`அமெரிக்காவின் ஒரு மெயில்' அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவு! ரூ.1 ...
சென்னை வடபழநி ஆதிமூலப் பெருமாள்: திருமண வரம் தரும் புதன்கிழமை திருமஞ்சனம்; வழக்குகளும் தீரும்!
வடபழநி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வடபழநி ஆண்டவர் முருகப்பெருமான் திருக்கோயில்தான். ஆனால் அதன் அருகிலேயே இருக்கும் ஒரு பெருமாள் தலம் மிகவும் பழைமையானது.
600 ஆண்டுகள் பழைமையான இந்தத் தலத்தில் பெருமாள் கருணாமூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலித்துவருகிறார். மேலும் இத்தலம் மகிமை நிறைந்த பிரார்த்தனை பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. வாருங்கள். இத்தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.
பெருமாள் ஆபத்சகாயன். ஆபத்தில் தன்னை நோக்கி, 'ஆதிமூலமே' என்று கூப்பிட்ட யானைக்கு ஓடிவந்து அருள்செய்தவன். அந்தத் திருநாமத்தோடு பெருமாள் அனுகிரகிக்கும் தலங்கள் அனைத்துமே மிகவும் விசேஷமானவை. நம் துயர் தீர்ப்பவை. அப்படிப்பட்ட பெருமாளாக வடபழநியில் ஆதிமூல பெருமாளாக சேவை சாதிக்கிறார்.

மேலிரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழிரு கரங்களில் அபய, ஆஹ்வான ஹஸ்த முத்திரைகளைக் காட்டியும், ஒரு காலை மடித்துக்கொண்டு, மற்றொரு காலை தாமரை மலரின்மேல் வைத்தபடி அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார் பெருமாள்.
மூலவர் ஆதிமூல பெருமாள் என்றால் உற்சவர் வரங்களை வாரித்தரும் வரதராஜர். பூதேவி ஸ்ரீதேவித் தாயாரோடு சேவை சாதிக்கிறர். இவரின் தரிசனமே நம் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைப்பது. பெருமாளின் திருவுரு அவ்வளவு அற்புதமாக அமைந்திருக்கிறது. நம் குறைகளை எல்லாம் கேட்டு உடனே அருள் செய்யும் பெருமாளாக அவர் அருள் கிறார் என்கிற நம்பிக்கை உடனே நமக்கு ஏற்பட்டு விடுகிறது.
இந்தப் பெருமாளை வழிபட்டால் எதிரிகளின் தொல்லைகள் விலகும். நோய் மற்றும் கடன்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும். பலருக்கும் வெளிநாட்டு வேலை யோகம் தடையாக இருக்கிறது.
அவர்கள் எல்லாம் இங்கே வந்து பெருமாளை வழிபட்டால் விரைவில் அந்த யோகம் வாய்க்கும். புதன்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி, துளசி தளம் கொண்டு அர்ச்சனை செய்தால், சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விரலி மஞ்சள் மாலை!
இங்கே தாயார் ஆதிலட்சுமியாக அருள்பாலிக்கிறார். மேலிரு திருக்கரங்களில் மலர்களை ஏந்தி, மற்ற இரு கரங்களில் அபய, வரதம் காட்டி, அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் பிராட்டி. உற்சவர் பெருந்தேவித் தாயாரும் அமர்ந்த நிலையிலேயே காட்சி தருகிறார்.
திருமணத் தடை உள்ளவர்கள் 16 செவ்வாய்க்கிழமைகள் கோயிலுக்கு இங்கு வந்து தாயாரைத் தரிசனம் செய்து வழிபட்டால் விரைவில் மணமாலை அமையும். பலருக்கும் 16 வாரங்களுக்குள்ளேயே வரன் அமைந்துவிடும் அதிசயமும் நடக்கிறது.
இந்தப் பிரார்த்தனையைத் தொடங்கு முதல் வாரம் மட்டும் மூன்று மாலைகள் கொண்டு வரவேண்டும். மூன்று மாலைகளையும் அர்ச்சகரிடம் கொடுத்து பெருமாளுக்குச் சமர்ப்பிக்கவேண்டும்.
பிறகு ஒரு மாலையை பெருமாளின் பிரசாதமாகப் பெற்று, கழுத்தில் அணிந்துகொண்டு 12 முறை ஆலயத்தை வலம் வரவேண்டும். தாயார் சந்நிதியில் சங்கல்பம் செய்துகொண்ட பிறகு, விரலி மஞ்சள்களைக் கோத்து மாலை தொடுத்து தாயாருக்கு அணிவிக்கவேண்டும்.

மீண்டும் 16-வது வாரம், மூன்று மாலைகள் வாங்கி வந்து பெருமாளுக்குச் சாத்தி, சங்கல்பத்தைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இப்படி, மனப்பூர்வமாக வேண்டிக்கொள்பவர்களுக்கு விரைவிலேயே திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
திருமணம் நடைபெற்றதும், தம்பதி சமேதராக ஆலயத்துக்கு வந்து, பெருமாளையும் தாயாரையும் வழிபட வேண்டும்.
இந்த ஆலயத்தின் தலவிருட்சம் அரசமரம். இந்த விருட்சத்தின் கீழ் கற்பக ஸ்வரூபிணித் தாயார், நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில், கருக்காக்கும் தாயாராக அருள்புரிகிறார்.
கருவுற்ற பெண்கள், தங்களுக்கு சுகப் பிரசவம் நடைபெறவேண்டும் என்பதற்காக, இந்தத் தாயாரைப் பிரார்த்தித்துக் கொள்கின்றனர். தாயாரின் அருளால் சுகப் பிரசவம் ஆனதும் கோயிலுக்கு வந்து நன்றி செலுத்திச் செல்கின்றனர்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், இங்கு நடைபெறும் தொட்டில் கண்ணன் வழிபாட்டில் கலந்துகொள்வது நல்லது. மழலைச் செல்வம் வேண்டுபவர்கள் ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தான பாக்கியம் வேண்டி நடைபெறும் சங்கல்ப பூஜையில் கலந்து கொள்ளலாம்.
தம்பதிகள் விரதமிருந்து, தொட்டில் கண்ணன், பழங்கள், பூக்கள், அவல், வெண்ணெய், இரண்டு செவ்வாழைகள், சர்க்கரை, வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை வாங்கி வந்து அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அர்ச்சகர் தொட்டில் கண்ணன் மற்றும் அர்ச்சனைப் பொருள்களை சந்தான கண்ணன் திருவடிகளில் வைத்து அர்ச்சனை செய்வார்.
அர்ச்சனை முடிந்ததும் அவர் தரும் தொட்டில் கண்ணனை வாங்கி மடியில் கட்டிக்கொண்டு, அரச மரத்தடியில் உள்ள சந்தான கண்ணனை 27 முறை வலம் வரவேண்டும். பின்னர் தொட்டில் கண்ணனை மரத்தில் கட்டிவிட்டு, பால் பாயசம் நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்க வேண்டும்.
இங்ஙனம், தொடர்ந்து 12 ரோகிணி நட்சத்திர திருநாள்களில் இங்கு வந்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

புத்திக்கூர்மை அருளும் ராமாநுஜர் தரிசனம்
கோயில் பிராகாரத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ராமாநுஜருக்கு வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாத்தி வேண்டிக்கொண்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், கல்வியில் சிறப்பான முறையில் தேர்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு திருவாதிரையன்றும் உடையவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. கோயிலில் வேணுகோபாலன், ஆஞ்சநேயர், ஆண்டாள், விஷ்வக்சேனர், கலியன், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.




















