து ஆய்வு செய்வதும் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகும். சிறிய அளவில் இருந்தாலும், ஒவ்வொரு புதிய இனத்தையும் கண்டறிவது ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்பின் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பல புலி வண்டு இனங்கள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படாத நிலையில் இருப்பதால், அவற்றைப் பதிவு செய்வதும் கண்காணிப்பதும் அவற்றின் பரவல், சூழலியல் பங்கு மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் புரிந்துகொள்ள முக்கிய பங்களிப்பாக அமைகிறது" என்று தெரிவிக்கிறார்.

ஒரு புலி வண்டின் இருப்பு, ஆரோக்கியமான சூழலின் அடையாளம் என்பது ‌புலப்படுகிறது.

``தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 'El Nino' தீவிரம் அடைய வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 'எல் நினோ' (El Nino) காலநிலை மாற்றம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது தீவிரமடைந்து ... மேலும் பார்க்க

Philliphines-ல் சக்திவாய்ந்த நில நடுக்கம்: ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸ் நேரப்படி, இன்று காலை 7.40 மணிக்கு, பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான மிண்டானாவில் 7.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதையொட்டி, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில... மேலும் பார்க்க

சூரியனில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 வெடிப்புகள்! - சிக்கலை சந்தித்த ரேடியோ சேவைகள்; என்ன நடந்தது?

சூரியனில் இந்த வாரம் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள், அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த சூரியப் புயல்களை (Solar Flares) பூமிக்கு நேராக அனுப்பி வைத்துள்ளது. இதன் காரணமாக, பூம... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்திற்கு வெளியே புகைமூட்டம்; சென்னை துறைமுகம் சொல்லும் காரணம் என்ன?

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நண்பகல் 12.30 மணியளவில் புகைமூட்டம் திடீரெனக் கிளம்பியது. அந்த வழியாக பயணித்தவர்களுக்கு லேசான மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டன. ஆரம்பத்தில், இந்தப் புகைமூட்டத்... மேலும் பார்க்க