கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' - ஜனவரி டூ ஜூன் 202...
செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம்: 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்த பலன் தரும் அபூர்வ தலம்!
நம் தேசத்தில் கலியுகத்திலும் அற்புதங்கள் நிகழும் அநேக தலங்கள் உள்ளன. அப்படி ஒரு தலம்தான் திருக்கழுக்குன்றம்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நன்னீர்க்குளம் ஒன்றில் சங்கு தோன்றும் அதிசயம் நிகழும் தலம் அது. வாருங்கள் அந்த அற்புதத் தலத்தின் தலபுராணத்தையும் அங்கு அருளின் ஈசனின் மகிமைகளையும் அறிந்துகொள்வோம்.
செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். நான்கு யுகங்களாகத் தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் இந்தத் தலத்தை சைவக் குரவர்கள் நால்வரும் பாடியிருக்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் தங்களுக்குள், ஈசனை அடைய உலக உயிர்களுக்கு அதிகம் உதவுவது 'யார் பெரியவர்' விவாதம் செய்யத் தொடங்கின.
ஈசனோ அடிமுடி காணமுடியாத பெரியோன். அவன் அருள் இல்லாமல் யார் அவன் குறித்த ரகசியங்களை உணரமுடியும்... வேதங்கள் நான்கும் ஈசனை நோக்கித் தவம் செய்தன. இத்தலத்தில் ஈசன் கோயில்கொண்டு இருப்பதை அறிந்து தேடிவந்து வணங்கின. வேதமூர்த்தியான ஈசனும் மனம் மகிழ்ந்து அவற்றின் ஐயத்தைத் தீர்த்து தரிசனமும் தந்து அருளினார்.
மெய்ப்பொருளான சிவபெருமானைத் தரிசித்ததன் மூலம் தங்கள் ஐயம் நீங்க பெற்ற வேதங்கள் இத்தலத்திலேயே மலையாக நிலைபெற்று அருளின. அவற்றின் மீது ஈசனும் வேத கிரீஸ்வரராக எழுந்தருளினார். இன்றும் மலையின் உச்சியில் அமைந்திருக்கும் அதர்வண வேதப் பாறையில் ஈசன் வீற்றிருக்கிறார்.
இத்தலத்திற்கு வேதகிரி, பட்சி தீர்த்தம், ருத்ரகோடி, கழுகாசலம், கதலிவனம், சங்குபுரம் எனப் பல பெயர்கள் உண்டு. கல்வெட்டுகளின்படி இது 'உலகளந்த சோழபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்கயிலையிலிருந்து நந்திதேவரால் கொண்டு வரப்பட்ட மூன்று சிகரங்களில் ஒன்று இங்குள்ளதால், இது 'தென் கயிலாயம்' என்றும் போற்றப்படுகிறது.
இத்தலம் யுகங்களாக கழுகுகளால் வழிபடப்பட்ட தலம். எனவேதான் திருக்கழுக்குன்றம் என்ற பெயரையும் பெற்றது. கிருத யுகத்தில் சண்டன், பிரசண்டன்; திரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு; துவாபர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன்; கலியுகத்தில் சம்பு, ஆதி ஆகிய கழுகுகள் வந்து ஈசனை தினமும் வழிபட்டன என்கிறது தலபுராணம்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட தினமும் உச்சிப் பொழுதில் கழுகுகள் இந்த ஆலயத்துக்கு வருவது வழக்கமாக இருந்தது. இன்றும் அபூர்வமாக கழுகுகள் வந்து செல்வதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.

சுமார் 500 அடி உயர மலையில் ஈசன் வாழைப் பூங்குருத்து வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். அம்பிகை 'சொக்கநாயகி' மற்றும் 'பெண்ணின் நல்லாளம்மை' என அழைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் உள்ள பெரிய கோயிலில் ஈசன் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.
இங்குள்ள அம்பிகை திரிபுரசுந்தரி. இவரின் திருமேனி அபூர்வ மானது. எனவே வருடத்தில் மூன்று நாள்கள் தவிர மற்ற நாள்களில் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.
அதேபோன்று மலையிலிருந்து இறங்கும் வழியில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கட்டிய அழகிய குடைவரைக் கோயில் ஒன்றும் உள்ளது. அதில் சிவலிங்கத் திருமேனி ஒன்றையும் தரிசனம் செய்யலாம்.
இங்குள்ள 12 தீர்த்தங்களில் சங்கு தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்க்கண்டேய ரிஷிக்காக ஈசன் சங்கைத் தோற்றுவித்த தலம் இது. இன்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பது உலகப் புகழ்பெற்ற அதிசயம். குரு பகவான் கன்னி ராசியில் பிரவேசிக்கும்போது இங்கு 'சங்கு புஷ்கர மகாமேளா' சிறப்பாக நடைபெறுகிறது.
திருவண்ணாமலையைப் போன்றே இங்கும் கிரிவலம் வரும் வழக்கம் உள்ளது. இத்தலத்துக்குத் தொடர்ந்து 12 பௌர்ணமிகள் வந்து கிரிவலம் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் அமைந்துள்ள மூன்று சிவமூர்த்தங்களையும் தரிசிப்பது, 12 ஜோதிர்லிங்கங்களைத் தரிசித்த புண்ணியத்தைத் தரும் என்பதால் இத்தலம் பெரும் பழைமையும் மகிமையும் உடையதாகக் கருதப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை இந்திரன் மின்னல் வடிவில் ஈசனைப் பூஜிப்பதாகவும் ஐதிகம்.

இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடி, மலையை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வணங்குவோருக்குத் தீராத நோய்கள் நீங்கி, ஜன்ம வினைகள் யாவும் அகலும் என்பது தலபுராணம் சொல்லும் செய்தி.
வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை திருக்கழுக்குன்றம் வந்து வேதகிரீஸ்வரரையும் பக்தவத்சலேஸ்வரரையும் தரிசனம் செய்து பல்வேறு நற்பலன்களையும் அடையுங்கள்.



















