நாடாளுமன்ற வளாகத்துக்கு நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் - சர்ச்சையின் பின...
சென்னை: வெளுத்து வாங்கிய கனமழை; நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு கிழக்கே 40 கிமீ தூரத்தில் நீண்டநேரம் நிலைகொண்டிருக்கிறது. இதன் காரணமாக வட தமிழக பகுதிகளில் குறிப்பாக சென்னையில் கடந்த 10 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. அடுத்த 24 மணி நேரம் இந்த நிலைத் தொடரும் எனக் கூறப்படுகிறது.
இதனால் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சில இடங்களில் மழை அதீதமாக இருக்கலாம் என்றும் தனியார் வானிலை ஆர்வலர்கள் கணித்திருக்கின்றனர்.
2015ம் ஆண்டு போல பெருவெள்ளம் வரும் சூழல் ஏற்படாது எனக் கூறப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (டிச. 1) வழக்கம்போல பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டதால் மாணவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (02.12.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai: வெளுத்து வாங்கும் மழை
சென்னையில் அதிகபட்சமாக இன்று (01.12.2025) எண்ணூரில் 19 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. அதேபோல மணலி வார்டு 18ல் 16 செ.மீ மழையும், பாரிஸில் 15 செ.மீ மழையும், ஐஸ் ஹவுஸில் 14 செ.மீ அளவிற்கு மழையும், விம்கோ நகரில் 13 செ.மீ அளவிற்கு மிக கனமழையும், வடபழனியில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.
பேசின் பிரிட்ஜ், சாலிகிராமம் மற்றும் மேடவாக்கத்தில் 12 செ.மீ அளவிற்கு மழை பொழிவும், காசிமேட்டில் 11 செ.மீ அளவிற்கு மழையும், நுங்கம்பாக்கம் மற்றும் சைதாபேட்டையில் 10.5 செ.மீ அளவிற்கு மழைப்பொழிவும், தண்டையார்பேட்டையில் 10.4 செ.மீ மழைப்பொழிவும் பதிவாகியிருக்கிறது.
நெற்குன்றம், புழல், அமைந்தகரை மற்றும் வளசரவாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. பிற இடங்களில் 10 செ.மீ-க்கும் குறைவான மழை பதிவாகியிருக்கிறது.
தொடர்ந்து சென்னையில் மணிக்கு 5 முதல் 15 மிமீ மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.















