"அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது உண்மை. ஆனால்..." - சிபிஎம் பொதுச்செயலாளர் ...
சென்னை: வாட்ஸ்அப் காலில் ஆபாச செயல்; ஆதாரத்துடன் புகாரளித்த பெண்ணால் சிக்கிய ஐடி ஊழியர்
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் திருமணமாகி பெண் குழந்தையுடன் சென்னை, எழும்பூரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.
03.05.2026-ம் தேதி மாலை அந்தப் பெண் வீட்டிலிருந்தபோது, அவரின் செல்போனுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து வாட்சப் வீடியோ கால் அழைப்பு வந்திருக்கிறது. தெரியாத நம்பர் என்பதால் அந்தப் பெண், அழைப்பை ஏற்கவில்லை. ஆனால் தொடர்ந்து வீடியோ கால் வந்ததால், மேற்படி பெண் செல்போனை எடுத்தபோது, எதிர்முனையில் ஒரு ஆண் ஆபாச செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
அதைப்பார்த்த அந்தப்பெண் அதிர்ச்சியடைந்ததோடு செல்போன் இணைப்பைத் துண்டித்திருக்கிறார். பின்னர் சில மணி நேரம் கழித்து அதே செல்போன் எண்ணில் இருந்து மீண்டும் வீடியோ கால் அழைப்பு வந்திருக்கிறது.

உடனே உஷாரான அந்தப் பெண் அழைப்பை ஏற்றபோது அதே நபர் ஆபாச செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். உடனே இன்னொரு செல்போன் மூலம் அந்தக் காட்சிகளை வீடியோவாக எடுத்திருக்கிறார் அந்தப் பெண்.
பின்னர், எழும்பூர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் அந்தப் பெண் புகார் கொடுத்ததும் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு எழும்பூர் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (31) என்பவர்தான் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்ததோடு அவரின் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன், சென்னை மந்தைவெளியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்வது தெரியவந்தது. மேலும் எழும்பூர் பகுதியில் அவர் தங்கியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. மணிகண்டனின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

















