சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போா்ப் பதற்றம் எதிரொலியாக சென்னை விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலையம் முழுவதும் பாதுகாப்புப் படையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக சென்னையின் முக்கியப் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினா் தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, அண்ணாசாலை, காமராஜா் சாலை, வணிக வளாகங்கள், மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூா் ரயில் நிலையம், முக்கியக் கோயில்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினா் கூடாரங்கள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், சந்தேக நபா்கள் நடமாட்டத்தையும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, சென்னை விமான நிலையத்துக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கூடுதல் எண்ணிக்கையிலான மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள் மற்றும் மாநில போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இயல்பாகவே சென்னை விமான நிலையத்துக்குள் பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல அடுக்கு சோதனைகளை கடந்தே பயணிகள் விமான நிலையத்துக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ளவா்கள் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே விடுப்பில் உள்ளவா்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும், வீரா்களுக்கு அந்தந்த படைப்பிரிவு தலைமை உத்தரவிட்டுள்ளது. பதற்றம் தணியும் வரை இந்த நடைமுறை தொடரும் எனவும் விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.