அமெரிக்கா - ஈரான் போர் விவகாரம்: ``இதுதான் இந்தியாவின் நிலைபாடு" - அமைச்சர் ஜெய...
T20 WC: இந்திய தேசத்தின் சொத்து; எதிரணியினருக்கு சிம்ம சொப்பனம் - பும்ரா ஒரு தலைமுறைக்கான பௌலரே!
2024 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் விராட் கோலி பும்ராவை ‘இந்திய நாட்டின் சொத்து’ என்று பாராட்டி இருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து அதே வார்த்தைகளில் மீண்டும் பும்ராவை ஏகத்துக்கும் புகழ்ந்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
2024 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தத்தளித்தபோது, ‘பும்ரா இருக்கார்... பார்த்துப்பார்’ என்ற ஒற்றை நம்பிக்கைதான் கோப்பையை வென்று தந்தது.

எதிரணியின் நம்பிக்கையை சிதைத்த பும்ரா
அன்று பார்படாஸில் தென்னாப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய ரசிகர்களின் கண்கள் கலங்கத் தொடங்கின. அப்போது பந்து பும்ராவிடம் வந்தது.
அந்த 16-வது மற்றும் 18-வது ஓவர்களில் வெறும் ரன்களை கட்டுப்படுத்தி எக்கனாமிக்கலாக மட்டும் வீசவில்லை, பும்ரா எதிரணியின் நம்பிக்கையையே சிதைத்திருந்தார்.
இந்திய தேசத்தின் சொத்து
போட்டி முடிந்ததும் மேடையில் விராட் கோலி, "பும்ரா ஒரு விசித்திரமான கலைஞர். அவர் மட்டும் இல்லையென்றால், இந்த உலகக்கோப்பை இன்று நம் கையில் இருந்திருக்காது. அவர் இந்திய தேசத்தின் சொத்து" என்று பாராட்டினார்.
சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து, 2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் அதே காட்சி அரங்கேறியது.

வீசிய முதல் பந்திலேயே விக்கெட்
நியூசிலாந்து சார்பில் டிம் சீபர்ட் அதிரடியை தொடங்கி பவர்ப்ளேயை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், பும்ராவுக்கு ஓவரை கொடுத்தார் சூர்யா. வீசிய முதல் பந்திலேயே விக்கெட்.
அப்போதுதான் களத்திற்குள் வந்திருந்த ரச்சினை தனது முதல் பந்திலேயே வீழ்த்தியிருந்தார். நியூசிலாந்தின் வீழ்ச்சி அங்கிருந்து தொடங்கியது. மொத்தமாக 4 ஓவர்களை வீசிய பும்ரா 15 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அத்தனை விஷயங்களும் அத்துப்படி
குஜராத், பும்ரா பிறந்து வளர்ந்த ஊர். அங்கே அவருக்கு அத்தனை விஷயங்களும் அத்துப்படி. வேகமான டெலிவரிக்களை வீசாமல் ஸ்லோவாக யார்க்கிங் லெந்தில் வீசி விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
`இப்படி வீசினால்தான் விக்கெட் எடுக்க முடியும் என எனக்கு தெரியும்' என போட்டிக்குப் பிறகு அத்தனை தெளிவாகப் பேசியிருந்தார்.
இறுதிப்போட்டி மட்டுமல்ல, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற காரணமாக இருந்த அரையிறுதி போட்டியிலும் 16 மற்றும் 18 வது ஓவரை வீசியிருப்பார்.

ஒரு தலைமுறைக்கான பௌலரே!
பெத்தேல் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அந்த வேளையில் ஒரு ஓவரில் 8 ரன்களையும் இன்னொரு ஓவரில் 6 ரன்களையும் மட்டுமே கொடுத்திருந்தார். பும்ரா இந்திய அணிக்கு அறிமுகமாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இன்னமும் எதிரணியினருக்கு அவர் மீதான மிரட்சி போகவில்லை. பும்ராவின் மேஜிக்கும் தீரவில்லை. இன்றைக்கும் பேட்டர்கள் எதிரில் பும்ரா ஓடிவருவதைப் பார்த்தால் கொஞ்சம் நடுங்கவே செய்கின்றனர். அதுதான் பும்ரா. சூர்யா சொல்வதைப் போல பும்ரா ஒரு தலைமுறைக்கான பௌலரே!

















