BB Tamil 9: `அவர் அப்படித்தான் பேசுவார்' பிரஜின் விவகாரத்தில் முன்கூட்டியே கணித்...
சென்னை: `உங்க தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாரு’ - கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி சிக்கினார்
சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் குடியிருந்தவர் மணிகண்டன் (34). இவர், சொந்தமாக கார் வைத்து சில நிறுவனங்களுக்கு ஓட்டி வந்தார். இவரின் மனைவி சரண்யா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
மது அருந்தும் பழக்கமுள்ள மணிகண்டனுக்கு தன்னுடைய மனைவி சரண்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சரண்யா, யாருடனோ அடிக்கடி செல்போனில் ரகசியமாக பேசி வந்திருக்கிறார். அதைக் கவனித்த மணிகண்டன், மனைவி சரண்யாவை பலமுறை கண்டித்திருக்கிறார். அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

கடந்த 23.11.2025-ம் தேதி இரவு மணிகண்டன் வீட்டில் மது அருந்திவிட்டு படுக்கையறையில் தூங்க சென்றிருக்கிறார். இந்தநிலையில் மணிகண்டனின் அக்கா உமா மகேஸ்வரியை செல்போனில் தொடர்பு கொண்ட சரண்யா, `உங்கள் தம்பி மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலை’ செய்து கொண்டதாக கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உமா மகேஸ்வரியும் அவரின் கணவரும் மணிகண்டனின் வீட்டுக்கு உடனடியாக வந்திருக்கிறார்கள். அப்போது பெட்டில் மணிகண்டன், படுத்திருந்திருக்கிறார். அந்த அறையில் உள்ள மின்விசிறியில் அறுந்த நிலையில் கயிறு தொங்கிக் கொண்டிருந்திருக்கிறது.
இதையடுத்து மணிகண்டனை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சரண்யாவும் உமா மகேஸ்வரியும் சென்றிருக்கிறார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.
அதனால் மணிகண்டனின் மரணம் குறித்து உமா மகேஸ்வரி, கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டனின் கழுத்திலிருந்த காயங்களைப் பார்க்கும் போது அவர் தற்கொலை செய்து இறக்கவில்லை. மாறாக அவரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி யாரோ கொலை செய்திருக்கலாம் என்ற தகவலை போலீஸாரிடம் தெரிவித்தனர்.
அதனால் உஷாரான போலீஸார், மணிகண்டனின் மனைவி சரண்யா, சகோதரி உமா மகேஸ்வரி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் சரண்யாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய நட்பு இருந்தது தெரியவந்தது.

அதனால் சரண்யாவிடம் போலீஸார் தங்களின் பாணியில் விசாரிக்கத் தொடங்கினர். முதலில் தன்னுடைய கணவர் மணிகண்டன் தூக்குப் போட்டுதான் தற்கொலை செய்து கொண்டார் என கூறியிருக்கிறார் சரண்யா. அதை நம்புவதைப் போல நடித்த போலீஸார், சரண்யாவின் செல்போனை ரகசியமாக ஆய்வு செய்தனர். அதில் அவர், அந்த இளைஞருடன் அடிக்கடி போனில் பேசி வந்தது தெரியவந்தது.
மேலும் சரண்யாவின் மகன், மகளிடம் போலீஸார் விசாரித்தபோது சம்பவத்தன்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை நடந்தது. அதன்பிறகு நாங்களும் அம்மாவும் ஹாலில் படுத்துக் கொண்டோம். அப்பா மட்டும் தனியாக பெட் ரூம்பில் படுத்திருந்தார். நாங்கள் இருவரும் தூங்கிவிட்டோம் என்று கூறினர்.
இந்த தகவலையெல்லாம் சேகரித்த போலீஸார், சரண்யாவை மீண்டும் அழைத்து உன்னுடைய கணவர் மணிகண்டன், தற்கொலை செய்யவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என (பிரேத பரிசோதனை (பி.எம்) ரிப்போர்ட்டில் தெரியவந்திருக்கிறது. அதனால் அவரைக் கொலை செய்தது யாரென்று சரண்யாவிடம் என்று விசாரித்தனர். அதைக்கேட்ட சரண்யாவின் முகம் வியர்த்துக் கொட்டியது.

அதன் பிறகே தன்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு மணிகண்டன் அடிக்கடி தகராறு செய்ததால் சம்பவத்தன்று போதையிலிருந்த அவரின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்தேன் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார் சரண்யா. இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், சரண்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அப்பா கொலை செய்யப்பட, அம்மா சிறைக்குச் செல்ல இரண்டு குழந்தைகளும் உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்த காட்சி பார்ப்பவர்களின் கண்களை கலங்க வைத்தது.


















