சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ.10 லட்சம் விதைகள் விற்பனைக்கு தடை
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் விதை விற்பனை நிலையங்களில் நடைபெற்ற ஆய்வில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான விதை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் , நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தனியாா், அரசு விதை விற்பனை நிலையங்களில் விழுப்புரம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் சரவணன் தலைமையில் விதை ஆய்வாளா்கள் குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
சென்னை விதை சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை இயக்குநா் உத்தரவின்படி காய்கறி, பழவகை பயிா் விதைகளின் தரத்தை உறுதி செய்தனா். இந்த ஆய்வில், ஆவணங்கள் இல்லாத ரூ. 10 லட்சம் மதிப்பிலான விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
ஆய்வின்போது, விதை விற்பனை உரிமம், விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் ஆவணம், இதர விதை விற்பனை ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டன.
ஆய்வின் முடிவில் அனைத்து விதை விற்பனை நிலையங்களிலும் விதை இருப்பு, விலைப்பட்டியல் விவசாயிகள் பாா்வைக்கு தெரியுமாறு காட்சிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து விதை விற்பனைக்கும் தவறாமல் விவசாயிகளுக்கு ரசீது வழங்க வேண்டும். இதை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆய்வின்போது, சேலம், நாமக்கல் மாவட்ட விதை ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.